மதுசனின் சகலதுறை ஆட்டத்தோடு யாழ். மத்திய கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி

188

19 வயதின் கீழான டிவிஷன் – III பாடசாலை அணிகளான புத்தளம் புனித சேவியர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரின் (இரண்டு நாட்கள் கொண்ட) போட்டி சமநிலை அடைந்ததை அடுத்து முதல் இன்னிங்ஸ் வெற்றிக்கு சொந்தக்காரர்களாக யாழ் வீரர்கள் மாறியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை (26) யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி அடைந்த யாழ் மத்திய கல்லூரி அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை விருந்தினர்களான சேவியர் கல்லூரிக்கு வழங்கியிருந்தனர்.

இதன்படி முதலில் துடுப்பாடியிருந்த புத்தள வீரர்கள் 50 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தம்முடைய முதல் இன்னிங்சில் 185 ஓட்டங்களைக் குவித்திருந்தனர். சேவியர் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ரவிந்து அஞ்சன 76 ஓட்டங்களை சேர்த்திருந்தார். இதேவேளை, யாழ். மத்திய கல்லூரியின் பந்துவீச்சில் A. ஜயதர்சன் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், S. துஷாந்தன் 3 விக்கெட்டுக்களையும், S. மதுசன் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

மதுசங்கவின் கன்னி ஹட்ரிக்கோடு முக்கோண ஒரு நாள் தொடரின் சம்பியனான இலங்கை

தொடர்ந்து பதிலுக்கு தம்முடைய முதல் இன்னிங்சில் துடுப்பாடிய மைதான சொந்தக்காரர்களான யாழ்ப்பாண மத்திய கல்லூரியினர் 197 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். இதில் ஏற்கனவே பந்துவீச்சில் சிறப்பித்திருந்த S. மதுசன் யாழ்ப்பாண அணியின்  துடுப்பாட்டத்தில் தனியொரு நபராக அதிக ஓட்டங்கள் (39) பெற்று தந்திருந்தார். புனித சேவியர் கல்லூரிக்காக ஆகாஷ் நதீஷன் 4 விக்கெட்டுக்களையும், ஹஷேன் மதுசங்க 3 விக்கெட்டுக்களையும் சுருட்டியிருந்தனர்.

பின்னர் சிறிய பின்னடைவு (12 ஓட்டங்கள்) ஒன்றோடு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய சேவியர் கல்லூரி இம்முறை சற்று முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிக்காட்டி இந்த இன்னிங்சில் 53.2 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தங்களது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர். இம்முறை சேவியர் கல்லூரி சார்பான துடுப்பாட்டத்தில் ரவிந்து சஞ்சன (52), தினுஷ அபேசேகர (52) ஆகியோர் அரைச்சதங்களை விளாசியிருந்தனர். மறுமுனையில் S. துஷாந்தன் 4 விக்கெட்டுக்களையும் J. பிரியதர்ஷன் 3 விக்கெட்டுக்களையும் யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் பந்துவீச்சின் சார்பில் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சேவியர் கல்லூரியின் இராண்டாம் இன்னிங்சை அடுத்து யாழ் இளம் வீரர்களுக்கு போட்டியின் வெற்றி இலக்காக 205 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி அணியினர் 25 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்த போது போட்டியின் முடிவு நேரம் வந்தது.

வெஸ்லி கல்லூரியை இலகுவாக வீழ்த்திய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி

இதனால், ஆட்டம் சமநிலை அடைந்தது. போட்டி சமநிலை அடைந்த காரணத்தினால் முதல் இன்னிங்ஸ் புள்ளிகள் அடிப்படையில் யாழ். மத்திய கல்லூரி அணி வெற்றியாளராக மாறிக் கொண்டது. யாழ்ப்பாண அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் முதல் இன்னிங்சில் சகலதுறைகளிலும் பங்களிப்புச் செய்த  S. மதுசன் 69 ஓட்டங்களுடனும், R. ராஜ்கிளின்டன் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

புனித சேவியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 185 (50) – ரவிந்து அஞ்சன 76, A. ஜயதர்சன் 4/15, S. துஷாந்தன் 3/33, S. மதுசன் 2/27

யாழ். மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ் ) – 197 (57.2) – S. மதுசன் 39, R. ராஜ்கிளின்டன் 32, S. கெளதமன் 26, ஆகாஷ் நதீஷன் 4/51

புனித சேவியர் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 216/8d (53.2) – தினுஷ அபயசேகர 52, ரவிந்து அஞ்சன 52, சிதும் சஞ்சன 36, S. துஷாந்தன் 4/53, J. பிரியதர்ஷன் 3/48

யாழ். மத்திய கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 137/3 (25) – S. மதுசன் 69*, R. ராஜ்கிளின்டன் 30*, ஹஷேன் மதுசங்க 3/40

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது. (யாழ். மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)