சகோதரர்களின் சமர் டி-20 போட்டியிலும் தர்ஸ்டன் கல்லூரிக்கு வெற்றி

94

தர்ஸ்டன் மற்றும் இசிபதன கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த டி20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த தர்ஸ்டன் கல்லூரி அணி, 52 ஓட்டங்களால் இசிபத கல்லூரி அணியை வீழ்த்தியது.

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நேற்று (20) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்ஸ்டன் கல்லூரி அணியின் தலைவர் சந்தரு டயஸ் முதலில் துடுப்பாட தீர்மானித்தார்.

சகோதரர் சமரில் தர்ஸ்டன் கல்லூரி 27 ஆண்டுகளின் பின் வெற்றி

இசிபத்தன ….

இதன்படி, துடுப்பாடக் களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியில் சிறப்பான ஆரம்பத்தினை பெற்றுக்கொண்ட தர்ஸ்டன் கல்லூரிக்கு அவ்வணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யொஹான் லியனகே பெறுமதி மிக்க 41 ஓட்டங்களை அணிக்காக சேர்த்து நம்பிக்கை கொடுத்தார்.

பின்னர், தர்ஸ்டன் கல்லூரி அணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கிய பவந்த ஜயசிங்க ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 43 ஓட்டங்களுடன் தர்ஸ்டன் கல்லூரி அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 144 என்ற ஓட்ட எண்ணிக்கையை குவித்துக்கொண்டது.

Photos: Thurstan College vs Isipathana College | 12th T20 Encounter

இசிபதன கல்லூரியின் பந்து வீச்சாளர்களில் சிறப்பாக செயற்பட்டிருந்த யசிரு கஸ்தூரியாரச்சி 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், கங்கன லங்காதிலக 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர், 145 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை 20 ஓவர்களில் பெறுவதற்கு மைதானம் விரைந்த இசிபதன கல்லூரி அணி, எதிரணி பந்து வீச்சினால் திணறடிக்கப்பட்டு முடிவில், 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 92 ஓட்டங்களினை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இசிபதன கல்லூரியின் துடுப்பாட்டத்தில் தனியொருவராக நின்று போராடிய இடதுகை துடுப்பாட்ட வீரர் எஷான் பெர்னாண்டோ 30 ஓட்டங்களை அதிகபட்சமாக அவரது அணிக்காக பெற்றிருந்தார்.

பந்து வீச்சில், வலதுகை சுழல் பந்துவீச்சாளர் யொஹான் லியனகே 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்து தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், போட்டியன் சிறந்த களத்தடுப்பாளருக்கான விருதை இசிபதன கல்லூரியின் காலிக் அமாத்தும், சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை தர்ஸ்டன் கல்லூரியின் பவந்த ஜயசிங்கவும், சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை இசிபதன கல்லூரியைச் சேர்ந்த யசிரு கஸ்தூரியாரச்சியும் பெற்றுக்கொண்டனர்.

இசிபதன கல்லூரியை ஒருநாள் போட்டியிலும் வீழ்த்திய தர்ஸ்டன் கல்லூரி

தர்ஸ்டன் மற்றும் இசிபதன கல்லூரிகளுக்கு ….

இதேநேரம், போட்டியின் ஆட்டநாயன் விருதை தர்ஸ்டன் கல்லூரியின் யொஹான் லியனகே பெற்றுக்கொண்டார்.

இதன்படி, இம்முறை சகோதரர்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் தொடரில் இசிபதன கல்லூரி அணியை 27 வருடங்களுக்குப் பிறகு வீழ்த்தி வரலாறு படைத்த தர்ஸ்டன் கல்லூரி அணி, W A De சில்வா கிண்ணத்துக்கான 39 ஆவது சகோதரர்களின் சமர் ஒருநாள் போட்டியையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்டன் கல்லூரி – 144 (20) – பவந்த ஜயசிங்க 43*, யொஹான் லியனகே 41, ஜயவிஹான் மஹவிதான 26, யசிரு கஸ்தூரியாரச்சி 4/30, கங்கன லங்காதிலக 3/26

இசிபதன கல்லூரி – 92 (18.2) – எஷான் பெர்னாண்டோ 30, யொஹான் லியனகே 4/25

முடிவு – தர்ஸ்டன் கல்லூரி அணி 52 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<