பாராலிம்பிக் பதக்க கனவுடன் உள்ள சுரேஷ்

Para Olympic 2020

197
Suresh Dharmasena

32 வயதான தர்மசேனகே சுரேஷ் ரஞ்சன் தர்மசேன 2020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்காக சக்கர நாற்காலி டென்னிஸ் (Wheel Chair Tennis) போட்டியில் பங்கேற்கிறார். பாரா சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியில் ஆசிய மட்டத்தில் முதலாவது பதக்கத்தை வென்றவரான சுரேஷ் தர்மசேன பற்றி ThePapare.com இன் பதிவு. 

‘மிகவும் கடினமான பயணத்திற்கு பின்னர் இந்த வாய்ப்பை பெற்றேன். ஆரம்பத்தில் இருந்தே பாராலிம்பிக் செல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் இருந்தேன். கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பற்றி பெருமகிழ்ச்சி அடைகிறேன். பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பு இல்லாமல் விளையாட்டு ஒன்றில் முன்னெறிச் செல்ல முடியாது. எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்ததும் அந்தப் பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பு காரணமாகவென்று நான் நினைக்கிறேன். எனது தாய் நாட்டை பதக்கம் ஒன்றினால் மிளிரச் செய்ய பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதற்காக செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்வேன்’ என்று சுரேஷ் தர்மசேன ThePapare.com உடன் தமது பேச்சை ஆரம்பித்தார்.  

சுரேஷின் ஊர் கஹடகஸ்திகிலிய, பலுகொட்டுவெல. மூன்று பேரைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவர். சுரேஷுக்கு தம்பி மற்றும் தங்கை ஒருவர் இருக்கிறார்கள். விவாசத்தில் வாழ்வை நடத்திய வீட்டில் மூத்தவரான சுரேஷுக்கு வீட்டு வேலைகளில் பெரும் பங்கு இருந்தது. அதனால் சுரேஷுக்கு அந்தக் காலத்தில் மண்வெட்டி வேலை நன்றாகப் பழக்கம்.  

சுரேஷின் தந்தை பே. தர்மசேன. தாய் எம். தர்மலதா. அவர்கள் நாளொன்றின் அதிக நேரத்தை நிலத்தோடு போராடுவதற்கே செலவிட்டார்கள். ஆனால் அதனால் அவர்களுக்கு பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. நாளுக்கு நாள் வளரும் மூன்று குழந்தைகளினதும் வயிற்றை நிரப்பி அவர்களின் பாடசாலை பயணத்திற்கு தேவையான விடயங்களை பூர்த்தி செய்த பின் சில சொச்சங்களை சேமிப்பது, வரட்சியில் நடப்பட்ட செடியை காப்பது போன்று கடினமானதாக இருந்தது.Suresh Dharmasena

‘அப்பாவும் அம்மாவும் வயல் வேலை மற்றும் சேனைப் பயிர் வேலைகளை மாறி மாறி செய்தார்கள். ஆனால் அறுவடையில் கிடைக்கின்ற பணம் ஓரளவுக்கு உண்டு குடித்து இருக்க முடியுமாக இருந்தது. எமது பற்றாக்குறைகளுக்கு அந்த வருமானம் போதுமானதாக இருக்கவில்லை. நாம் மூவரும் பாடசாலை செல்லும் வயதில் இருந்தோம். வீட்டில் இருந்த இந்த நிலைமையுடன் விரைவாக வேலைக்குப் போக வேண்டும் என்பதே எனது தேவையாக இருந்தது.’   

சுரேஷ் பாடசாலை சென்றது கஹடகஸ்திகிலிய மத்திய மகா வித்தியாலயத்திற்கு. பாடசாலை செல்லும் காலத்தில் சுரேஷ் திறமையான கரப்பந்தாட்ட வீரராக இருந்தார். 16 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிக்காக விளையாடி அகில இலங்கை மட்டத்திலும் பங்கேற்றிருக்கிறார்.    

‘இராணுவத்தில் இணைய வேண்டும் என்று 18 வயது ஆகும் வரை எனக்கு பொறுமை இல்லாமல் இருந்தது. ஆனால் வீட்டில் விருப்பம் இருக்கவில்லை. இருக்கின்ற மாதிரி உண்டு குடித்து இருப்போம் என்றே அம்மாவும் அப்பாவும் கூறினார்கள். ஆனால் விரைவாக வேலை ஒன்றை பார்ப்பதே எனது தேவையாக இருந்தது. இராணுவத்தில் இணைய விளையாட்டு சான்றிதழ் ஒன்று தேவை என்பதாலேயே கரப்பந்தாட்டத்தில் கூட பங்கேற்றேன்.’ 

சுரேஷ் சாதாரணதரத்தின் பின் பாடசாலை செல்வதை நிறுத்தினார். அதன் பின் இராணுவத்தில் சேர விண்ணப்பப் படிவங்களை நிரப்பியது தான் சுரேஷின் வேலையாக இருந்தது. அதன்படி சுரேஷுக்கு தேவையான வயது பூர்த்தியான விரைவில் மின்னேரிய இராணுவ காலாட்படை பயிற்சி நிலையத்திற்கு போர்ப் பயிற்சிக்கு இணைந்தார். அது 2007 ஆம் ஆண்டு.    

