எனது கிரிக்கெட் வாழ்வில் மோசமான தருணம் இது : மெதிவ்ஸ்

2472

ஜிம்பாப்வேக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் பெற்ற தோல்வியானது, தனது கிரிக்கெட் வாழ்வில் மோசமான தருணங்களில் ஒன்று என இலங்கை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடந்த ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியில் 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய, தரவரிசையில் 11 ஆவது இடத்தில் இருக்கும் ஜிம்பாப்வே அணி, இலங்கை மண்ணில் தனது முதலாவது ஒருநாள் தொடர் வெற்றியையும் சுவீகரித்தது.

உலகை இலங்கையின் பக்கம் திரும்ப வைத்த ஜிம்பாப்வேயின் வரலாற்று வெற்றி

இதுவரை இலங்கை அணியுடன் ஐந்து ஒரு நாள் போட்டித் தொடர்களை எதிர்கொண்டுள்ள..

கடைசியாக ஜிம்பாப்வே அணி வெளிநாட்டு மண்ணில் 2009 ஆம் ஆண்டிலேயே இருதரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் வென்றிருந்தது. கென்யாவுக்கு எதிரான அந்த போட்டியை ஜிம்பாப்வே 5-0 என வென்றது.  

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த மெதிவ்ஸ், இது எனது கிரிக்கெட் வாழ்வில் மோசமான தருணங்களில் ஒன்று. இதனை ஏற்பதற்கு கடினமாக உள்ளது. நாணய சுழற்சி தொடக்கம் ஆடுகளத்தை தவறாக கருதுவது வரை எல்லாம் எமக்கு எதிராக இருந்தது. ஆட்ட முடிவில் அவர்களை வீழ்த்த நாம் சிறந்த நிலையில் இல்லை என்பதால் எந்த நியாயங்களும் கூற முடியாது. அவர்கள் சிறந்த முறையில் ஆடினார்கள்” என்று கூறினார்.

இலங்கை அணியின் அண்மைய தோல்விகளை கொண்டு மெதிவ்சின் தலைமைப் பதவி குறித்து ரசிகர்களிடம் பரந்த அளவிலாக கருத்துகள் எழுந்துள்ளன. எனினும் 30 வயதான மெதிவ்ஸ் தோல்விக்கு பின்னர் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து தெரிவிக்கும்போது, “நான் எது பற்றியும் இப்போது நினைக்கவில்லை. இன்னும் கால அவகாசம் உள்ளது. நான் இன்னும் சற்று சிந்தித்து, தேர்வாளர்களுடன் கலந்துரையாடுவேன்! நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்றார்.

இலங்கை அணி தனது ஆட்ட திறமையில் சீரற்ற தன்மையை வெளிக்காட்டி வருவதே மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்த இலங்கை பங்களாதேஷுக்கு எதிரான தொடரை சமன் செய்ததோடு ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியாவை வீழ்த்தியது.  இவ்வாறான ஒரு நிலையில் சொந்த மண்ணில் ஜிம்பாப்வேயிடம் தொடர் தோல்வியை பெற்றுள்ளது. இதுவே இலங்கை அணி மூன்று வகை போட்டிகளிலும் ஐ.சி.சி தரவரிசையில் பின்தள்ளப்பட காரணமாகும் (டெஸ்டில் 7 ஆவது இடம், ஒருநாள் போட்டியில் 8 ஆவது இடம், T-20 யில் 8 ஆவது இடம்).

“நாம் ஸ்திரமாக இல்லை. நாம் சிறப்பாக சோபிக்கும் அணியாக வந்து பின்னர் முழுமையாக தோற்றுவிட்டு, மீண்டும் சிறப்பாக சோபிக்கிறோம். தரவரிசைகள் எமது மனதில் இருந்தபோதும் நாம் சிறப்பாக விளையாட வேண்டும். நாம் ஸ்திரமாக இல்லை.” என்று மெதிவ்ஸ் மேலும் குறிப்பிட்டார்.

சுழற்பந்துக்கு அதிக சாதகம் கொண்ட ஆடுகளத்தில் இலங்கை அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. நுவன் குலசேகர 3 ஓவர்கள் மாத்திரமே வீசினார். லக்ஷான் சன்தகன் விளையாடி இருந்தால் இலங்கை அணியின் ஓட்டத்தை பாதுகாக்க அகில தனன்ஜயவுக்கு உதவியாக இருந்திருக்கும்.

இது குறித்து தெரிவித்த அணித் தலைவர், ‘அடுத்த சுழற்பந்து வீச்சாளருடன் (சன்தகன்) விளையாடி இருந்தாலும் இதே நிலைமை தான் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. கடைசிப் போட்டியில் கூட சுழற்பந்துக்கு சாதகமாக இருந்த போதும் எமது சுழற்பந்து வீச்சாளர்கள் சோபிக்கவில்லை. இன்று அகில தனன்ஜய சிறப்பாக விளையாடியதாக நான் கருதுகிறேன். ஆடுகளத்தை தவறாக கணித்தது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதோடு நாணய சுழற்சியும் தீர்க்கமானதாக இருந்ததுஎன்றார்.

மெதிவ்சின் தலைமைப் பதவியின் நீடிப்பில் சந்தேகம்

இலங்கை அணியை கடந்த சில வருடங்களாக தலைமை தாங்கி வரும் அஞ்சலோ மெதிவ்ஸ்….

ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளிடம் தோற்ற அணி ஒன்றினால் வீழ்த்தப்பட்டிருக்கும் இலங்கை, தற்போது தனது மோசமான ஆட்டத்திறனை நோக்கி செல்கிறது. ஜிம்பாப்வேயிடம் 2-3 என தோற்கும் முன் கடந்த ஆண்டில் அவுஸ்திரேலியாவிடம் 1-4 என்ற கணக்கில் வீழ்ந்த இலங்கை, இந்த ஆண்டு மார்ச்சில் பங்களாதேஷுடனான போட்டியை 1-1 என சமநிலையில் முடித்தது.  

இவ்வாறான ஒரு நிலையிலேயே இலங்கை அடுத்து பலம் மிக்க இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மெதிவ்ஸ், ‘நாம் அதிகம் முன்னேற்றங்களை செய்ய வேண்டி உள்ளது. இந்திய தொடர் இதனை விடவும் கடினமாக இருக்கும். குறுகிய காலத்திற்குள் எமது பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். ஒரே அணியாக பயிற்சியில் கடுமையாக உழைத்த போதும் ஆடுகளத்தில் அது பயன்தரவில்லைஎன்று குறிப்பிட்டார்.