குனதிலக்கவுக்குப் பதிலாக அணியில் சந்திமால் : ஹேரத்தின் நிலை குறித்து சந்தேகம்

1739
Chandimal declared fit, Herath doubtful for 2nd Test

நிமோனியா காய்ச்சல் காரணமாக இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியிருந்த இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தற்பொழுது உடல் நலம் பெற்றுள்ளார். எனவே, எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணிக்கு திரும்பும் அவர் இலங்கை அணியை வழி நடாத்தவுள்ளார்

இது குறித்து thepapare.com இற்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய, தினேஷ் சந்திமால் பூரண உடல் தகுதியை பெற்றுள்ளதால் இந்திய அணிக்கெதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதற்கு தயாராக உள்ளார். கடந்த சில நாட்களாக பயிற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் தனுஷ்க குனதிலக்கவுக்குப் பதிலாக அவர் அணியில் இடம்பெறவுள்ளார்” என்று குறிப்பிட்டார்.

இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக உள்ள அண்மைக்கால தொடர் உபாதைகள்

கிரிக்கெட் வீரர்கள் தகுதிபெற்ற ஊழியர்களாக இருப்பதற்கு தகுதியுடையவர்களாக…

ஏற்கனவே இடம்பெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 304 ஓட்டங்களால் படு தோல்வியுற்று தொடரில் 0-1 என பின்னிலையில் உள்ளது. இந் நிலையில், கட்டை விரலில் காயமுற்று குறித்த போட்டியிலிருந்து விலகிய அசேல குனரத்னவுக்குப் பதிலாக யாரை தெரிவு செய்துள்ளார்கள் என்று ஜயசூரிய தலைமையிலான தெரிவுக்குழு இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

அதேவேளை, தினேஷ் சந்திமாலுக்குப் பதிலாக முதலாவது டெஸ்ட் போட்டியில் அணியை வழிநடாத்திய ரங்கன ஹேரத் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது பெருவிரலில் ஏற்றப்பட்ட காயம் காரணமாக களத்திலிருந்தது வெளியேறியிருந்ததுடன் இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடவும் களமிறங்கவில்லை.  

இது குறித்து ESPNCricinfo இடம் கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர், ”பெருவிரலில் அடிபட்டுள்ளதால் கடும் வேதனையுடன் இருக்கும் அவர் அடுத்து வரும் இரு தினங்களுக்குள் குறித்த காயத்திலிருந்து நலம் பெறுவாரா என்று பார்க்க வேண்டும்.  இறுதி நிமிடம் வரை நேரம் கொடுத்துள்ளோம். போட்டிக்கு முதல் நாள் அவரால் பந்து வீச முடியுமா என்று பார்க்கவுள்ளோம்.   

அவரது விரலில் வீக்கமில்லை. ஆனால் அவரால் கடும் வலியை உணர முடிகின்றது. வலியில்லாமல் அவரால் விளையாட முடியமென்றால் அணியில் இணைத்துக்கொள்வோம். அல்லது, வேறு பந்து வீச்சாளர்கள் குறித்து ஆலோசிப்போம்” என்றார்.