சுதந்திர கிண்ண சவால்கள் எவ்வாறு இருக்கும்?

1729

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தினை நினைவுகூறும் விதமாக இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் பங்குபெறும் சுதந்திர கிண்ண முக்கோண (Nidahas Trophy) T-20 தொடர் செவ்வாய்க்கிழமை (06) ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகின்றது. 

[rev_slider LOLC]

சுதந்திரக் கிண்ணம் ஒரு அறிமுகம்  

பிரித்தானிய ஆளுகையில் இருந்து 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றுக் கொண்ட இலங்கை குடியரசு 1998ஆம் ஆண்டில் 50ஆவது சுதந்திர தினத்தினைக் கொண்டாடியிருந்தது. இலங்கையின் இந்த 50ஆவது சுதந்திர தினத்தினையும் இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உருவாக்கப்பட்டு 50 வருடங்கள் பூர்த்தியானதையும் நினைவுகூறும் விதமாக, இலங்கை கிரிக்கெட் சபை “சுதந்திர கிண்ணம்” என்னும் பெயரிலமைந்த முக்கோண ஒரு நாள் தொடர் ஒன்றினை அப்போது முதல் தடவையாக (1998 இல்)  நடாத்தியிருந்தது.  

சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 தொடரினால் இலங்கைக்கு 100 கோடி ரூபா வருமானம்

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்..

1998 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதிப் பகுதியில் ஆரம்பமாகியிருந்த இந்த சுதந்திர கிண்ண தொடரில் இலங்கை அணியுடன் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியிருந்ததுடன், தொடரின் இறுதிப் போட்டியில் 6 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா முதல் சுதந்திர கிண்ண தொடரின் சம்பியன் பட்டத்தினை சுவீகரித்திருந்தது.

இது முடிவடைந்து, 20 வருடங்களின் பின்னர் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தினையும், இலங்கை கிரிக்கெட் சபை ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் பூர்த்தியாவதையும் நினைவுகூறும் விதமாக இம்முறை T-20 தொடராக மீண்டும் சுதந்திர கிண்ணப் போட்டிகள் நடைபெறுகின்றது.

இம்முறைக்கான தொடரில் இலங்கை அணியோடு மோதுவதற்காக இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் விருந்தாளிகளாக இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்திருக்கின்றன.

இலங்கை அணி

கடந்த ஆண்டில் (2017 இல்) மிகவும் மோசமான பதிவு ஒன்றினை வைத்திருந்த இலங்கை, இந்த ஆண்டினை தாம் பங்குபற்றிய மூன்று வகைப் போட்டித் (டெஸ்ட், ஒரு நாள், T-20) தொடர்களினையும் கைப்பற்றி புதுவருடத்தை அதிரடியாக ஆரம்பித்திருக்கின்றது.  

இதற்கு காரணமாக இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹதுருசிங்க நியமிக்கப்பட்டதனை கூற முடியும். புதிய பயிற்றுவிப்பாளரின் வருகைக்கு பின்னரான இலங்கைத்தரப்பு அவர் அறிமுகம் செய்த வியூகங்கள் மூலம் புதிய பரிணாமத்தினை அடைந்திருக்கின்றது. இந்த வியூகங்கள் மூலம் புத்துயிர் பெற்றுள்ள இலங்கை அணி அதன் மூலம் பங்களாதேஷ் அணியுடன் அவர்களது சொந்த மண்ணில்  இடம்பெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட T-20 தொடரினை 2-0 என கைப்பற்றியிருப்பதுடன், T-20 போட்டிகளில் பெற்றுவந்த தொடர்ச்சியான தோல்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது. இந்த சிறப்பான துவக்கம் நடைபெறப் போகின்ற சுதந்திர கிண்ணத்திலும் மேலும் முன்னெடுத்துச் செல்லும் என நம்பப்படுகிறது.  

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இலங்கை அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் காயம் காரணமாக சுதந்திர கிண்ணத் தொடரில் இருந்து விலகியிருக்கின்றார். இதனால், இலங்கைக்கு அதிஷ்டம் பொருந்திய அணித்தலைவர் என அழைக்கப்படும் தினேஷ் சந்திமால் இந்த  T-20 தொடரில் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.  

