LPL சூதாட்டத்தில் சிக்கிய மே.தீவுகள் வீரருக்கு தடை

178

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் டெவோன் தோமஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை, ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபை மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் ஆகியவற்றின் ஊழல் தடுப்பு விதிகளின் 7 விதிகள் மீறப்பட்டதே இதற்கு காரணமாகும்.  அதன்படி, அவருக்கு எதிராக தற்காலிக கிரிக்கெட் தடை விதிக்கவும் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க டெவோன் தோமஸுக்கு மே 23ஆம் திகதி முதல் 14 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் டெவோன் தோமஸ் இடம்பிடித்துள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக், அபுதாபி T10 லீக் மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் ஆகிய தொடர்களில் டெவோன் தோமஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கண்டி வொரியர்ஸ் அணிக்காக ஆடிய போது ஒரு ஆட்டத்தின் முடிவை மாற்றும் வகையில் சூதாட்டத்தில் ஈடுபட முயற்சித்தது அவர் மீது சுமத்தப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. எவ்வாறாயினும், அந்தத் தொடரில் கண்டி வொரியர்ஸ் அணிக்காக ஒரேயொரு போட்டியில் மட்டுமே அவர் விளையாடினார்.

இதையடுத்து அவரை இடைநீக்கம் செய்துள்ள ஐசிசி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. அதுமாத்திரமின்றி, ஐசிசியின் ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை உத்தரவாதம் அளித்துள்ளது.

33 வயதான டெவோன் தோமஸ் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒரு டெஸ்ட், 21 ஒருநாள் போட்டிகள் மற்றும் 12 T20i போட்டிகளில் விளையாடி உள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<