உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 5 புள்ளிகளை இழந்த இங்கிலாந்து அணி

The Ashes – 2021-22

179
Getty Image
 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட இங்கிலாந்து அணிக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 100 சதவீத அபராதத்தை ஐசிசி விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1 இற்கு 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இப்போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த அணி வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் இருந்து 100 சதவீதத்தையும் அபராதமாக ஐ.சி.சி விதித்துள்ளது.

இதில் இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் ஐந்து ஓவர்கள் பின்தங்கியதாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி இன் விதிமுறைகளின் படி, குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசத் தவறிய ஒவ்வொரு ஓவர்களுக்கும் வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

இதன்பபடி, இங்கிலாந்து அணி வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 100 சதவீத அபராதம் விதிக்க போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும், ஐசிசி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி பெற்ற புள்ளிகளிலிருந்து மேலும் 5 புள்ளிகளைக் குறைப்பதற்கும் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் 14 புள்ளிகளுடன் இருந்த இங்கிலாந்து அணி, தற்போது 5 புள்ளிகளை இழந்து 9 புள்ளிகளை மட்டுமே பெற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன், இங்கிலாந்து அணியின் புள்ளிகள் சதவீதமும் 23.33 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே, ஐசிசி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி தற்போது 6 ஆவது இடத்தில் இருந்து 7 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இவ்வாறு புள்ளிகள் குறைக்கப்படும் அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது என்பது சற்று கடினமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அவுஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இலங்கை அணி தொடர்ந்து முதலிடத்திலும் பாகிஸ்தான் அணி 3 ஆவது இடத்திலும், இந்தியா 4 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இந்தப் போட்டியில் சதமடித்து அசத்திய அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி, அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கவும் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<