Kusal Mendisஇலங்கை அணியின் துடுப்பாட்டத்திற்கு தொடரில் வலுச்சேர்க்கும் முக்கிய வீரர்களாக குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா ஆகியோர் காணப்படுகின்றனர். இதில் இளம் வீரரான குசல் மெண்டிஸ் இலங்கை அணிக்காக இறுதியாக விளையாடிய இரண்டு T-20 போட்டிகளிலும் அதிரடியான முறையில் அரைச்சதம் விளாசியிருந்ததோடு இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் உள்ளூர் T-20 தொடரின் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றார். அதோடு, குசல் பெரேரா,  காயத்திலிருந்து மீண்டு தற்போது இடம்பெறும் உள்ளூர் T-20 தொடரில் 43, 64 என்கிற ஓட்டங்கள் குவித்திருப்பது அவர் சிறந்த நிலையில் இருப்பதனை காட்டுகின்றது.

இவர்கள் தவிர சகலதுறை வீரர்களான திசர பெரேரா, தசுன் சானக்க, தனுஷ்க குணத்திலக்க போன்ற இரும்புக்கர வீரர்கள் இருப்பது இலங்கை அணியின் துடுப்பாட்டத்திற்கு மேலும் பலம் சேர்ப்பதாகும். பங்களாதேஷுக்கு எதிராக இடம்பெற்ற T-20 தொடரில் இலங்கை வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்த திசர பெரேரா இதுவரையில் இலங்கை அணிக்காக T-20 போட்டிகளில் மொத்தமாக 557 ஓட்டங்களினை பெற்றுத்தந்திருப்பதோடு, 48  விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய அனுபவத்தினையும்  கொண்டிருக்கின்றார். அதோடு அண்மையில் இடம்பெற்ற உள்ளூர் T-20 போட்டியொன்றில் பெரேரா வெறும் 30 பந்துகளுக்கு 10 சிக்ஸர்கள் அடங்கலாக 84 ஓட்டங்களினையும் விளாசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர காயம் காரணமாக இன்னுமொரு சகலதுறை வீரரான அசேல குணரத்னவின் சேவையும் அண்மைய போட்டிகளில் சிறப்பாக செயற்படாத காரணத்தினால் விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்லவின் சேவையும் இலங்கை அணிக்கு இல்லாமல் போயிருப்பது துரதிஷ்டமான விடயங்களில் ஒன்றாகும்.

மேலும், அணித்தலைவர் தினேஷ் சந்திமால், உபுல் தரங்க ஆகியோர் இலங்கைக்காக இருக்கும் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்கள் என்பதோடு, இவர்களிடமும் இலங்கை அணி சிறப்பானதொரு பங்களிப்பினை எதிர்பார்த்து நிற்கின்றது.

சுதந்திர கிண்ணத்திற்கான இலங்கை அணி இதுதான்

மார்ச் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் சுதந்திர கிண்ண..

துடுப்பாட்டம் தவிர்த்து இலங்கை அணியின் பந்துவீச்சினை உற்றுநோக்கும் போது, பெரிதும் இளம் வீரர்களினையே இலங்கை அணி தம்மிடையே கொண்டிருக்கின்றது. இதில் T-20 போட்டிகளில் பெரிதான அனுபவத்தினை கொண்டிராத வேகப்பந்து வீச்சாளர்களான நுவான் ப்ரதீப், துஷ்மந்த சமீர ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இலங்கை அணியின் சிரேஷ்ட வலதுகை வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் T-20 ஒரு வருடத்தின் பின்னர் குழாத்திற்குள் சேர்க்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு உப அணித்தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருக்கின்றது.  

