அலெஸ்டயார் குக்கின் மனம் கவர்ந்த வீரர்கள் பட்டியலில் சங்கக்கார

68

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தலைசிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரருமான அலெஸ்டயார் குக், தான் விளையாடிய காலத்தின் தலைசிறந்த ஐந்து துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரவை தேர்வு செய்துள்ளார். 

சர்ரே கழகத்தின் அதிசிறந்த வெளிநாட்டு வீரராக சங்கக்கார தெரிவு

இங்கிலாந்து அணியின் தலைசிறந்த இடதுகை துடுப்பாட்ட வீரரான அலெஸ்டயார் குக் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தொடக்கூடியவராக இருந்தார். ஆனால் 2018ஆம் ஆண்டுடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். 

இங்கிலாந்து அணிக்காக 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12472 ஓட்டங்களைக் குவித்துள்ள அவரது சராசரி 45.4 ஆகும். இதில் 33 சதங்கள், 57 அரைச்சதங்கள் அடங்கும். 

இந்த நிலையில், இவர் விளையாடிய காலத்தின் தலைசிறந்த ஐந்து துடுப்பபாட்ட வீரர்களை தேர்வு செய்துள்ளார். அதில் தற்போதைய இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரவுக்கு இடம்கொடுத்துள்ளார்

இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிகையுடன் நடைபெற்ற கேள்விபதில் கலந்துரையாடலில் பங்கேற்று அவர் பேசினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு மிகுந்த உற்சாகத்துடன் பதிலளித்தார்

இதில் அனைத்து காலகட்டங்களிலும் சிறப்பான 5 துடுப்பாட்ட வீரர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த குக், மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரரான பிரையன் லாராவை முதல் வீரராக தெரிவித்துள்ளார்.  

இதன்போது டெஸ்ட் போட்டியில் 400 ஓட்டங்களைக் குவித்துள்ள ஒரே வீரர் லாரா என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். லாரா ஓய்வு பெற்றபோது, 131 டெஸ்ட் போட்டிகளில் 11,953 ஓட்டங்களையும் 299 ஒருநாள் போட்டிகளில் 10,405 ஓட்டங்களையும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004இல் நடைபெற்ற எம்.சி.சிமேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான தொடரின் முதல் போட்டி அருண்டெல்லில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரரான பிரையன் லாரா, மதிய உணவு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளைக்கு இடையில் சதத்தை அடித்து அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியதை நினைவு கூர்ந்த குக், இந்த சாதனைக்கு தான் சாட்சியானதையும் வெளிப்படுத்தினார்

மேற்கிந்திய தீவுகள் தொடர் நடைபெற வேண்டும் என்கிறார் ஜோ ரூட்

மேலும், அனைத்து காலகட்டத்திலும் சிறப்பான ஐந்து கிரிக்கெட வீரர்களில் லாராவிற்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங், தென்னாப்பிரிக்காவின் ஜெக் கெலிஸ், இலங்கையின் குமார் சங்கக்காரா மற்றும் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லியையும் பட்டியலிட்ட குக், கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக ஓட்டங்களை குவித்து வருபவர் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி என்றும் தெரிவித்துள்ளார்

59 போட்டிகளில் இங்கிலாந்து அணியின் தலைவராக செயற்பட்டுள்ள அலெஸ்டயார் குக், ரிக்கி பொண்டிங், ஜெக் கெலிஸ் மற்றும் குமார் சங்கக்கார ஆகிய மூன்று பேருடன் நெருங்கி விளையாடிய அனுபவம் தனக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<