பாகிஸ்தான் கனிஷ்ட லீக்கில் இரண்டு இலங்கை வீரர்கள்

142

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் கனிஷ்ட லீக் (Pkaistan Junior League) கிரிக்கெட் தொடருக்கு இலங்கையில் இருந்து இரண்டு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களான ஷெவோன் டேனியல் மற்றும் லஹிரு தவடகே ஆகியோர் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அங்குரார்ப்பண பாகிஸ்தான் கனிஷ்ட லீக்கில் விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஷெவோன் மற்றும் லஹிருவுக்கு மேலதிகமாக, இந்தப் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்கு அஞ்சல பண்டார, மல்ஷ தருபதி மற்றும் லஹிரு அபேசிங்க ஆகிய வீரர்களை இலங்கை கிரிக்கெட் சபை பரிந்துரைத்திருந்தது. எனினும் நேறறு முன்தினம் (08) இடம்பெற்ற வீரர்கள் ஏலத்தில் ஷெவான் டேனியல் மற்றும் லஹிரு தவடகே ஆகிய இருவரும் மாத்திரமே அணி உரிமையாளர்களால் வாங்கப்பட்டுள்ளனர்.

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் இடதுகை துடுப்பாட்ட வீரரான ஷெவோன் டேனியலை குஜ்ரன்வாலா ஜயண்ட்ஸ் அணியும், விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான லஹிரு தவடகேவை ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணியும் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதில் மருதானை புனித ஜோசப் கல்லூரி கிரிக்கெட் அணியின் உப தலைவரான ஷெவோன் டேனியல், பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியின் லஹிரு தவடகேவும் தற்போது நடைபெற்று வருகின்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் இடம்பிடித்து விளையாடி வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இது இவ்வாறிருக்க, ஷெவோன் டேனியல் விளையாடவுள்ள குஜ்ரன்வாலா ஜயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சொஹைப் மலிக்கும், லஹிரு தவடகே விளையாடவுள்ள ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணியின் ஆலோசகராக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரரான டெரன் சமியும் செயற்படவுள்ளனர்.

இதனிடையே, அங்குரார்ப்பண பாகிஸ்தான் கனிஷ்ட லீக் தொடரானது ஒக்டோபர் 6 முதல் 21 ஆம் திகதி வரை பாகிஸ்தானில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இம்முறை போட்டித் தொடரில் பஹவல்பூர் ரோயல்ஸ், குஜ்ரன்வாலா ஜயண்ட்ஸ், குவாடர் ஷார்க்ஸ், ஹைதராபாத் ஹண்டர்ஸ், மார்டன் வொரியர்ஸ் மற்றும் ராவல்பிண்டி ரைடர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<