மும்பையில் டோனிக்கு அறுவை சிகிச்சை நிறைவு

Indian Premier League 2023

108
MS Dhoni undergoes knee surgery

IPL போட்டியில் காயத்தால் அவதிப்பட்ட சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ் டோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மும்பை மருத்துவமனையில் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (29) நடைபெற்ற 2023 IPL தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சுபர் கிங்ஸ் அணி சம்பியன் பட்டத்தை 5ஆவது முறையாக வென்றது.

இந்த நிலையில், சென்னை அணியின் டோனி இந்த சீசன் முழுவதும் முழங்கால் வலியுடன் விளையாடி வந்தார். போட்டிகளில் துடுப்பெடுத்தாடும் போது ஓட்டம் எடுக்க விளையாடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.

இதனிடையே, IPL இறுதிப் போட்டி முடிவடைந்தவுடன் புதன்கிழமை மும்பை சென்ற டோனி, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டார். அங்கு பிரபல விளையாட்டு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டின்ஷா பார்திவாலாவிடம் ஆலோசனை நடத்தினார்.

இவர் இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பாண்ட் உட்பட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களுக்கு அறுவை சிகிச்சை நடத்தியவர். அவர் டோனியை ஆய்வு செய்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தார். இதை ஏற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டோனிக்கு நேற்று இடது முழங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதை சென்னை சுபர் கிங்ஸ் அணியின் நிறைவேற்று அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதி செய்தார். டோனியின் சத்திரசிகிச்சை தொடர்பில் அவர் கூறுகையில்,

டோனிக்கு மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் வெற்றிகரமாக முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் நலமாக இருக்கிறார். காலையில் அறுவை சிகிச்சை நடந்தது. என்னிடம் மற்ற விபரங்கள் இல்லை. அவரது உடல் நிலை, அறுவை சிகிச்சை குறித்த மற்ற அனைத்து விபரங்களையும் நான் இன்னும் பெறவில்லை என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<