லங்கன் ப்ரீமியர் லீக் தொடரில் முக்கிய பொறுப்பை ஏற்கும் ஆர்னோல்ட்

2402

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ஒத்தவிதத்தில் இலங்கையில் இந்த ஆண்டு இடம்பெறவிருக்கும் லங்கன் பிரிமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடருக்கு பிரதான இயக்குனராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரசல் ஆர்னோல்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று (7) அறிவித்துள்ளது.

தற்போது உலகில் காணப்படும் மிகச் சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளர்களில் ஒருவரான ஆர்னோல்டை, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இலங்கையின் இந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரின் இயக்குனராக மாற்றிய விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

“ரசல் போன்ற ஒருவரிடம் இந்த பொறுப்பை (இயக்குனர்) நாங்கள் கொடுப்பதன் நோக்கம் லங்கன் பிரிமியர் லீக் (LPL) தொடரை வெற்றிகரமாக நடத்தவாகும். அத்தோடு அவர் (ஆர்னோல்ட்) கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான போதிய அனுபவத்தையும், இப்படியான தொடர் ஒன்றை வெற்றிகரமாக எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பான அறிவையும் கொண்டிருக்கின்றார்.“

லங்கன் பிரிமியர் லீக் அதாவது எல்.பி.எல் எனக் குறிப்பிடப்படும் இந்த T20  போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம், செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இத்தொடரில் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய ஆறு அணிகள் பங்கெடுக்கின்றன.

ஐ.பி.எல் தொடரின் தொலைக்காட்சி வர்ணனையாளராக சங்கக்கார

நீண்ட கால இலக்கு ஒன்றை அடிப்படையாக வைத்து இந்த கிரிக்கெட் தொடர் நடாத்தப்படுவதால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் இலங்கை அணி குறித்த காலப்பகுதியில் சர்வதேச போட்டிகள் எதிலும் பங்கெடுக்காது இருப்பதையும் இலங்கை கிரிக்கெட் சபை உறுதி செய்திருக்கின்றது.

இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 6000 இற்கும் கிட்டவான ஓட்டங்களை குவித்து, 51 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருக்கும் ஆர்னோல்ட் முதல் தடவையாக இடம்பெறவிருக்கும் எல்.பி.எல் போட்டித் தொடரில் தனக்கு கிடைத்த முக்கிய பொறுப்பு பற்றி பேசுகையில், “லங்கன் பிரிமியர் லீக் தொடரின் இயக்குனராக இணைந்தது கெளரவமாக இருக்கின்றது” எனவும்,  “இந்த தொடரை இலங்கையில் அதிக போட்டித்தன்மை கொண்ட T20 தொடராக மாற்ற தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவேன்”  எனவும், “இங்குள்ள வீரர்களுக்கு சர்வதேச மட்டத்தில் குறைவான ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு இருக்கும் தேவைபற்றி அறிந்து செயற்பட உதவுவேன்” எனவும் குறிப்பிட்டிருந்தார்.