லக்ஷானின் சகலதுறை ஆட்டத்தால் ரிச்மண்ட் கல்லூரி இறுதிப் போட்டியில்

239

அணித்தலைவர் தனஞ்சய லக்ஷானின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் ரிச்மண்ட் கல்லூரி 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் புனித தோமியர் கல்லூரியை 5 விக்கெட்டுகளால் இலகுவாக வென்றது.   

இதன்மூலம் அந்த அணி புனித பேதுரு கல்லூரியுடனான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் அரையிறுதியில் புனித பேதுரு கல்லூரி, காலி மஹிந்த கல்லூரியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.   

விறுவிறுப்பான அரையிறுதி ஆட்டத்தில் மஹிந்தவை வீழ்த்திய பேதுரு கல்லூரி

சிங்கர் நிறுவன…

எனினும், இரண்டாவது அரையிறுதியில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி வீரரான லக்ஷான், ரிச்மண்ட் அணிக்காக பந்துவீச்சில் 5 விக்கெட்டுகள் மற்றும் துடுப்பாட்டத்தில் சதம் பெற்று முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார்.  

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் இந்த தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி கொழும்பு பேதுரு கல்லூரி மைதானத்தில் இன்று (24) நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ரிச்மண்ட் கல்லூரி புனித தோமியர் அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

எனினும் ரிச்மண்ட் கல்லூரி அணித்தலைவர் தனஞ்சய லக்ஷான் ஆரம்பம் தொட்டே எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார். புனித தோமியர் கல்லூரி ஆரம்ப வீரர்களான சிதார ஹபுஹின்ன (05) மற்றும் துலித் குணரத்னவை (11) அடுத்தடுத்து வெளியேற்றிய அவர் அடுத்து வந்த கிஷான் முனசிங்கவை ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் மத்திய வரிசையில் வந்த பவித் ரத்னாயக்கவை பூஜ்யத்திற்கே வெளியேற்றினார்.  

இதனால் புனித தோமியர் கல்லூரி 63 ஓட்டங்களை பெறுவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் 6ஆவது விக்கெட்டுக்கு இணைந்த டெல்லோன் பீரிஸ் மற்றும் ஷலின் டி மேல் ஜோடியினர் 80 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்டங்களை அதிகரிக்க செய்தனர். இதில் 101 பந்துகளுக்கு 55 ஓட்டங்களை பெற்ற பீரிஸ் காயத்துடன் பாதியில் வெளியேறியதோடு டி மேல் 92 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்றார்.  

அதேபோன்று பின்வரிசையில் வந்த மனீஷ ரூபசிங்க கடைசி ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை பெற்று தோமியர் அணியின் ஓட்டங்கள் 200 தாண்ட உதவினார். 34 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களை குவித்தார்.

S. Thomas’ College vs Richmond College – Singer U19 Limited Overs Tournament – 2nd Semi Final

இதன்மூலம் புனித தோமியர் கல்லூரி 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 221 ஓட்டங்களை பெற்றது. அபாரமாக பந்துவீசிய லக்ஷான் 36 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய ரிச்மண்ட் கல்லூரி 16 ஓட்டங்களுக்கு முதல் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. ஆரம்ப வீரர் ஆதித்ய சிறிவர்தன மற்றும் முதல் வரிசையில் வந்த கமின்து மெண்டிஸ் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர். எனினும் ஆரம்ப வீரர் லக்ஷானை புனித தோமியர் பந்துவீச்சாளர்களால் ஆட்டம்காண செய்ய முடியவில்லை.

மைதானத்தில் அனைத்து பக்கங்களுக்கும் பந்தை செலுத்திய லக்ஷான் 3ஆவது விக்கெட்டுக்கு தவீஷ அபிசேக்குடன் சேர்ந்து 109 ஓட்டங்களை பகிர்ந்து கொள்ள ரிச்மண்ட் கல்லூரியின் வெற்றி வாய்ப்பு நெருங்கியது. அபிசேக் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றபோதும், மறுமுனையில் ரிச்மண்ட் அணியின் வெற்றி வரை லக்ஷான் களத்தில் இருந்தார்.

இதன்மூலம் அந்த அணி 43.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 222 ஓட்டங்களை பெற்றது. அபாரமாக துடுப்பெடுத்தாடிய லக்ஷான் 138 பந்துகளுக்கு 16 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 130 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸை – 221/7 (50) – டெல்லோன் பீரிஸ் 55 (காயம்), ஷலின் டி மேல் 52, மனீஷ ரூபசிங்க 44*, தனஞ்சய லக்ஷான் 5/36  

ரிச்மண்ட் கல்லூரி, காலி – 222/5 (43.2) – தனஞ்சய லக்ஷான் 130*, தவீஷ அபிஷேக் 36, எஸ்.. பெர்னாண்டோ 2/43

முடிவு ரிச்மண்ட் கல்லூரி 5 விக்கெட்டுகளால் வெற்றி

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க