சாதனை இணைப்பாட்டங்களின் ஜாம்பவான் மஹேல

146

இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆடி 537 ஓட்டங்களிற்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாம் நாளின் இறுதி பகுதியில் இலங்கை அணி தமது முதலாம் இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்தது. 537 ஓட்டங்களை தாண்டி இந்தியாவை விட பல ஓட்டங்கள் வித்தியாசத்தில் இருந்தால்தான் போட்டியை உயிர்ப்புடன் வைத்துகொள்ள முடியும் அல்லது இலங்கை அணிக்கு இன்னிங்ஸ் தோல்வியை தழுவ வேண்டிய நிலை ஏற்படும்.  

இந்தியா அன்றைய நாள்  டெஸ்ட் கிரிக்கெட்டின் அதியுயர் ஓட்ட இலக்கிற்கான (உலக சாதனை)  பிள்ளையார் சுழியை தம்மை அறியாமலேயே 1997 ஆம் ஆண்டு போட்டு வைத்திருந்தனர். 

ஆஸி. அணியை வாயடைக்க வைத்த மாலிங்க, மெதிவ்ஸ்

இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் பல வரலாற்று…

இந்தியாவை விட முன்னிலை வகிக்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன் களம் இறங்கிய சனத் ஜயசூரிய மற்றும் ரொஷான் மஹானாம ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை ஓட விட்டார்கள். இலங்கை அணி 790 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் தனது முதலாவது சர்வதேச போட்டியான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆட களம் நுழைகிறார் மஹேல ஜயவர்தன.  

உலக சாதனை ஒன்றின் பங்காளனாக தாம் இருக்கப்போகிறோம் என அறியாமல் அவர் மைதானம் நுழைந்திருந்தார். அன்றைய தினம் 66 ஓட்டங்களை பெற்று சிரேஷ்ட வீரர் அரவிந்த டி சில்வாவுடன் 131 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற உதவினார் மஹேல. தனது முதலாவது போட்டியிலேயே 100+ ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற மஹேல பின்னைய நாட்களில் உலகின் தலைசிறந்த ஒரு துடுப்பாட்ட வீரனாக தோற்றம்பெற இருக்கிறார் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.  

குறித்த போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 952 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்தது. தனது கன்னிப் போட்டியில் இவ்வாறு உலக சாதனைக்கு பங்காற்றுவேன் என்று மஹேல கனவிலும் நினைத்திருக்க மாட்டார். 

தனது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்விலும் சங்காவுடன் இணைந்து  13,368 ஓட்டங்களை 47.7 எனும் சராசரியில் இணைப்பாட்டமாக பெற்று சாதனை படைத்திருக்கிறார் மஹேல. இதனுள் 36 சத இணைப்பாட்டங்களும் அடங்கும். துடுப்பாட்டத்தில் இவ்வாறான ஒரு சாதனை சற்று வித்தியாசமானதே. இணைப்பாட்டங்கள் நிகழ இரண்டு துடுப்பாட்ட வீரர்களிற்குமிடையில் சரியான புரிந்துணர்வு இருத்தல் வேண்டும். இந்த பண்பு மஹேலவிடம் அதிகம்  காணப்பட்டது. அதனாலேயே மஹேல பல வீரர்களுடன் பல சிறந்த இணைப்பாட்டங்களை நிகழ்த்தினார். 

டெஸ்ட் போட்டியில் அணி ஒன்றின் அதியுயர் ஓட்ட இலக்கிற்கான உலக சாதனையில் பங்குதாரியாக இருக்கும்  மஹேல, பின்னைய நாட்களில் உலகின் அதிகூடிய இணைப்பாட்ட சாதனையிலும் பங்குதாரராக மாற்றம் பெற்றார். 

கடந்த 2006ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணி இலங்கைக்கு மேற்கொண்ட கிரிக்கெட் சுற்றுதொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் விருந்தாளி அணியினர்  தமது முதல் இன்னிங்ஸில் 169 ஓட்டங்களிற்கு சுருண்டது. பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸில் ஆடிய இலங்கை முதல் இரு விக்கெட்டுக்களையும் குறுகிய இடைவெளியில் வேகமாக இழந்தது. 

இதனால், மஹேல – சங்கக்கார ஜோடி போட்டியின் முதலாம் நாளே ஆட ஆரம்பித்தார்கள். இரண்டு நாட்கள் தென்னாபிரிக்காவின் பந்துவீச்சாளர்களாலும் களத்தடுப்பாளர்களாலும் வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது.இந்த ஜோடியினால் 624 எனும் இமாலய இணைப்பாட்ட ஓட்டங்கள் பெறப்பட்டன. SSC மைதானம் பட்டாசுகளால் சின்னாபின்னமாகியது. 

