உலகக் கிண்ண வெற்றிக்கு ரங்கன ஹேரத் திருப்புனை ஏற்படுத்திய நாள்

64
Getty Images

மார்ச் 31, 2014ஆம் திகதி என்பது இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் எவருக்கும் மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்திருந்தது. ஏனெனில், குறித்த நாளில் இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் மிகப் பெரும் கவலையினையும், எண்ணிலடங்காத சந்தோஷத்தினையும் அனுபவித்திருந்தனர்.  

ஸ்மித்தின் தலைமைப் பதவிக்கான இரண்டு வருட தடைக்காலம் முடிவு

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு வருடங்கள் ……….

மேற்குறிப்பிட்ட திகதியில் இலங்கை அணியும், நியூசிலாந்து அணியும் 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தின் குழு நிலைப் போட்டி ஒன்றில் பங்களாதேஷில் வைத்து மோதின. நியூசிலாந்து அணிக்கு எதிரான குழுநிலை மோதல் 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிட்டத்தட்ட காலிறுதிப் போட்டி போன்றே அமைந்திருந்தது. ஏனெனில், இந்த மோதலில் வெற்றி பெற்றால் மாத்திரமே இலங்கை அணி, 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற ஒரு இக்கட்டான நிலை இருந்தது.

இப்போட்டியில் லசித் மாலிங்கவினால் வழிநடாத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி, அப்போதைய இலங்கையின் மாய சுழல் வீரர் அஜந்த மெண்டிஸிற்குப் பதிலாக 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடாத இடதுகை சுழல் வீரர் ரங்கன ஹேரத்தினை களமிறக்கியிருந்தது. குறித்த போட்டிக்கு முன்னர் ரங்கன ஹேரத் கூட தான் T20 கிரிக்கெட் வரலாறு கண்ட மிகச் சிறந்த பந்துவீச்சுப் பிரதி ஒன்றினை தான் பதியப் போகின்றேன் என  நினைத்திருக்க மாட்டார். 

தொடர்ந்து, போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணியினர் மிகவும் மோசமான துடுப்பாட்டத்துடன் வெறும் 120 ஓட்டங்களையே வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தனர். இலங்கை அணியின் வெற்றி இலக்கு, இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாகவும், கவலையாகவும் மாறியிருந்தது. அப்போது, கேன் வில்லியம்சன் அடங்கலாக பிரன்டன் மெக்கலம், மார்டின் கப்டில், ரொஸ் டெய்லர் போன்ற T20 விளையாட்டு இனம்கண்ட சிறந்த துடுப்பாட்டவீரர்களை கொண்ட நியூசிலாந்து அணிக்கு 120 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கு மிகவும் இலகுவானதாகும்.

இன்னும் ஒரு வகையில் கூறினால், நியூசிலாந்து துடுப்பாட்டவீரர்களுக்கு 120 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கு, இலங்கை பந்துவீச்சாளர்கள் தரும் இலவச பௌண்டரி பயிற்சியாகும். இலங்கை மிகவும் தீர்க்கமான போட்டியொன்றில், இவ்வாறு குறைவான வெற்றி இலக்கினை நிர்ணயம் செய்தது 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் முடிவு என்றே பலரும் நம்பினர். ஆனால், நடந்தது வேறு. 

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்கிற்கான பயணத்தில் முதல் மூன்று ஓவர்களுக்கும் எந்தவித விக்கெட்டுக்களையும் பறிகொடுக்காமல், நியூசிலாந்து அணி 18 ஓட்டங்களுடன் மிகச் சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றது. ஆனால், போட்டியின் நான்காவது ஓவரினை வீசினார் ரங்கன ஹேரத். 

நியூசிலாந்து அணி போட்டியின் நான்காவது ஓவரில் ரன் அவுட் முறையில் மார்டின் கப்டிலின் விக்கெட்டினைப் பறிகொடுத்தது. கேன் வில்லியம்சனுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களம் வந்த கப்டில், வெறும் 5 ஓட்டத்துடன் வெளியேறினார். இந்த ரன் அவுட்டுக்கு உதவியாக இருந்த ஹேரத், தனது முதல் ஓவரிலேயே நியூசிலாந்து அணியின் அணித்தலைவரும் அவ்வணியின் சிறந்த துடுப்பாட்ட வீரருமான, பிரன்டன் மெக்கலமின் விக்கெட்டினை ஓட்டமேதுமின்றி கைப்பற்றினார். அதோடு, நியூசிலாந்து அணியின் சரிவும் ஆரம்பமாகியது. 