இவர்கள் மூவருடன் சேர்த்து T-20 போட்டிகளின் சிறப்பு வீரர்களில் ஒருவரான இசுரு உதான இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுத்துறையினை முன்னெடுக்கவுள்ளார். உபாதை காரணமாக இலங்கை அணியின் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான ஷெஹான் மதுசங்கவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

வேகப்பந்து வீச்சாளர்கள் தவிர்ந்து இலங்கை அணிக்கு சுழல் வீரர்களாக அகில தனன்ஞய, ஜீவன் மெண்டிஸ் மற்றும் அமில அபொன்சோ ஆகியோர் கடமை புரிய வந்திருக்கின்றனர். இதில் அனுபவமிக்கவரான ஜீவன் மெண்டிஸ், இலங்கை அணிக்கு நீண்ட காலத்திற்குப் பின்னர் திரும்பி பாராட்டும்படியான ஆட்டத்தினை வெளிக்காட்டியிருக்கின்றார். அதோடு மெண்டிசுக்கு மேலதிகமாக துடுப்பாடும் திறமையும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த குழாம் சுதந்திர கிண்ணத்தில் எதிரணிகளுக்கு சவால்தரும் வகையில் செயற்படும் என எதிர்பார்க்கலாம்.

இலங்கை குழாம்

தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), சுரங்க லக்மால் (துணைத் தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணத்திலக்க, தனன்ஞய டி சில்வா, குசல் மெண்டிஸ், தசுன் சானக்க, குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், இசுரு உதான, அகில தனன்ஞய, அமில அபொன்சோ, நுவான் பிரதீப், துஷ்மந்த சமீர

இந்திய அணி

இலங்கை நாட்டுக்கு கிரிக்கெட் விளையாட்டு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நட்புறவான நாடுகளின் ஒன்றான இந்தியா இரண்டாவது தடவையாகவும் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கெளரவிக்கும் பொருட்டு இந்த தொடரில் பங்கேற்கின்றது.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் முடிசூடா சம்பியனாக திகழும் இந்திய அணி இறுதியாக அவர்களது தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தில் அந்நாட்டு அணியுடன் இடம்பெற்ற T-20 தொடரினை 2-1 என கைப்பற்றியிருக்கின்றனர். இதோடு இந்தியா, இலங்கை அணிக்கு எதிரான தம்முடைய இறுதி ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவுகள் அனைத்தும் இந்தியா அணி சுதந்திரக் கிண்ணத் தொடரில் மிகவும் சவாலாக ஏனைய அணிகளுக்கு காணப்படும் என்பதை உறுதி செய்கின்றது.

முக்கியமான பலர் இன்றி இலங்கை வரும் இந்திய குழாம் அறிவிப்பு

அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கையில் ஆரம்பமாகும்..

T-20 தரவரிசையில் 3ஆம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் அவர்களது அணித் தலைவர் விராத் கோலி, மஹேந்திர சிங் டோனி, பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் புவ்னேஸ்வர் குமார் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வினை வழங்கியிருக்கின்றது. இந்திய அணியில் இந்த முக்கிய வீரர்கள் இல்லாது போனாலும் அவர்கள் மிகவும் திறமைமிக்க குழாத்தினையே இலங்கைக்கு அனுப்பியிருக்கின்றனர்.

இத்தொடரில் இந்திய அணியினை தலைமை தாங்கும் ரோஹித் ஷர்மா இலங்கை அணிக்கெதிராக T-20 போட்டிகளில் அதிகுறைந்த பந்துகளில் (35) சதம் கடந்த சாதனையை வைத்திருக்கின்றார். T-20 போட்டிகளில் 1,700 ஐ அண்மித்த ஓட்டங்கள் வரையில் இதுவரையில் பெற்றிருக்கும் சர்மா இத்தொடரில் ஜொலிக்க எதிர்பார்க்கப்படும் ஒரு துடுப்பாட்ட வீரராவர். அதோடு, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் சிக்கர் தவானும் எதிரணிகளுக்கு நெருக்கடி தரக்கூடிய அதிரடி வீரர் ஆவார். அதோடு உள்ளூர் போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தினை காண்பித்து அணிக்கு திரும்பியிருக்கும் சுரேஷ் ரெய்னாவும் இந்தியத் தரப்புக்காக போராடக் கூடியவர்.  

