ஆஸி.க்கு எதிராக பங்களாதேஷ் வரலாற்று வெற்றி ; எல்லிஸ் ஹெட்ரிக் சாதனை

Australia tour of Bangladesh 2021

167
ICC
 

அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் நேதன் எல்லிஸ், அறிமுக T20I போட்டியில், ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20I போட்டி இன்றைய தினம் (06) நடைபெற்றது. இந்தப்போட்டியில், பங்களாதேஷ் அணி வெற்றிபெற்று, முதன்முறையாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான சர்வதேச தொடர் வெற்றியொன்றை பதிவுசெய்துள்ளது.

CPL தொடரிலிருந்து விலகும் வனிந்து ஹசரங்க

இந்த போட்டியில், அவுஸ்திரேலிய அணி சார்பாக வேகப்பந்துவீச்சாளர் நேதன் எல்லிஸ் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

இந்தநிலையில், அவுஸ்திரேலிய அணிக்காக, இன்னிங்ஸின் இறுதி ஓவரை வீசிய நேதன் எல்லிஸ், குறித்த ஓவர் வரை விக்கெட்டுகள் எதனையும் கைப்பற்றாத போதும், இறுதி ஓவரில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்தார்.

நேதன் எல்லிஸ், அவுஸ்திரேலிய அணியின் 20வது ஓவரின் மூன்றாவது பந்தில் அரைச்சதம் கடந்திருந்த மொஹமதுல்லாஹ்வை போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். மொஹமதுல்லாஹ் பங்களாதேஷ் அணிக்காக அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். 

தொடர்ந்து களமிறங்கிய முஷ்தபிசூர் பிடியெடுப்பின் மூலம் ஆட்டமிழக்க, 6 ஓட்டங்களை பெற்றிருந்த மெஹிதி ஹசனும், அதற்கு அடுத்த பந்தில் ஆட்டமிழக்க, நேதன் எல்லிஸ் புதிய சாதனையை படைத்தார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை, வீரர்கள் அறிமுகப் போட்டியில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், T20I போட்டிகளில் அறிமுக வீரர் வீழ்த்திய முதல் ஹெட்ரிக்காக நேதன் எல்லிஸின் இந்த ஹெட்ரிக் பதிவானது.

அத்துடன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி சார்பாக T20I போட்டிகளில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுக்கொண்டார். இதற்கு முன்னர், பிரட் லீ மற்றும் அஸ்டன் ஆகர் ஆகியோர் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இதேவேளை, பங்களாதேஷ் அணியை பொருத்தவரை, தங்களுடைய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையையும் இன்றைய தினம் பதிவுசெய்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில், இன்னும் 2 போட்டிகள் எஞ்சியிருக்கும் போதும், அவுஸ்திரேலிய அணியை 3-0 என வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது. 

பங்களாதேஷ் அணியானது, இதுவரையில், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I என எந்தவொரு தொடரிலும் வெற்றிபெற்றதில்லை. முதன்முறையாக அவுஸ்திரேலிய அணி, பங்களாதேஷ் அணியிடம் தொடர் தோல்வியொன்றை தழுவியுள்ளது. 

இன்று நடைபெற்று முடிந்த மூன்றாவது T20I போட்டியில், 128 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டதுடன், 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<