தனது கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பில் சந்திமால் கடிதம்!

Sri Lanka Cricket

1134

இலங்கை கிரிக்கெட் வீரர் தினேஷ் சந்திமால், தன்னுடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்த தேர்வுக்குழுவின் பார்வை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த காலங்களில் தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறிவரும் தினேஷ் சந்திமால், தான் தேசிய அணியில் விளையாடுவதற்கான தகுதியை கொண்டிருப்பதாக, முன்னாள் வீரரும், தற்போதைய இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவருமான அரவிந்த டி சில்வாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

2023 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் புதிய புள்ளிகள் விபரம்

எனது பிரகசிப்பு பதிவுகளை பார்க்கும் போதும்,  உடற்தகுதி மற்றும் சுகாதாரத்தை பார்க்கும் போதும், இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கான தகுதியை கொண்டுள்ளேன். அதேநேரம், அணிக்கான வீரர் என்பதையும் பல தடவைகளில் நிரூபித்துள்ளேன். எனது தீர்மானங்கள் அனைத்தும் அணியை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதனால், பல்வேறு சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட ரீதியான விளைவுகளையும் சந்தித்திருக்கிறேன் என குறித்த கடிதத்தில் சந்திமால் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வீரர்கள் தெரிவுகள் 31 வயதான தினேஷ் சந்திமாலின் பிரகாசிப்புகளை பாதித்ததுடன், மன அழுத்தத்தை கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் வீரர்களாகிய உங்களுக்கு, (அரவிந்த டி சில்வா) வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதாலும், அவர்கள் மீது நம்பிக்கை வைப்பதால் மாத்திரமே மைதானத்தில் பிரகாசிப்புக்களை வெளிக்கொண்டுவர முடியும் என உங்களுக்கு தெரியும்

அத்துடன், ஓய்வுபெற்ற இலங்கை அணியின் முன்னணி வீரர்களான சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார, திலகரட்ன டில்ஷான் மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் துடுப்பாட்ட பிரகாசிப்புகளை உதாரணமாக வைத்து, தற்போதைய நிலையில் தான் விளையாடுவதற்கு தகுதியாக இருப்பதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமின்றி, முன்னாள் வீரர்களின் பிரகாசிப்புகளை சுட்டிக்காட்டி, குறித்த வீரர்கள் தங்களுடைய இரண்டாவது பாதியிலேயே சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, குறித்த விடயத்தினை ஏன் தன்னிடம் பார்க்கவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார்.

இறுதியாக குறிப்பிட்ட சந்திமால், எனது முடிவு இதுதான். எனக்கு இப்போது 31 வயது. குறித்த இந்த வயதானது எனது பிரகாசிப்புக்கு தடையல்ல. உயர்தர கிரிக்கெட் விளையாடுவதற்கான உடல்நிலை மற்றும் தகுதியை கொண்டுள்ளேன். எனது பணி கிரிக்கெட் விளையாடுவதுதான். எனது கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையிடம் கலந்துரையாட வேண்டும். எனது எதிர்கால கிரிக்கெட்டை சரிசெய்வதற்கு இந்த சந்திப்பானது மிக முக்கியமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…