விறுவிறுப்பான அரையிறுதி ஆட்டத்தில் மஹிந்தவை வீழ்த்திய பேதுரு கல்லூரி

156

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் காலி மஹிந்த கல்லூரியை 9 ஓட்டங்களால் வீழ்த்திய புனித பேதுரு கல்லூரி அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் இன்று (22) நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹிந்த கல்லூரி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய புனித பேதுரு கல்லூரி அணி ஆரம்பத்தில் தடுமாறியிருந்ததுடன், ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்களை இழந்து 23 ஓட்டங்களைப் பெற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது.

எனினும், 4 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சுலக்ஷன பெர்ணான்டோ மற்றும் ரன்மித் ஜயசேன ஆகியோர் 40 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று அவ்வணிக்கு வலுச்சேர்த்திருந்தனர்.

இதன்படி, புனித பேதுரு கல்லூரி அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களைக் குவித்தது.

ஐ.பி.எல்லை நிராகரித்த குசல் பெரேரா முதல்தர போட்டியில் அபாரம்

அவ்வணி சார்பாக மத்திய வரிசை வீரர்கள் சோபிக்கத் தவறினாலும், சகலதுறை ஆட்டக்காரரான கனிஷ்க மதுவந்த ஆட்டமிழக்காது 38 ஓட்டங்களையும், சுலக்ஷன பெர்ணான்டோ மற்றும் ரன்மித் ஜயசேன ஆகியோர் தலா 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் மஹிந்த கல்லூரி அணி சார்பில் நிபுன் மாலிங்க 3 விக்கெட்டுக்களையும், கெவின் கொத்திகொட மற்றும் நவோத் பரணவிதான ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால் குறைந்த 170 ஓட்டங்களைப் பெற பதிலுக்கு துடுப்பாடிய மஹிந்த கல்லூரி அணி, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து நல்ல முறையில் இலக்கை நோக்கி முன்னேறியிருந்த போதிலும் பின்னர் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 46.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமான தோல்வியைச் சந்தித்தது.

மஹிந்த கல்லூரி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹன்சிக வெலிஹிந்த 44 ஓட்டங்களையும், கெவின் கொத்திகொட 34 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

துடுப்பாட்டத்தைப் போன்று பந்துவீச்சிலும் அசத்திய புனித பேதுரு கல்லூரியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளரான கனிஷ்க மதுவந்த 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதன்படி, சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெற்றுவரும் 2017/2018 பருவகாலத்துக்கான 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிக்கு புனித பேதுரு கல்லூரி அணி தகுதி பெற்றுள்ளது.

இதேவேளை, இப்போட்டித் தொடரின் 2 ஆவது அரையிறுதிப் போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி கல்கிஸ்ஸை புனித தோமியர் மற்றும் காலி றிச்மண்ட் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

புனித பேதுரு கல்லூரி, கொழும்பு – 170 (48.3) – கனிஷ்க மதுவந்த 38*, சுலக்ஷன பெர்ணான்டோ 37, ரன்மித் ஜயசேன 37, தினித் அஞ்சுல 26,  நிபுன் மாலிங்க 3/27, கெவின் கொத்திகொட 2/25, நவோத் பரணவிதான 2/24

மஹிந்த கல்லூரி, காலி – 161 (46.5) – ரவிந்து வெலிஹின்ன 44, கெவின் கொத்திகொட 34, நவோத் பரணவிதாரன 23, கவிந்து எதிரிவீர 13, நிபுன் மாலிங்க 13, கனிஷ்க மதுவந்த 4/23, ருவின் செனவிரத்ன 3/34

முடிவு – புனித பேதுரு கல்லூரி 9 ஓட்டங்களால் வெற்றி