இலங்கைக்கு கௌரவம் பெற்றுக் கொடுக்கும் பெண் போட்டி மத்தியஸ்தர்

94

19 வயதின் கீழ்ப்பட்ட மகளிர் அணிகளுக்காக முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு போட்டி மத்தியஸ்தராக (Match Referee) செயற்படும் வாய்ப்பினை இலங்கையைச் சேர்ந்த வனேஸ்ஸா டி சில்வா பெற்றிருக்கின்றார்.

>> ஜப்னா அணியை பந்துவீச்சில் மிரட்டிய விஷ்வ, அசித

இதன் மூலம் வனேஸ்ஸா டி சில்வா உலகக் கிண்ணத் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டிக்கு மத்தியஸ்தம் செய்கின்ற பொறுப்பினை பெற்ற முதல் இலங்கை பெண்ணாக சாதனை செய்திருக்கின்றார்.

அதேவேளை வனேஸ்ஸா டி சில்வாவுடன் இணைந்து தென்னாபிரிக்காவில் நடைபெறும் இளையோர் மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, பங்களாதேஷின் நீயமூர் ரஷீட் மற்றும் ஜிம்பாப்வேயின் ஓவேன் சிரோம்பே ஆகியோர் போட்டி நடுவர்களாக செயற்படுகின்றனர்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையான வனேஸ்ஸா டி சில்வா கிரிக்கெட் போட்டிகளை மத்தியஸ்தம் செய்வதற்கு முன்னர் தனது தாயக அணியினை 14 சர்வதேச போட்டிகளில் (1 மகளிர் டெஸ்ட், 13 மகளிர் ஒருநாள் போட்டிகள்) பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன் வனேஸ்ஸா டி சில்வாவே இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முதல் தலைவியாக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> ஐசிசியின் சிறந்த மகளிர் T20I அணியில் இடம்பெற்ற இனோகா ரணவீர

இதேநேரம் 19 வயதின் கீழ்ப்பட்ட மகளிர் அணிகளுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் இன்று நடைபெறவுள்ளதோடு, தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இளையோர் மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்து வீரர்களை எதிர்கொள்ள மற்றைய அரையிறுதி இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையில் நடைபெறுகின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<