அம்ப்ரிஸின் சதத்துடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த மேற்கிந்திய தீவுகள்

168
AFP

அயர்லாந்து அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சுனில் அம்ப்ரிஸின் அபார சதத்தின் உதவியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக அயர்லாந்து மண்ணில் மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்று வருகின்றது.

தமீம், மொர்தசாவின் அபாரத்தால் மே.தீவுகளை வீழ்த்திய பங்களாதேஷ்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக…

இந்தப் போட்டித் தொடரில் நேற்று (11) டப்ளின் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி, அவ்வணி, தங்களுடைய முதல் விக்கெட்டினை 19 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் மெக்கல்லம் (05), ஷெல்டன் கொட்ரெலின் பந்து வீச்சில், ஷாய் ஹோப்பிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

எனினும், இவரது ஆட்டமிழப்பின் பின் ஜோடி சேர்ந்த போல் ஸ்டேர்லிங் மற்றும் அண்டி போல்பேர்னி ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்.

நிதானமாக ஓட்டங்களை குவித்த இருவரும் 146 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, போல் ஸ்டேர்லிங் 77 ஓட்டங்களுடனும், அடுத்த வந்த அணித் தலைவர் வில்லியம் போர்டர்பீல்ட் 3 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

எனினும், அபாரமாக துடுப்பெடுத்தாடிய அண்டி போல்பேர்னி தனது 4ஆவது ஒருநாள் சதத்தையும், ஒருநாள் அரங்கில் 3000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லையும் கடந்து, கெவின் பிரையனுடன் துடுப்பெடுத்தாடினார். இவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டுக்காக 84 ஓட்டங்களை பகிர்ந்து நம்பிக்கை கொடுத்தனர்.

Photos: ICC Cricket World Cup 2019 – Sri Lanka Squad Preview

ThePapare.com | Waruna Lakmal | 09/05/2019 Editing and re-using images without permission of ThePapare.com…

இவ்விரண்டு வீரர்களினதும் அரைச்சத இணைப்பாட்டத்துடன் அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 327 ஓட்டங்களை குவித்தது.

இதன்போது அண்டி போல்பேர்னி 124 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 135 ஓட்டங்களை விளாசியதோடு, கெவின் பிரையன் 40 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 63 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் ஷெனென் கெப்ரியல் 2 விக்கெட்டுகளையும், ஷெல்டன் கொட்ரெல் மற்றும் ஜொனதன் கார்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பின்னர், 328 ஓட்டம் என்ற சற்று கடினமான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சுனில் அம்ப்ரிஸ் மற்றும் ஷாய் ஹோப் ஜோடி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர்.

முதலிரண்டு லீக் போட்டிகளிலும் சதமடித்து அசத்திய ஷாய் ஹோப் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த டெரன் பிராவோ 17 ஓட்டங்களுடன் ஏமாற்றம் அளித்தார்.

எனினும், அடுத்து ஜோடி சேர்ந்த சுனில் அம்ப்ரிஸ் மற்றும் ரொஸ்டன் சேஸ் ஆகிய இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 128 ஓட்டங்களை பகிர்ந்தனர். ரொஸ்டன் சேஸ் 46 ஓட்டங்களுடனும், ஆரம்பம் முதல் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் அம்ப்ரஸ் 126 பந்துகளில் 148 ஓட்டங்களுடனும் ஆட்டமிந்தனர்.

முதன்முறையாக தனது சொந்த அணிக்கு திரும்பிய பொல்லார்ட்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின்…

எனினும், ஐந்தாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஜொனதன் கார்டர் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரது நிதான ஆட்டத்தின் உதவியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி 47.5 ஓவர்கள் நிறைவில் 331 ஓட்டங்களை பெற்று அபார வெற்றியைப் பெற்றுக்கொண்டது. அத்துடன், ஒருநாள் அரங்கில் மேற்கிந்திய தீவுகள் அணி 300 ஓட்டங்களை துரத்தியடித்து பெற்றுக்கொண்ட 2ஆவது வெற்றியாகவும் இது பதிவாகியது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ஜொனதன் கார்டர் 27 பந்துகளில் 43 ஓட்டங்களையும், ஹேசன் ஹோல்டர் 24 பந்துகளில் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். அயர்லாந்து அணி பந்துவீச்சு சார்பில் முன்னாள் இங்கிலாந்து வீரர் பெய்ட் ரென்கின் 3 விக்கெட்டுகளை விழ்த்தியிருந்தார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சுனில் அம்ப்ரிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்படி, இப்போட்டியின் முடிவில் புள்ளிகள் பட்டியலில். மேற்கிந்திய தீவுகள் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பங்களாதேஷ் அணி 3 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

அயர்லாந்து அணி, 2 போட்டிகளில் விளையாடி, அவை இரண்டிலும் தோல்வியடைந்து 2 புள்ளிகளுடன் இறுதி இடத்தில் உள்ளது.

இந்த தொடரின் அடுத்தப் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியும் பங்களாதேஷ் அணியும் நாளை (13) டப்ளின் மைதானத்தில் மோதவுள்ளன.

போட்டியின் சுருக்கம்

அயர்லாந்து அணி – 327/5 (50) – அண்டி போல்பேர்னி 135, போல் ஸ்டேர்லிங் 77, கெவின் பிரையன் 63, ஷெனென் கேப்ரியல் 2/47, ஜொனதன் கார்டர் 1/19, ஷெல்டன் கொட்ரல் 1/67

மேற்கிந்திய தீவுகள் அணி – 331/5 (47.5) – சுனில் அம்ப்ரிஸ் 148, ரொஸ்டன் சேஸ் 46, ஜொனதன் கார்டர் 43, ஜேசன் ஹோல்டர் 36, பெய்ட் ரென்கின் 3/65

முடிவு மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<