வட மாகாண அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்துள்ள மேல் மாகாண அணி

704
U23 Provincial

23 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடரின், நான்கு போட்டிகள் வெவ்வேறு கிரிக்கெட் மைதானங்களில் இன்று (11) ஆரம்பமாகின. மேல் மாகாண தெற்கு அணி சார்பாக சரண நாணயக்கார 7 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்த அதேவேளை தென் மாகாண அணி சார்பாக சரித் அசலங்கவும் மேல் மாகாண மத்திய அணி சார்பாக இமாஷ லியனகேவும் சதம் விளாசியிருந்தனர்.  

மேல் மாகாணம் (தெற்கு) எதிர் மேல் மாகாணம் (வடக்கு)

கொழும்பு பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேல் மாகாணம் வடக்கு அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. மேல் மாகாண வடக்கு அணி சார்பாக சரண நாணயக்கார அதிரடியாக பந்துவீசி 22 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, மேல் மாகாண தெற்கு அணியின் சகல விக்கெட்டுகளையும் 15.2 ஓவர்களில் வெறும் 39 ஓட்டங்களுக்கு வீழ்த்த பெரும் பங்காற்றினார்.

பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய மேல் மாகாண வடக்கு அணி சஹன் ஆராச்சிகே பெற்றுகொண்ட 41 ஓட்டங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை, 116 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

30 ஆண்டுகளில் இலங்கை சந்தித்த மோசமான தோல்வி

116 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த மேல் மாகாண தெற்கு அணி இன்றைய நாள் ஆட்ட நிறைவின் போது 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்கு மேலும் 58 ஓட்டங்களை பெறவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

மேல் மாகாணம் தெற்கு (முதல் இன்னிங்ஸ்) – 39 (15.2) – சரண நாணயக்கார 7/22, பினுர பெர்னாண்டோ 3/17

மேல் மாகாணம் வடக்கு (முதல் இன்னிங்ஸ்) – 155 (53.3) – சஹன் ஆராச்சிகே 41, சலிந்த உஷான் 25, பினுர பெர்னாண்டோ 24, நிஷான் பீரிஸ் 22, மிஷென் சில்வா 4/41, சந்தகன் பத்திரண 3/54, லக்ஷித மனசிங்க 2/12

மேல் மாகாணம் தெற்கு (இரண்டாம் இன்னிங்ஸ்) – 58/4 (21) – ரஷ்மித ஓபாதா 20


தென் மாகாணம் எதிர் கிழக்கு மாகாணம்

அம்பந்தோட்டை மகிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் மாகாண அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் அவ்வணி சார்பாக சரித் அசலங்க பெறுமதிமிக்க சதம் ஒன்றினை பதிவு செய்தார்.

அத்துடன் பசிந்து இசிர, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் சிதார கிம்ஹான அரைச் சதம் கடந்த அதேவேளை அதீஷ திலஞ்சன ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களை அணி சார்பாக பங்களிப்பு செய்தார். இறுதியில் தென் மாகாண அணி 89 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 350 ஓட்டங்களை பதிவு செய்திருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திகொண்டது.

பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய கிழக்கு மாகாண அணி இன்றைய நாள் நிறைவின் போது ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 19 ஓட்டங்களைப் பதிவு செய்தது.

போட்டியின் சுருக்கம்

தென் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 350/5d (89) – சரித் அசலங்க 113, பசிந்து இசிர 56, ரமேஷ் மெண்டிஸ் 54, சிதார கிம்ஹான 50, அதீஷ திலஞ்சன 43*

கிழக்கு மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 19/1 (6)


மத்திய மாகாணம் எதிர் வடமேல் மாகாணம்

கொழும்பு BRC மைதானத்தில் ஆரம்பித்த இந்தப் போட்டியில், முதலில் துடுப்பாடக் களமிறங்கிய மத்திய மாகாண அணி 33.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களைப் பதிவு செய்தது. சிறப்பாக துடுப்பாடிய சனோகித் சண்முகநாதன் ஆகக்கூடிய ஓட்டங்களாக 36 ஓட்டங்களைப் பதிவு செய்தார். அதேநேரம், மத்திய மாகாண அணியின் ஓட்டங்களைக் கட்டுப்படுத்திய தரிந்து ரத்நாயக்க 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர்ந்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய வடமேல் மாகாண அணி 34.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை பதிவு செய்ததுடன் 25 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

எனது கிரிக்கெட் வாழ்வில் மோசமான தருணம் இது : மெதிவ்ஸ்

வடமேல் மாகாண அணி சார்பாக சிறப்பாகத் துடுப்பாடிய மினோத் பானுக்க 72 ஓட்டங்களை கூடிய ஓட்டங்களாகப் பதிவு செய்தார். அதேநேரம், மத்திய மாகாண அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய மொஹமட் ஷிராஸ் 45 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த மத்திய மாகாண அணி இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவின் போது, நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ஓட்டங்களை பதிவு செய்துள்ளதோடு 97 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

மத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 114 (33.2) – சனோகித் சண்முகநாதன் 36, ரொன் சந்திரகுப்தா 32, தரிந்து ரத்நாயக்க 4/23, செஹான் மதுஷங்க 3/41,  அரவிந்த அக்குருகொட 2/12

வடமேல் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 139 (34.5) – மினோத் பானுக்க 72, அரவிந்த அக்குருகொட 23, மொஹமட் ஷிராஸ் 6/45, பிரமொதய அபயகோன் 3/12

மத்திய மாகாணம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 112/4 (23) – டிலான் ஜயலத் 63, செஹான் மதுஷங்க 2/30


வட மாகாணம் எதிர் மேல் மாகாணம் (மத்திய)

கொழும்பு சோனகர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தபோட்டியில்,  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேல் மாகாண மத்திய அணி முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது. அந்த வகையில், முதலில் துடுப்பாடிய வட மாகாண அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களைப் பதிவு செய்தது.

அவ்வணி சார்பாக ரெவன் கெல்லி கூடிய ஓட்டங்களாக 39 ஓட்டங்களை பதிவு செய்திருந்த நிலையில், மேல் மாகாண மத்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஜனித் லியனகே 38 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதனையடுத்து, துடுப்பாடக் களமிறங்கிய மேல் மாகாண மத்திய அணி, இமாஷ லியனகே ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 120 ஓட்டங்களின் உதவியுடன் இன்றைய நாள் நிறைவின் போது மூன்று விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று 39 ஓட்டங்களால் முன்னிலை பெற்று வலுவான நிலையிலுள்ளது.    

போட்டியின் சுருக்கம்

வட மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 166 (49.4) – ரெவன் கெல்லி 39, சலித் பெர்னாண்டோ 30, தருஷ பெர்னாண்டோ 30, ஜனித் லியனகே 3/38, சஹன் நாணயக்கார 2/15, மானெல்கர் டி சில்வா 2/15, லசித் எம்புல்தெனிய 2/38

மேல் மாகாணம் மத்திய (முதல் இன்னிங்ஸ்) – 205/3 (41) – இமாஷ லியனகே 120*, அகில் இன்ஹாம் 30, ஜனித் லியனகே 28*

நாளை போட்டிகளின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.