தமீம், மொர்தசாவின் அபாரத்தால் மே.தீவுகளை வீழ்த்திய பங்களாதேஷ்

164
BCB official tweet

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டப்ளினில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரின் 2ஆவது லீக் ஆட்டத்தில் தமீம் இக்பாலின் அபார துடுப்பாட்டம் மற்றும் அணித் தலைவர் மஷ்ரபி மொர்தசாவின் அசத்தல் பந்துவீச்சினால் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியைப் பதிவு செய்தது.

மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது அயர்லாந்தில் நடைபெற்று வருகின்றது.  

நேற்றுமுன்தினம் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது லீக் போட்டியில் தொடக்க வீரர்களான ஷாய் ஹோப் மற்றும் ஜோன் கெம்பெல் ஆகியோரது சாதனை இணைப்பாட்டத்துடன் 196 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியீட்டியது.  

365 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்த மேற்கிந்திய தொடக்க ஜோடி

அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் ……….

இந்த நிலையில், நேற்று (07) நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும், பங்களாதேஷ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி அவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சுனில் எம்ப்ரிஸ் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் சிறந்ததொரு ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

இருவரும் 89 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, சுனில் எம்ப்ரெஸ் 38 ஓட்டங்களுடன் மெஹன்தி ஹசனின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டெரன் பிராவோ 2 ஓட்டங்களுடனும் வெளியேறினார்.

இவரது ஆட்டமிழப்புக்கு பின்னர் ஷாய் ஹோப்புடன் ஜோடி சேர்ந்த ரொஸ்டன் சேஸ் நிதானமாக ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர். எனினும் மஷ்ரபி மொர்தசாவின் பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸ் (51), முஸ்தபிசூர் ரஹ்மானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரது ஆட்டமிழப்பை தொடர்ந்து நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்த ஷாய் ஹோப் இந்தத் தொடரில் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்த நிலையில், மீண்டும் மொர்தசாவின் பந்துவீச்சில் (109) வெளியேறினார்.  

இவ்விரண்டு வீரர்களினதும் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதையடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓட்டவேகம் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் அந்த அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 261 ஓட்டங்களை எடுத்தது.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில் அபாரமாக பந்து வீசிய மஷ்ரபி மொர்தசா 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, மொஹமட் சைபுதீன் மற்றும் முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் 262 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு தமீம் இக்பால் மற்றும் சௌம்ய சர்கார் ஜோடி நல்லதொரு ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 144 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த போது சௌம்ய சர்கார் 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் தமீம் இக்பாலுடன் ஜோடி சேர்ந்த சகிப் அல் ஹசன் இரண்டாவது விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பி நம்பிக்கை கொடுத்தார். இருவரும் 52 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, தமீம் இக்பால் 80 ஓட்டங்களுடன் ஷெனென் கேப்ரியலின் பந்தில் ஆட்டமிழந்தார்.

எனினும், தொடர்ந்து களத்தில் இருந்த சகிப் அல் ஹசன், தனது 41 ஆவது ஒருநாள் அரைச் சதத்தை கடந்து, முஸ்பிகுர் ரஹீமுடன் துடுப்பெடுத்தாடினார். இவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களை பகிர்ந்து பங்களாதேஷ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

சென்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த மும்பை

ஐ.பி.எல். தொடரில் நேற்று (07) நடைபெற்ற …….

இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய சகிப் அல் ஹசன் 61 ஓட்டங்களையும், முஸ்பிகுர் ரஹீம் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இறுதியில் பங்களாதேஷ் அணி 45 ஓவர்கள் நிறைவில் 264 ஓட்டங்களை பெற்று இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸ் மற்றும் ஷெனென் கெப்ரியல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதேநேரம், முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் நாளை (9) விளையாடவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் அணி – 261/9 (50) – ஷாய் ஹோப் 109, ரொஸ்டன் சேஸ் 51, சுனில் எம்ப்ரிஸ் 38, ஷ்ரபி மொர்தசா 3/49, மொஹமட் சைபுதீன் 47/2, முஸ்தபிசூர் ரஹ்மான் 84/2, சகிப் அல் ஹசன் 33/1, மெஹன்தி ஹசன் மீராஸ் 38/1

பங்களாதேஷ் அணி – 264/2 (45) – தமீம் இக்பால் 80, சௌம்ய சர்கார் 73, சகிப் அல் ஹசன் 61, முஸ்பிகுர் ரஹீம் 32, ரொஸ்டன் சேஸ் 51/1, ஷெனென் கேப்ரியல் 58/1

முடிவுபங்களாதேஷ் அணி எட்டு விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<