இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் இணைக்கப்பட்ட திரிமான்ன, சந்தகன்

1573
Thirimanne & Sandakan

காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை அடுத்து அசேல குணரத்ன மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தொடர் காயங்களுக்கு உள்ளான நிலையில் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்ன மற்றும் சுழற்பந்து வீச்சாளர் க்ஷான்  சந்தகன் ஆகியோர் இலங்கை டெஸ்ட் குழாத்திற்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தனது கட்டை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளமையினால் அசேல குணரத்னவுக்கு இரண்டு மாதங்களுக்கு போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது தனது இடது கை நடுவிரலில் காயத்திற்கு உள்ளான ரங்கன ஹேரத் இரண்டாவது டெஸ்டில் விளையாடுவதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது.

குனதிலக்கவுக்குப் பதிலாக அணியில் சந்திமால் : ஹேரத்தின் நிலை குறித்து சந்தேகம்

கிரிக்கெட் வீரர்கள் தகுதிபெற்ற ஊழியர்களாக இருப்பதற்கு தகுதியுடையவர்களாக…

வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் முதுகு தசைப்பிடிப்பால் அவதிப்படும் நிலையில் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இதனை ThePapare.com இடம் உறுதி செய்த அணி முகாமையாளர் அசங்க குருசிங்க, “அவர் தனது முதுகுப்பகுதியில் வலி இருப்பதாக கூறியிருக்கும் நிலையில் உண்மையில் அது ஒரு காயம் என்பதை விட ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டது” என்றார்.

எனினும், காலி டெஸ்ட் ஆரம்பிப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன் நிமோனியா காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் முதல் டெஸ்டில் விளையாடாத அணித் தலைவர் தினேஷ் சந்திமால் அணிக்கு திரும்பி இருப்பது இலங்கை அணிக்கு நட்செய்தியாகவே உள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு கன்னி டெஸ்டில் விளையாடிய திரிமான்ன துடுப்பாட்டத்தில் 26 டெஸ்ட்களில் 24 ஓட்ட சராசரியை பெற்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு லோட்ஸ் டெஸ்டுக்குப் பின்னர் அவர் இலங்கை டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இந்தியாவுடனான பயிற்சிப் போட்டியில் திரிமான்ன 59 ஓட்டங்களை பெற்று தற்போது தனது தகுதியை நிரூபித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சந்தகன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அண்மையில் முடிந்த ஜிம்பாப்வே அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் அவர் கடைசியாக இலங்கை அணிக்காக விளையாடி இருந்தார்.  

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி SSC மைதானத்தில் வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. எனவே, தொடரை சமப்படுத்துவதற்கு  இந்த டெஸ்ட்டில் இலங்கை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.