தொடர்ந்து, ரங்கன ஹேரத் போட்டியில் தனது இரண்டாவது ஓவரில் ரொஸ் டெய்லர், ஜிம்மி நீஷம் ஆகியோரின் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து கைப்பற்றினார். இதனால், இலகுவான வெற்றி இலக்கு ஒன்றினை நோக்கிச் சென்ற நியூசிலாந்து அணி 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இதோ… போட்டியும் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. 

போட்டியினை விறுவிப்பாக மாற்றிய ரங்கன ஹேரத், நியூசிலாந்து அணியின் மற்றுமொரு சிறந்த துடுப்பாட்டவீரரான லூக் ரோன்ச்சியின் விக்கெட்டினை தனது மூன்றாவது ஓவரில் கைப்பற்றினார். அதனால், போட்டியின் போக்கு இலங்கை அணியின் பக்கம் சாய்ந்தது. ரோன்ச்சியின் விக்கெட்டுடன் நியூசிலாந்து அணி 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டது. 

இதன் பின்னர், சசித்ர சேனநாயக்கவின் சுழலுக்கு தடுமாறிய நியூசிலாந்து  அணி இன்னும் இரண்டு விக்கெட்டுக்களை பறிகொடுத்து மிகவும் இக்கட்டான நிலைக்குச் சென்றது. அதாவது, நியூசிலாந்து அணி 51 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

வடக்கு மக்களுக்காக உதவிக் கரம் நீட்டும் சங்கா, மஹேல

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார………

ஆட்டம் இலங்கை அணிக்கு முழுமையாக சாதகமாகிய நிலையில், போட்டியின் 16ஆவது ஓவரினையும் தனது இறுதி ஓவரினையும் வீச ஹேரத் களம் வந்தார். ஹேரத் தனது முன்னைய ஓவர்கள் மூலம் நியூசிலாந்து அணிக்கு மிகப் பெரிய சேதத்தை விளைவித்த போதிலும், நியூசிலாந்து அணிக்காக தனியொருவராக போராடிய கேன் வில்லியம்சன் இலங்கை அணிக்கு இப்போட்டியில் சிறிய அச்சுறுத்தலாக அமைந்திருந்தார்.

தொடர்ந்து, கேன் வில்லியம்சனின் விக்கெட் அஞ்சலோ மெதிவ்ஸின் ரன் அவுட் காரணமாக பறிபோனது. இதனால், கேன் வில்லியம்சன் 42 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்து சென்றார். இலங்கை இரசிகர்களுக்கு மிகப் பெரும் ஆறுதல் கிடைத்தது. வில்லியம்சனின் விக்கெட்டினை அடுத்து மத்திய வரிசை துடுப்பாட்டவீரரான கோரி அன்டர்சன் உபாதை காரணமாக துடுப்பெடுத்தாட வராத நிலையில் நியூசிலாந்து அணிக்கு கடைசி விக்கெட் மாத்திரமே எஞ்சியிருந்தது. இந்த இறுதி விக்கெட்டினை தனது இறுதி ஓவரில் ட்ரென்ட் போல்டினை ஆட்டமிழக்கச் செய்து கைப்பற்றினார் ரங்கன ஹேரத்.

ரங்கன ஹேரத்தின் மாய சுழலினால் நியூசிலாந்து அணி வெறும் 120 ஓட்டங்கள் மாத்திரமே வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட போட்டியில் 60 ஓட்டங்களுடன் சுருண்டு படுதோல்வியடைந்தது. இப்போட்டியில் அடைந்த தோல்வியினால் நியூசிலாந்து 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி இறுதியில், உலகக் கிண்ண வெற்றியாளர்களாகவும் மாறியது. 

இவ்வாறு நியூசிலாந்து அணிக்கு எதிரான தனது பந்துவீச்சு மூலம் ஹேரத் வெறும் 3 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி T20 உலகக் கிண்ண வரலாற்றில் மிகச் சிறந்த பந்துவீச்சு ஒன்றினையும் பதிவு செய்ததோடு, இலங்கையின் T20 உலகக் கிண்ண நாயகனாகவும் மாறினார்.

ஹேரத் இலங்கையின் T20 உலகக் கிண்ண நாயகனாக மாறிய நாள் இன்று……!

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<