இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் பதினொருவர் அணிகளுக்கிடையில் கொழும்பு (ccc) மைதானத்தில் நடைபெற்ற இரண்டு நாட்களைக் கொண்ட பயிற்சிப் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

நேற்றைய முதல் நாள் ஆட்ட நிறைவின்போது 135 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில இரண்டாம் நாளான இன்று துடுப்பாட்டத்தை தொடர்ந்த இந்திய அணி இன்றைய நாளில் 68 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 312 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், போதிய நேரம் இன்மையால் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.   

>> பந்து வீச்சில் இலங்கை வீரர்களை அதிர வைத்த ஜடேஜா மற்றும் யாதவ்

முதலாம் நாள், பயிற்சிப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதினொருவர் அணியின் தலைவர் லஹிரு திரிமான்ன முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார்.

அதன்படி களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் வாரிய அணி சார்பாக தனுஷ்க குணதிலக்க மற்றும் லஹிறு திரிமான்ன ஆகியோர் அரைச் சதம் கடந்து அணியின் ஓட்டங்களை உயர்த்தியிருந்த போதிலும் இந்திய அணியின் அதிரடி பந்து வீச்சின் மூலம் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்து சென்றமையினால் இலங்கை கிரிக்கெட்  வாரிய அணி 187 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இறுதி வரை போராடிய ரோஷேன் சில்வா ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி அபினவ் முகுந்த்தின் முதல் விக்கெட்டினை துரதிஷ்டவசமாக ஒரு ஓட்டத்துக்கு இழந்திருந்தாலும் லோகேஷ் ராகுல் 58 பந்துகளில் 7 பௌண்டரிகள் உள்ளடங்களாக அரைச் சதம் கடந்து 54 ஓட்டங்களைப் பதிவு செய்தார். இந்நிலையில் விக்கும் சஞ்சய அவரை நேரடியாக LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்து ஓய்வறை திருப்பியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விராத் கோலி ஏழு பெளண்டரிகள் உட்பட 53 ஓட்டங்களை பதிவு செய்திருந்த நிலையில் தனது துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வைப் பெற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் துடுப்பாடிய ரஹானே (40), ரோஹித் சர்மா (38) மற்றும் சிக்கர் தவான் (41) ஆகியோரும் ஆட்டமிழக்க முன்னரே ஓய்வைப் பெற்றனர். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 11 ஓட்டங்களைப் பெற்ற வேளை ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து போதிய நேரமின்மையால் விர்த்திமான்  ஷா 36 ஓட்டங்களுடன் காலத்திலிருந்த நிலையில் அணித் தலைவர் போட்டியை இடைநிறுத்திக்கொண்டார்.   

>> ரெட்புல் கிரிக்கெட் தொடரின் சம்பியனாக வாகை சூடிய பி.எம்.எஸ் கல்வி நிலையம்

இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் பதினொருவர் அணி சார்பாக தறிந்து கௌஷால் மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அந்த வகையில், இந்த பயிற்சிப் போட்டியில் சிறப்பாக துடுப்பாடிய இந்திய அணி வீரர்கள் துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் களத் தடுப்பில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில் எதிர்வரும் இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்ள தாம் சிறந்த ஆயத்த நிலையில் உள்ளோம் என்பதை காண்பித்தனர்.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் 26 திகதி ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்  

இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் பதினொருவர் அணி: 187/10 (55.5ஓவர்கள்) -தனுஷ்க குணதிலக்க 74, லஹிரு திரிமான்ன 59, குலதீப் யாதவ் 14/4, ரவீந்தர் ஜடேஜா 31/3

இந்திய அணி: 135/3 (30 ஓவர்கள்) – லோகேஷ் ராகுல் 54, விராத் கோலி (ரிட்யர்ட்) 53*, விர்த்திமான்  ஷா 36* ரஹானே (ரிட்யர்ட்) 40*, ரோஹித் சர்மா (ரிட்யர்ட்) 38*, சிக்கர் தவான் (ரிட்யர்ட்) 41*, விஷ்வ பெர்னாண்டோ 37/2,  தறிந்து கௌஷால் 81/2