ஜோ ரூட்டின் சதத்துடன் இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து

1685

இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கிடையில் லீட்ஸ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (17) நடைபெற்ற தீர்மானம் மிக்க மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ஜோ ரூட் மற்றும் இயன் மோர்கன் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் அவ்வணி 2-1 எனக் கைப்பற்றியுள்ளது.

குல்தீப் சுழல், ரோஹித்தின் அதிரடி சதத்தால் இந்தியாவுக்கு முதல் வெற்றி

இந்திய சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்வின் அபார …

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி ரோஹித் சர்மாவின் சதத்தின் உதவியுடன் வெற்றிபெற, இரண்டாவது போட்டியில் ஜோ ரூட்டின் சதத்தின் உதவியுடன் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை 1-1 என சமப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் தொடரின் வெற்றியினை குறிவைத்து இரண்டு அணிகளும் களமிறங்கின.

அதிலும் இந்திய அணி 1997ஆம் ஆண்டுக்கு பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் தோல்வியை காணாத வரலாறுடன் களமிறங்கியது. இந்திய அணி 1997ஆம் ஆண்டுக்கு பின்னர் சந்தித்த 7 தீர்மானம் மிக்க இறுதிப் போட்டிகளிலும் வெற்றியை தக்கவைத்திருந்த நிலையில், நேற்று அந்த வரலாறு இங்கிலாந்து அணியால் தகர்க்கப்பட்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கினார். இதன்படி களமிறங்கிய இந்திய அணியில் இரண்டாவது போட்டியிலிருந்து மூன்று மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. உமேஷ் யாதவ், சித்தார்த் கௌல் மற்றும் கே.எல். ராஹுல் ஆகியோருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார் மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர். இங்கிலாந்து அணியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய்க்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் களமிறங்கினார்.

இந்திய அணியில் விரிதிமன் சஹாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்?

இங்கிலாந்து அணிக்கெதிராக அடுத்த மாதம் முதலாம் திகதி …

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்ப விக்கெட் 13 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. ரோஹித் சர்மா இரண்டு ஓட்டங்களுடன் ஏமாற்றமளிக்க, அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோஹ்லி மற்றும் சிக்கர் தவான் 71 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், தவான் 44 ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமாக ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் 21 ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப,  தனது 47ஆவது அரைச்சதத்தை கடந்த விராட் கோஹ்லி 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆடில் ரஷீட்டின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் சுரேஷ் ரெய்னாவும் ஓட்டங்கள் இன்றி வெளியேற, இந்திய அணி 158 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் ஓட்ட எண்ணிக்கையை சற்று உயர்த்திய டோனி 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இறுதி நேரத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பின்வரிசை வீரர்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கையை 256 ஆக உயர்த்தினர். இதில் சர்துல் தாகூர் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும், புவனேஷ்வர் குமார் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தனர். அதிலும் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுக்க, இந்திய அணி தங்களது சுழற்பந்து வீச்சாளர்களை ஆயுதமாக பயன்படுத்த எண்ணியது.  இங்கிலாந்து அணியின் ஆடில் ரஷீட் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, டெவிட் வில்லி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், பலமான இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு மத்தியில் சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் 10 ஓவர்களில் அதிரடியாக துடுப்பெடுத்தாட முற்பட்டது. இதன்படி ஜொனி பெயார்ஸ்டோவ் அதிரடியாக ஆடி 13 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, சர்துல் தாகூறின் பந்து வீச்சில் ரெய்னாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.  தொடர்ந்து இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை செலுத்த 10ஆவது ஓவரில் சுழற்பந்து வீச்சாளரை அறிமுகம் செய்தது. இந்த ஓவரில் முதலாவது பந்தில் ஜேம்ஸ் வின்ஸ் ரன்-அவுட் மூலமாக 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இந்திய அணிக்கு நம்பிக்கை மட்டம் உயர்ந்தது.

Photos : Sri Lanka U19 vs India U19 – 1st Youth Test – Day 1

ThePapare.com | Waruna Lakmal | 17/07/2018 | Editing and re-using…

எனினும், தொடர்ந்து ஜோடி சேர்ந்த அணியின் தலைவர் இயன் மோர்கன் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் இணைந்து இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர். இறுதிவரை தங்களது விக்கெட்டுகளை எதிரணிக்கு விட்டுக்கொடுக்காமல் ஆடிய இருவரும், இந்திய அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு அணியை வெற்றிபெறச் செய்தனர்.

மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த இவ்விருவரும் 186 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுக்க, ஜோ ரூட் போட்டியின் வெற்றி ஓட்டத்துடன் தனது 13ஆவது சதத்தை கடந்தார். இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் சதம் கடந்த இவர், தொடர்ச்சியாக இரண்டு சதங்களை விளாசியுள்ளார். 120 பந்துகளை எதிர்கொண்ட ஜோ ரூட் 10 பௌண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

மறுமனையில் ஜோ ரூட்டுடன் இணைந்து, அணித் தலைவர் என்ற ரீதியில் பொறுப்புடன் செயற்பட்ட இயன் மோர்கன் சதத்தை பெறத் தவறினாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 108 பந்துகளுக்கு முகங்கொடுத்து, ஒரு சிக்ஸர் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சோபிக்காத நிலையில், சர்துல் தாகூர் மாத்திரம் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார். இதன்படி இங்கிலாந்து அணி 44.3 ஓவர்களில் 2 விக்கெகட்டுகளை மாத்திரம் இழந்து 260 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது. இதன் அடிப்படையில் 1997ஆம் ஆண்டு முதல் சுமார் 21 வருடங்களாக தக்கவைத்திருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் தீர்மானம் மிக்க இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றிருந்த இந்திய அணியின் சாதனையை இங்கிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் முறியடித்து, தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

போட்டி குறிப்பு

இந்தியா 256/8 (50)- விராட் கோஹ்லி 71 (72), சி்க்கர் தவான் 44 (49), ஆடில் ரஷீட் 3/49, டேவிட் வில்லி 3/40)

இங்கிலாந்து 260/2 (44.3) – ஜோ ரூட் 100 (120), இயன் மோர்கன் 88 (108), சர்துல் தாகூர் 1/51

ஆட்டநாகயன் விருது – ஆடில் ரஷீட் (இங்கிலாந்து)

தொடர் நாயகன் விருது – ஜோ ரூட் (இங்கிலாந்து)