இவ்விணைப்பாட்ட சாதனை பட்டாசுகளின் சப்தத்துடன் தொலைக்காட்சி மூலமாக உலகமெங்கும் ஒளித்தோய்ந்தது. மீண்டும் அதே தொகையான பட்டாசுகள் லோட் செய்யப்பட்டன. 400 ஓட்டங்கள் எனும் இலக்கை மஹேல எட்டிப் பிடிப்பாரா எனும் கேள்வி தான் அன்று உலகெமங்கும் உள்ள கிரிகெட் ரசிகர்களின் மனங்களில் அலைமோதியிருக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தனது அதியுயர் ஓட்ட எண்ணிக்கையான 374 ஓட்டங்களுடன்  ஆட்டமிழந்தார் மஹேல.

இவ்வாறு மஹேல ஆடிய 149 டெஸ்ட் போட்டிகளில்  114 போட்டிகளில்  ஐம்பதிற்கு அதிகமான ஓட்டங்களை இணைப்பாட்டமாக  நிகழ்த்தினார்.  மூன்று முறை அல்லது அதற்கு அதிகமான முறை ஐம்பதிற்கு அதிகமான  இணைப்பாட்ட ஓட்டங்களை  ஒரே இன்னிங்ஸில் பெற்ற  போட்டிகளின் எண்ணிக்கை 15 ஆகும். 46 முறை நூறிற்கு அதிகமான  இணைப்பாட்டங்களையும், 22 முறை 150 இற்கு அதிகமான  இணைப்பாட்டங்களையும், 3 முறை 200 இற்கு அதிகமான  இணைப்பாட்டங்களையும், 2 முறை 300 இற்கு அதிகமான இணைப்பாட்டங்களையும் 400+ மற்றும் 600+ இணைப்பாட்டங்களை தலா ஒவ்வொரு முறையும் பெற பங்களித்தார் மஹேல! ஒட்டுமொத்தமாக 171 முறை 50+ இணைப்பாட்டங்களை கடந்துள்ளார். 600 ஓட்டங்கள் எனும் இணைப்பாட்டத்தை கடந்த முதல் ஜோடி மஹேல சங்கா ஜோடி மாத்திரமே.  

Catch me if you can: முத்தையா முரளிதரன்

கிரிகெட்டின் உயரிய அங்கீகாரமான ஐசிசி Hall of Fame இனுள் உள்வாங்கப்பட்ட முதல…

அதேபோன்று, இவர் 50+ ஓட்ட இணைப்பாட்டங்களை பெற்ற 114 போட்டிகளில் 50 போட்டிகளை இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. 

இவ்வாறு வெற்றிபெற்ற போட்டிகளில் மிஹேலவின் கிரிகெட் வாழ்வில் முதலிடத்தில் இருக்கும் சிறந்த இன்னிங்ஸ் தென்னாபிரிக்காவுடன் 2006 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.  

மஹேல – சங்கா ஜோடி 624 ஓட்ட இணைப்பாட்டத்தினை பெற்ற சுற்றுதொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணியினால் இலங்கை அணிக்கு 352 ஓட்டங்கள் இலக்காக வழங்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸை நான்காம்  ஐந்தாம் நாட்களில் ஆடுகளம் மெல்ல மெல்ல கடினமானதாக மாறும் வேளையில்   தொடங்கிய இலங்கை அணி 201 ஓட்டங்களிற்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தோல்வியின் விளிம்பில் தத்தளித்தது. அணி வெற்றிபெற வேண்டுமானால் மஹேல சிறந்ததொரு இன்னிங்ஸினை வழங்க வேண்டும். 

அணி எதிர்பார்ரத்தபடியே மஹேல 123 ஓட்டங்களை பெற்றார். இதன்போது அவர் நான்கு இணைப்பாட்டங்களை தோற்றுவித்தார். எதிர் முனையில் ஆடிய வீரர்கள் ஆட்டமிழந்து அரங்கு திரும்ப புதிதாக மைதானம் நுழையும் வீரர்களுடன் இணைந்து இணைப்பாட்டங்களை தோற்றுவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 

இப்போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றது. முதல் போட்டியில் வரலாற்று சாதனை படைக்க காரணமாக அமைந்த 374 ஓட்டங்களை விட இப்போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸில் பெற்ற  123 ஓட்டங்கள் தான் சிறந்தவை என பல கிரிகெட் வர்ணனையாளர்களும் கிரிகெட் விமர்சகர்களும் கூறினர். 

டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய இலக்குகளை இலங்கை அணி நிர்ணயித்த போட்டிகளில் மஹேல ஏனைய வீரர்களுடன் இணைந்து பெற்ற இணைப்பாட்டங்கள் அவ்இலக்குகளை அடைய பெரிதும் உதவின. 