இவர்களோடு லோக்கேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, அக்ஷார் பட்டேல், தினேஷ் கார்த்திக்,  தமிழகத்தினை சேர்ந்த அறிமுக வீரர் விஜய் சங்கர் போன்றோர் இந்திய அணியின் மேலதிக துடுப்பாட்ட முத்துக்களாகும்.

பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் சுழல் வீரரான யுஸ்வேந்திர சாஹல்  ஏனைய அணிகளுக்கு மிரட்டல் விடுக்க கூடியவர்களில் பிரதானமானவர். இவர் இதுவரையில் வெறும் 16 T-20 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வெறும் 8.40 என்கிற சராசரியோடு கைப்பற்றியிருக்கின்றார். சாஹலோடு வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் சுழல்பந்து துறையினை பலப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய அணி சர்வதேசப் போட்டிகளில் அனுபவம் குறைந்த வேகப்பந்து வீச்சாளர்களான மொஹமட் சிராஜ், ஜய்தேவ் உனட்கட் மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோருக்கு இத்தொடர் மூலம் சிறப்பாக செயற்படுவதற்கு வாய்ப்பு தந்திருக்கின்றது.

இந்தியக் குழாம்

ரோஹித் சர்மா(அணித் தலைவர்), சிக்கர் தவான், தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, அக்ஷார் பட்டேல், சுரேஷ் ரெய்னா, சர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், தீபக் ஹூடா, மொஹமட் சிராஜ், றிசாப் பாண்ட், லோக்கேஷ் ராகுல், விஜய் சங்கர், ஜய்தேவ் உனட்கட்

பங்களாதேஷ் அணி

சுதந்திரக் கிண்ணத் தொடரில் முதற்தடவையாக பங்குபெறும் பங்களாதேஷ் அணியின் அண்மைய T-20 போட்டிகளின் பதிவுகள் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இறுதியாக தாம் விளையாடிய 13 T-20 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியினை மாத்திரமே அவர்கள் பெற்றிருக்கின்றனர்.

அதோடு இத்தொடருக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த பங்களாதேஷ் அணித் தலைவரும் நட்சத்திர சகலதுறை வீரருமான சகீப் அல் ஹஸனும் காயம் காரணமாக தொடரில் இருந்து இறுதி நேரத்தில் விலகியிருக்கின்றார். அதோடு, அணியில் பெரும்பாலான வீரர்கள் அனுபவம் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர். எனவே, நடைபெறப் போகின்ற சுதந்திரக் கிண்ணத் தொடரில் அதிக சவால்களை எதிர்கொள்ளும் அணியாக பங்களாதேஷ் அணியே காணப்படுகின்றது.

பங்களாதேஷ் அணிக்கு துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்க கூடியவர்களாக அவ்வணியினை தொடரில் தலைமை தாங்கப் போகும், மஹ்மதுல்லா மற்றும் தமீம் இக்பால் ஆகியோர் காணப்படுகின்றனர். இதில், தமிம் இக்பால் பங்களாதேஷ் அணிக்காக இருக்கும் வீரர்களில் அதிக ஓட்டங்கள் (1286 சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு தமிம் தற்போது இடம்பெற்று வரும் பாகிஸ்தான் சுபர் லீக் (PSL) தொடரிலும் பெசாவர் ஷல்மி அணிக்காக சிறப்பான முறையில் பிரகாசித்து வருகின்றார்.

தமிம் மஹ்மதுல்லா தவிர பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹீம், செளம்ய சர்க்கர், சப்பீர் ரஹ்மான் சகீபின் இடத்தினை நிரப்ப அணிக்குள் நுழைந்திருக்கும் லிடன் தாஸ் மற்றும் இம்ருல் கைஸ் போன்றோர் பங்களாதேஷ் அணிக்கு ஓட்டங்கள் சேர்க்க எதிர்பார்க்கப்படுவர்களில் முதன்மையாக காணப்படுகின்றனர்.

இறுதி முடிவாக சுதந்திரக் கிண்ணத்திருந்து ஷகீப் அல் ஹஸன் நீக்கம்

இலங்கையில் நடைபெறும் சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20..

