19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவுற்ற போட்டிகளில் தர்ஸ்டன் கல்லூரி, புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் டி மெசனொட் கல்லூரி அணிகள் முதல் இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்தன.

புனித ஜோசப் கல்லூரி எதிர் தர்ஸ்டன் கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் புனித ஜோசப் கல்லூரியும் தர்ஸ்டன் கல்லூரியும் மோதிக்கொண்டன. நேற்றைய முதல் நாள் நிறைவில் புனித ஜோசப் கல்லூரி அணி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக  4 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களை பெற்றிருந்தது.

143 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) களமிறங்கிய  புனித ஜோசப் கல்லூரி அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி,  தோல்வியை தவிர்க்கப் போராடினர். இரண்டாம் தினம் முழுவதும் ஆடுகளத்திலிருந்த தினெத் மதுராவல பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காது 144 ஓட்டங்கள் குவித்தார்.

ஷெவோன் பொன்சேகா 44 ஓட்டங்களையும் பஹன் பெரேரா 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள புனித ஜோசப் கல்லூரி 120 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 9 விக்கெட்டுகளை இழந்து  315 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது. பந்து வீச்சில் சந்தரு டயஸ் 4 விக்கெட்டுகளையும் சரண நாணயக்கார  3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முன்னர், முதல் இன்னிங்சிற்காக புனித ஜோசப் கல்லூரி வெறும் 23 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அபாரமாக பந்துவீசிய சரண நாணயக்கார 15 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தர்ஸ்டன் கல்லூரி தமது முதல் இன்னிங்சிற்காக 227 ஓட்டங்களைக் குவித்தது. யேஷான் விக்ரமாராச்சி 69 ஓட்டங்களையும் நிபுன் லக்ஷான் 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் ஜெஹான் டேனியல் 81 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி  (முதல் இன்னிங்ஸ்) 23 (13.5) சரண நாணயக்கார 15/8

தர்ஸ்டன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 227 (46) யேஷான் விக்ரமாராச்சி 69, நிபுன் லக்ஷான் 38, சரண நாணயக்கார 20, ஜெஹான் டேனியல் 81/5

புனித ஜோசப் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) 315/9 (120) – தினெத் மதுராவல 144*, ஷெவோன் பொன்சேகா 44, பஹன் பெரேரா 42, சந்தரு டயஸ் 51/4, சரண நாணயக்கார 76/3

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. தர்ஸ்டன் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


புனித செபஸ்டியன் கல்லூரி எதிர் ரிச்மண்ட் கல்லூரி

குழு ‘A’ இற்கான போட்டியொன்றில் பாடசாலைகள் கிரிக்கெட்டில் பிரபல அணிகளான மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரியும் காலி ரிச்மண்ட் கல்லூரியும் மோதிக் கொண்டன. முதல் நாள் ஆட்ட நிறைவில் தமது முதல் இன்னிங்சிற்காக 2 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை பெற்றிருந்த ரிச்மண்ட் கல்லூரி, முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக மேலும் 217 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

புனித செபஸ்டியன் கல்லூரியின் பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்த, ரிச்மண்ட் கல்லூரி 220 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தனஞ்சய லக்ஷான் 70 ஓட்டங்களையும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் தரூஷ பெர்னாண்டோ மற்றும் பிரவீன் ஜயவிக்ரம தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

அதன்படி 120 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட செபஸ்டியன் கல்லூரி எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய ரிச்மண்ட் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதன்படி போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 114 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பசரு சமிகார 48 ஓட்டங்களையும் கவீஷ அபிஷேக் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். புனித செபஸ்டியன் கல்லூரி சார்பில் இமேஷ் பண்டார மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் சாய்த்தனர்.

முன்னர், முதல் நாள் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித செபஸ்டியன் கல்லூரி 60.1 ஓவர்களில் 340 ஓட்டங்களைக் குவித்தது. அதிரடியாக ஆடிய டேமியன் பைசர் 129 ஓட்டங்களையும் தரூஷ பெர்னாண்டோ 83 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் சந்துன் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் கவீஷ அபிஷேக் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 340 (60.1) டேமியன் பைசர் 129, தரூஷ பெர்னாண்டோ 83, நுவனிது பெர்னாண்டோ 31, சந்துன் மெண்டிஸ் 117/3, கவீஷ அபிஷேக் 28/2

ரிச்மண்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 220 (49.1) தனஞ்சய லக்ஷான் 70, கமிந்து மெண்டிஸ் 59, கவீஷ அபிஷேக் 31, தரூஷ பெர்னாண்டோ 41/3, பிரவீன் ஜயவிக்ரம 48/3

ரிச்மண்ட் கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 262/7 (76) – கமிந்து மெண்டிஸ் 114, பசரு சமிகார 48, கவீஷ அபிஷேக் 45, இமேஷ் பண்டார  38/3, பிரவீன் ஜயவிக்ரம 86/3

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. புனித செபஸ்டியன் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


மலியதேவ கல்லூரி எதிர் டி மெசனொட் கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘D’ இற்கான மற்றுமொரு போட்டியில் மலியதேவ கல்லூரியை எதிர்த்து டி மெசனொட் கல்லூரி போட்டியிட்டது. முதல் நாள் நிறைவில் டி மெசனொட் கல்லூரி தமது முதல் இன்னிங்சிற்காக 7 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இன்றய தினம் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அவ்வணி 322 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்டது.  அற்புதமாக ஆடி இரட்டைச்சதம் கடந்த கிரிஷான் சஞ்சுல 253 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். மலியதேவ கல்லூரி சார்பாக தமித சில்வா 5 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார்.

இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய மலியதேவ கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துலாஜ் ரணதுங்க அதிகபட்சமாக 47 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டார். அதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

முன்னர், முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய மலியதேவ கல்லூரி 41.3 ஓவர்களில் 167 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தனஞ்சய பிரேமரத்ன அதிகபட்சமாக 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். டி மெசனொட் கல்லூரி சார்பாக தேஷான் பெர்னாண்டோ (5) மற்றும் ரோஷித செனவிரத்ன (5) தமக்கிடையே அனைத்து விக்கெட்டுகளையும் பங்கிட்டுக் கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 167 (41.3) தனஞ்சய பிரேமரத்ன 51, தமித சில்வா 27, தேஷான் பெர்னாண்டோ 39/5, ரோஷித செனவிரத்ன 42/5

டி மெசனொட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 322 (77) கிரிஷான் சஞ்சுல 253, தமித சில்வா 92/5

மலியதேவ கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 210/8 (70) – துலாஜ் ரணதுங்க 47, பவித்ர லியனகே 26*

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. டி மெசனொட் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.