ஆசிய சவால் கிண்ணத்தின் அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை

175

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்று வரும் ஆடவருக்கான ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்ட போட்டித் தொடரின் காலிறுதியில், ஐக்கிய அரபு இராச்சிய அணியை வீழ்த்திய இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

ஆசியாவில் கரப்பந்தாட்ட தரவரிசையில் பின்தங்கியிருக்கும் 8 அணிகள் இந்த போட்டித் தொடரில் மோதி வருகின்றன. இதன் முதல் சுற்றுப்போட்டிகள் 17 ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையில், இன்றைய தினம் காலிறுதிப் போட்டிகள் ஆரம்பமாகின.

சவூதியிடம் தோல்வியடைந்தும் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இலங்கை

இதில் தங்களது லீக் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி, ஹொங்கொங் மற்றும் மலேசிய அணிகளை வீழ்த்தியதுடன், சவூதி அரேபிய அணிக்கு எதிரான இறுதி குழுநிலைப் போட்டியில் 1-3 என்ற செட்கள் கணக்கில் தோல்வியடைந்தது. எனினும் ஆறு செட்கள் வெற்றியுடன் A குழுவின் இரண்டாவது இடத்தை பிடித்திருந்த இலங்கை அணி காலிறுதிக்கான வாய்ப்பை உறுதிசெய்திருந்தது.

இதன் அடிப்படையில், இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணியை எதிர்கொண்ட இலங்கை ஆடவர் அணி, 3-0 என்ற நேர் செட்கள் கணக்கில் வெற்றிபெற்றது. இன்றைய போட்டியில் சவூதி அரேபிய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் உபாதைக்கு உள்ளாகியிருந்த தீப்தி ரொமேஷ், லசிந்து மெதமல் மற்றும் வசந்த லக்மால் ஆகியோர் விளையாடியிருந்தனர்.

போட்டியின் ஆரம்ப செட்டில் ஐக்கிய அரபு இராச்சிய அணி தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தியது. முதல் தொழிநுட்ப இடைவேளையில் அந்த அணி 8-7 என முன்னிலை பெற்றிருந்தது. இதே முன்னிலை தொடர்ந்த போதிலும் 17 ஆவது புள்ளியிலிருந்து இலங்கை அணி தங்களது முன்னிலையை ஆரம்பித்தது. இறுதியில் 25-20 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை முதல் செட்டை வெற்றிகொண்டது.

பின்னர் ஆரம்பித்த இரண்டாவது செட்டின் முதல் பகுதியில் இரண்டு அணிகளும் சமபலமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. சமநிலையான புள்ளிகளுடன் செட்டின் முதல் பகுதி நகர, இரண்டாவது பகுதியில் இலங்கை அணி புள்ளிகளை அதிகரித்துக்கொள்ள ஆரம்பித்தது. இதன் அடிப்படையில், முதல் செட்டை விட இலகுவாக செட்டின் வெற்றியை நெருங்கிய இலங்கை 25-17 என வெற்றிபெற்று, போட்டியில் 2-0 என முதன்மை பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டை முழுமையாக தங்கள் பக்கம் திருப்பிய இலங்கை அணி, ஐக்கிய அரபு இராச்சிய அணியை 10 புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, 25-15 என செட்டை கைப்பற்றியது. இதன்படி 25-20, 25-17 மற்றும் 25-15 என்ற நேர் செட்கள் கணக்கில் வெற்றிபெற்ற இலங்கை அணி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

இலங்கையில் முதற்தடவையாக நடைபெறவுள்ள சர்வதேச பேஸ்போல் தொடர்

இன்றைய போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை ஆடவர் அணி, நாளைய தினம் (20) தங்களுடைய அரையிறுதிப் போட்டியில், ஈராக் அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஈராக் அணி இன்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் மலேசிய அணியை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய போட்டி முடிவுகள்

சவூதி அரேபியா எதிர் மொங்கோலியா

  • சவூதி அரேபிய அணி 3 – 0 என்ற நேர் செட்கள் கணக்கில் வெற்றி
  • செட் புள்ளிகள் : 25-17, 25-17, 25-15

மலேசியா எதிர் ஈராக்

  • ஈராக் 3 – 1 என்ற செட்கள் கணக்கில் வெற்றி
  • செட் புள்ளிகள் : 25-27, 25-21, 25-23, 25-20

ஹெங்கொங் எதிர் பங்களாதேஷ்

  • பங்களாதேஷ் அணி 3 – 0 என்ற நேர் செட்கள் கணக்கில் வெற்றி
  • செட் புள்ளிகள் : 25-22, 25-20, 25-16

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<