இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் பதினொருவர் அணி என்பவற்றுக்கு இடையில் இன்று ஆரம்பமான இரண்டு நாட்களைக் கொண்ட பயிற்சிப் போட்டியில், அபாரப் பந்து வீச்சை மேற்கொண்ட இந்திய அணியினர் இலங்கைத் துடுப்பாட்ட வீரர்களை தடுமாறச் செய்தனர்.
கொழும்பு கிரிக்கெட் கழக (CCC) மைதானத்தில் ஆரம்பமாக இந்த பயிற்சிப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் பதினொருவர் அணியின் தலைவர் லஹிரு திரிமான்ன முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் வாரிய அணியின் முதல் விக்கெட் வெறும் 9 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.
இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் சந்திமால்
மொஹமட் சமியின் பந்து வீச்சில் கௌஷல் சில்வா நான்கு ஓட்டங்களை பெற்றிருந்த வேளை விக்கெட் காப்பாளர் விர்த்திமான் ஷாஹவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். எனினும் அவரைத் தொடர்ந்து, தனுஷ்க குணதிலக்கவுடன் இணைந்த அணித் தலைவர் திரிமான்ன, இரண்டாம் விக்கெட்டுக்காக 130 ஓட்டங்களை பகிர்ந்து, அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றார்.
இலங்கை தேசிய அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் லஹிரு திரிமான்ன 125 பந்துகளை எதிர்கொண்டு, 5 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 59 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சில் பிடி கொடுத்து ஓய்வறை திரும்பினார். இதன்போது, அணியின் ஓட்ட எண்ணிக்கை 139ஆக இருந்தது.
லஹிரு திரிமான்னவைத் தொடர்ந்து, அணியின் அதே ஓட்ட எண்ணிக்கையின் போதே, அபாரமாக துடுப்பாடிக்கொண்டிருந்த தனுஷ்க குணதிலக்க ஜடேஜாவின் அபார களத்தடுப்பின் மூலம் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவர் 11 பௌண்டரிகள் உள்ளடங்கலாக 74 ஓட்டங்களைப் பெற்றார்.
அதிலிருந்து, ஆக்ரோசத்துடன் செயற்பட்ட இந்திய பந்து வீச்சாளர்கள் இலங்கைத் தரப்பின் ஏனைய அனைத்து துடுப்பாட்ட வீரர்களையும் 10 ஓட்டங்களைக்கூட பெற விடாமல் வீழ்த்தினர். அந்த வகையில், எஞ்சிய எட்டு விக்கெட்டுகளும் வெறும் 48 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. எனவே அவ்வணி 56 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்த குல்தீப் யாதவ் 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, அபினவ் முகுந்த்தின் விக்கெட்டினை வெறும் ஒரு ஓட்டம் மட்டுமே பெற்றிருந்த நிலையில் இழந்தது. விஷ்வ பெர்னாண்டோவின் நேர்த்தியான பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழக்கப்பட்ட அபினவ் முகுந்த் ஓட்டமெதுவும் பெறமாலே ஓய்வறை திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய செதேஷ்வர் புஜாரா நெடு நேரம் நிலைக்கவில்லை. 12 ஓட்டங்களை பதிவு செய்திருந்த நிலையில் அவரும் விஷ்வ பெர்னாண்டோவின் அதிரடி பந்து வீச்சில் போல்ட்டானார்.
எனினும், எதிரணியின் பந்து வீச்சை லாவகமாக கையாண்ட லோகேஷ் ராகுல் 58 பந்துகளில் 7 பௌண்டரிகள் உள்ளடங்களாக அரைச் சதம் கடந்து 54 ஓட்டங்களைப் பதிவு செய்திருந்த வேளை LBW முறையில் ஆட்டமிழந்தார்.
எனினும் பின்னர் இணைந்த அனுபவ வீரர்களான அணித் தலைவர் கோலி மற்றும் ரஹானே ஆகியோர் நிதானமாக ஆடி இன்றைய ஆட்ட நேர முடிவின்போது ஆட்டமிழக்காமல் முறையே 34 மற்றும் 30 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.
அதன்படி இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் பதினொருவர் அணி: 187/10 (55.5ஓவர்கள்) – தனுஷ்க குணதிலக்க 74, லஹிரு திரிமான்ன 59, குலதீப் யாதவ் 14/4, ரவீந்தர் ஜடேஜா 31/3
இந்திய அணி: 135/3 (30 ஓவர்கள்) – லோகேஷ் ராகுல் 54, விராத் கோலி 34*, ரஹானே 30*, விஷ்வ பெர்னாண்டோ 21/2