சிறந்த பந்து வீச்சு, துடுப்பாட்டம் என்பவற்றால் தர்ஸ்டன் கல்லூரி அணி வலுவான நிலையில்

758
De Mazenod vs Thurstan

19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளிற்கு இடையிலான ‘சிங்கர்’ கிரிக்கெட் தொடரின் தர்ஸ்டன் கல்லூரி மற்றும் டி மெசனோட் கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டியில் இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது சிறப்பான துடுப்பாட்டம், பந்து வீச்சு என்பவற்றை வெளிப்படுத்திய தர்ஸ்டன் கல்லூரி அணியினர் வலுவான நிலையில் உள்ளனர்.

குழு D இல் உள்ள இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இன்று கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தர்ஸ்டன் கல்லூரி அணித்தலைவர் முதலில் டி மெசனோட் கல்லூரி அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இதன்படி, இரண்டு நாட்கள் கொண்ட இந்த போட்டியின் முதல் இன்னிங்சினை டி மெசனோட் கல்லூரி அணியினர் ஆரம்பித்தனர்.

தர்ஸ்டன் கல்லூரி அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறிய டி மெசனோட் கல்லூரி அணியினர் ஆரம்பம் முதலே ஓட்டங்கள் பெறுவதற்கு துன்பப்பட்டனர்.

இதனால், அடுத்தடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுத்ததன் காரணமாக 35.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தங்களது முதல் இன்னிங்சிற்காக 100 ஓட்டங்களை மாத்திரமே டி மெசனோட் கல்லூரி அணியினர் பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் ஏனைய வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் சங்கீத் தேசன் அதிகபட்சமாக 28 ஓட்டங்களையும், இரோஷ் டி சில்வா 26 ஓட்டங்களையும் டி மெசனோட் கல்லூரி அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் தர்ஸ்டன் கல்லூரி அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய இமேஷ் தில்ஷான் 7 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். இவருடன், குறைந்த மொத்த ஓட்ட எண்ணிக்கைக்குள் டி மெசனோட் கல்லூரி அணியை கொண்டுவர உதவிய நவீன் குணரத்னவும் 26 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து தங்களது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த தர்ஸ்டன் கல்லூரி அணியினர், ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடி இன்றைய ஆட்ட நேர முடிவின்போது 53 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 203 ஓட்டங்களை குவித்திருந்தனர். துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட நிமேஷ் லக்ஷன் 85 ஓட்டங்களையும், சவான் பிரபாஸ் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து தமது அணிக்கு வலுச்சேர்த்தனர்.

பந்து வீச்சில் டி மெசனோட் கல்லூரி வீரர்கள் பெரிதாக செயற்படவில்லை. எனினும், அவ்வணிக்காக அஷன் பெர்னாந்து மாத்திரம் 55 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஆறுதல் அளித்தார்.

முதல் இன்னிங்சில், தர்ஸ்டன் கல்லூரி அணி 103 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கும் நிலையில், போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளைய நாள் தர்ஸ்டன் கல்லூரி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்றே அதிகமானவர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியின் சுருக்கம்

டி மெசனோட் கல்லூரி: 100/10(35.5) – சங்கீத் தேசன் 28, இரோஷ் டி சில்வா 26, இமேஷ் தில்ஷான் 4/7, நவீன் குணவர்தன 4/26

தர்ஸ்டன் கல்லூரி: 203/4(53) – நிமேஷ் லக்ஷன் 85, சவான் பிரபாஸ் 76, அஷன் பெர்னாந்து 2/55