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சுத்துறையை நெறிப்படுத்தக் கூடியவர்களாக இளம் வேகப்பந்து வீச்சாளர்களான முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கீன் அஹமட் ஆகியோர் உள்ளனர். முஸ்தபிசுர் ரஹ்மான் T-20 போட்டிகளில் 16.92 என்கிற சிறந்த பந்துவீச்சு சராசரியினைக் கொண்டிருக்கின்றார். இந்த இருவரோடும் ரூபெல் ஹொசைனின் அனுபவமும் பங்களாதேஷ் அணியின் வேகப்பந்து வீச்சுத்துறையினை மேம்படுத்தும் மற்றுமொரு விடயமாகும். பங்களாதேஷ் அணியின் பிரதான சுழல் வீரர்களாக மெஹதி ஹசனோடு இணைந்து நஷ்முல் இஸ்லாம் செயற்படவிருக்கின்றார்.

அனுபவம் குறைந்த இந்த இளம் பங்களாதேஷ் அணிக்கு இந்த முக்கோண T-20 தொடர் பல பாடங்கள் கற்பதற்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.

பங்களாதேஷ் குழாம்

மஹ்மதுல்லா (அணித் தலைவர்), அபு ஜாயேத், இம்ருல் கைஸ், மெஹதி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான், நூருல் ஹசன், சப்பீர் ரஹ்மான், தமிம் இக்பால், அபு ஹைதர், அரிபுல் ஹக், முஸ்பிகுர் ரஹீம், நஷ்முல் இஸ்லாம், ருபெல் ஹொசைன், செளம்யா சர்க்கார், தஸ்கின் அஹமட்

மோதல்களின் முடிவுகள்

இலங்கை எதிர் இந்தியா
T-20 போட்டிகள் – 10
இலங்கை வெற்றி – 4
இந்தியா வெற்றி – 6

இலங்கை எதிர் பங்களாதேஷ்
T-20 போட்டிகள் – 9
இலங்கை வெற்றி – 7
பங்களாதேஷ் வெற்றி – 2

இந்தியா எதிர் பங்களாதேஷ்
T-20 போட்டிகள் – 5
இந்தியா வெற்றி – 5
பங்களாதேஷ் வெற்றி – 0

இறுதியாக

மூன்று அணிகளில் எந்த அணி குறைவான தவறுகளை விடுகின்றதோ அந்த அணிக்குத்தான் இந்த முக்கோண T-20 தொடரின் வெற்றியாளராக முடியும் என்பது மறுக்க இயலாத உண்மையாகும். எனவே, கிரிக்கெட் இரசிகர்களுக்கு இந்த மூன்று ஆசிய அணிகளில் சிறந்த T-20  அணி எதுவென்று பார்க்க சுதந்திரக் கிண்ணத் தொடர் ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தந்திருக்கின்றது.

சுதந்திர கிண்ண போட்டித் தொடர் அட்டவணை

முதல் போட்டி – இலங்கை எதிர் இந்தியா – மார்ச் 06
இரண்டாவது போட்டி – பங்களாதேஷ் எதிர் இந்தியா – மார்ச் 08
மூன்றாவது போட்டி – பங்களாதேஷ் எதிர் இலங்கை – மார்ச் 10
நான்கவது போட்டி – இலங்கை எதிர் இந்தியா – மார்ச் 12
ஐந்தாவது போட்டி – பங்களாதேஷ் எதிர் இந்தியா – மார்ச் 14
ஆறாவது போட்டி – இலங்கை எதிர் பங்களாதேஷ் – மார்ச் 16
இறுதிப் போட்டி – மார்ச் 18

தொடரின் போட்டிகள் யாவும் கொழும்பு R. பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.

இந்த சுதந்திர கிண்ண T-20 தொடர் பற்றிய கட்டுரைகள், புகைப்படங்கள், உடனடி தகவல்கள், எழுத்து மூலமான வர்ணனை மற்றும் அறிக்கைகள் என்பவற்றினை தமிழ் மொழியில் உங்களுக்கு ThePapare.com ஊடாக அறிந்து கொள்ள முடியும்.