இந்தியாவுடன் 962 எனும் ஓட்ட இலக்கை அடைந்தபோது 131 எனும் இணைப்பாட்டமும், பாகிஸ்தானுடன் 644 எனும் இலக்கை அடைந்தபோது 437 உம், இந்தியாவுடன் 760 இலக்கை அடைந்தபோது 351, 138 மற்றும் தென்னாபிரிக்காவுடன் 756 இலக்கை அடையும்போது 113, பங்களாதேஷ் அணியுடன் 730 ஐ அடையும்போது 72, 179, 176 உம் என  தனது பங்களிப்பை இணைப்பாட்டங்களின் மூலம்  வழங்கினார். 

இலங்கை அணியின் மூன்றாம், நான்காம், ஆறாம் மற்றும் எட்டாம் விக்கெட்டிற்கான இணைப்பாட்ட சாதனையினையும் மஹேலவே கொண்டுள்ளார்.இவை  எதிர் முனையில் வேறு வேறான நான்கு வீரர்களுடன் உதவியுடன். இந்த சாதனைகள், அடைவுகள் எல்லாம் மஹேல இலங்கை அணியின் பிரதான துடுப்பாட்ட வீரராக இருந்து பெற்றவை. 

ஆனால் மஹேல இளம் வீரராக நிகழ்த்திய முக்கியமானதொரு சாதனை 1998 இல் நிகழ்ந்தது. 1998 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு போட்டியில் நியூசிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 193 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸை  ஆரம்பித்தது.

இலங்கை அணியில் யாருமே சரியான பங்களிப்பை வழங்கவில்லை. 1998 களில் மஹேல பிரதானமுக்கியமான வீரரும் அல்ல. சனத்அத்தபத்து, அரவிந்த டி சில்வா, ரனதுங்க, ஹஷான் திலகரட்ன என பெரும் பெரும் வீரர்கள் ஆடிய காலமது. ஆனால் யாருமே அப்போட்டியில் சரியான பங்களிப்பை வழங்கவில்லை. 

இந்திய வீரர்களுக்கு பயிற்றுவிக்க தயார் என்கிறார் சொஹைப் அக்தார்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு பயிற்றுவிப்பாளராக செயற்படும் வாய்ப்பு…

ஆனால், மஹேல இளம் வீரராக களத்தில் நின்று தனது சிரேஷ்ட வீரர்களுடன் இணைந்து ஆறு இணைப்பாட்டங்களை தோற்றுவித்தார். இவ்இணைப்பாட்டங்கள் ஒட்டுமொத்தமாக 257 ஓட்டங்களை அணிக்கு பெற்றுகொடுத்தன. அணியின் மொத்த ஓட்ட இலக்கு 323 என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்போது மிஹேல 167 ஓட்டங்களை பெற்றார். இவ்வின்னிங்ஸில் வேறு எந்த வீரர்களுமே 50 ஓட்டங்களை தாண்டவில்லை என்பதும் குறிப்பிட்டே ஆகவேண்டிய ஒன்றாகும். மஹேலவின் கிரிகெட் வாழ்வில் இது மிக முக்கியமான, விசேடமான ஒரு இன்னிங்ஸ். தனது சிரேஷ்ட வீரர்கள் முன்னிலையில் தன்னுடைய திறமையைதரத்தை காட்டினார் மிஹேல! 

இவ்வாறு மஹேல பல இணைப்பாட்டங்களை தோற்றுவித்தார். அவற்றுள் சில அதிகூடிய ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற துடுப்பாட்ட ஜோடிகளின் பட்டியலில் இடம்பிடித்தன. 

மஹேல – சங்கா இணைப்பாட்டம் 6,554 ஓட்டங்களை 56.51 எனும் சராசரியிலும், மஹேல – சமரவீர இணைப்பாட்டம் 3,247 ஓட்டங்களை 61.26 எனும் சராசரியிலும், மஹேல  -அத்தபத்து இணைப்பாட்டம் 2,025 ஓட்டங்களை 57.85 எனும் சராசரியிலும் பெற்றன. இந்த மூன்றும் அப்பட்டியலில் இடம்பெறுபவை.

மூன்றாம் விக்கெட்டிற்கான அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்களிற்கான சாதனையும் மஹேலவின் கைவசம் தான். மஹேல – சங்கா ஜோடி 5890 ஓட்டங்களை மூன்றாம் விக்கெட்டிற்காக பெற்றுள்ளனர். 

மஹேலவின் பல துடுப்பாட்ட சாதனைகளுள் மிகவும் முக்கியமானவை இந்த இணைப்பாட்ட சாதனைகள். மஹேல நிகழ்த்திய இன்னும் பல துடுப்பாட்ட சாதனைகளை அடுத்த ஆக்கங்களில் பார்க்கலாம். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<