‘பயிற்சியின் பின்னர் நான் 11 ஆவது இலங்கை பீரங்கிப் படையுடன் மன்னார் சென்றேன். அதற்கு பின்னர் தொடர்ந்து மனிதாபிமான நடவடிக்கையில் இருந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் பணியாற்றினேன். 2009 பெப்ரவரி 23 ஆம் திகதி செலை, புதுயிருப்பு கூடாவுக்கு அருகில் கண்ணிவெடியில் சிக்கி காயமுற்றேன். எனக்கு நினைவு திரும்பியபோது இடது காலில் முழங்காலுக்கு கீழ் அகற்றப்பட்டிருந்தது.’ 

வறுமையில் இருந்து மீள்வதற்கு இராணுவத்தில் இணைந்த சுரேஷுக்கு கால் ஒன்றை இழந்தது தாங்க முடியாததாக இருந்தது. சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்தது போல் உணர்ந்தார். வறிய பெற்றோருக்கு தாம் துன்பத்தைக் கொடுத்தது பற்றி சுரேஷ் அதிர்ச்சியில் இருந்தார். பெற்றோரின் சொல்லை கேட்காதது பற்றி சுரேஷ் பல முறை நினைத்தார். ஆனால் நிகழ்ந்த ஒன்றை மீண்டும் சரி செய்ய முடியாது.

Suresh Dharmasena‘அப்போது எனக்கு 20 வயது. கால் ஒன்று இல்லாவிட்டால் என்ன வாழ்க்கை இருக்கிறது என்று அம்மாவும் அப்பாவும் விபத்துக்கு பின்னர் கூறினார்கள். மனதில் பெரும் துன்பத்தை வைத்துக்கொண்டு வேறு ஒன்றும் இல்லாத நிலையில் அந்த வார்த்தைகளை அவர்கள் கூறி இருக்கலாம். அவர்கள் அன்று போன்று இன்றும் கூட என்னைப் பற்றி பார்க்கிறார்கள். அன்புடன் கவனிக்கிறார்கள். அதேபோன்று எனது மனைவி. அவர் என்னை சந்தித்தது நான் காயமடைந்த பின்னர். உடல் குறைகளால் மனிதனை அளக்கும் உலகில் அவர்களின் அன்பு எனக்கு மிகப்பெரியது.’     

சுரேஷின் மனைவி சமுத்ரிகா சத்துரங்கனி திசாநாயக்க. சுரேஷுடன் கஹடகஸ்திகிலிய சிவ்திசாகமவில் தங்கி உள்ளார். உடல் ஊனமுற்ற பின்னரே சுரேஷ் சமுத்ரிகாவை சந்திக்கிறார். சுரேஷ் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபடுவதற்கு அவரும் ஒரு காரணம்.

உடைந்து போகும் மனதை பலப்படுத்துவதற்கு அவர் தொடர்ந்து முயற்சித்தார். உடல் குறையை மறப்பதற்கு வேறு ஒன்றில் கவனம் செலுத்தும்படி அவர் அறிவுரை கூறினார். ஆனால் அது சுரேஷுக்கு அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. ஆனால் சுரேஷுக்கு அதில் இருந்து எழுந்து வருவதற்கு தேவை இருந்தது. ராகம ரணவிரு செவனவில் தம்மைப் போன்ற உடல் ஊனமுற்ற வீரர்களுடன் காலத்தை செலவிட்டுக் கொண்டிருந்தபோது அவர்கள் வாழ்வை கட்டியெழுப்ப முயற்சிக்கும் விதம் பற்றி பார்த்தும் அவர்களுடன் பழகியும் தமக்கும் கூட வாழ்க்கை ஒன்று இருக்கிறது என்பதை சுரேஷ் புரிந்துகொண்டார்.  

‘2010 ஆம் ஆண்டு நான் பனாகொட இராணுவ தலைமையத்திற்கு வந்தேன். அங்கு 2 மாதங்களாக இருக்கும்போது ஜெனரல் அபேசேக்கர சேரை சந்தித்தேன். சேர் தான் டென்னிஸ் ஆடுவோம் என்று கூறினார். நான் சேருக்கு சரி என்று சொன்னாலும் அப்போது எனக்கு டென்னிஸ் விளையாட்டுப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் சக்கர நாட்காலியில் இருந்து செலவிடுகின்ற தனிமையில் இருந்து வெளியேறுவதற்கு வேண்டி நான் இருந்தேன். அதனால் டென்னிஸ் விளையாட்டுக்கு விருப்பத்துடன் ஈடுபட்டேன். ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தது. ஆனால் சிறிது காலம் செல்லும்போது அதனை பிடித்துக்கொள்ள முடிந்தது.’     

டென்னிஸ் மைதானத்திற்கு வந்த சுரேஷ் எத்தனை பயிற்சி பெற்றாலும் பல ஆண்டுகளாக பங்கேற்ற போட்டிகளில் முதல் சுற்றிலேயே விலக வேண்டி ஏற்பட்டது. ஆனால் சுரேஷ், ‘ஆட்டத்தை’ கைவிடவில்லை. இவ்வாறு சில காலங்களை கடத்திய சுரேஷின் திறமை வெளியானது அதற்கும் சில ஆண்டுகளுக்கு பின்னராகும்.

‘2016 ஆம் ஆண்டு நீர்கொழும்பில் இடம்பெற்ற திறந்த போட்டி ஒன்றில் தான் எனது முதல் வெற்றியை பெற்றேன். அது வரை நான் அதிக பொறுமையுடன் தோல்விகளை பொறுத்துக்கொண்டிருந்தேன். இனியும் தோல்வியுறுவதில்லை என்று நான் அன்று நினைத்துக்கொண்டேன். அதற்கு பின் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் நான் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தேன்.’    

சுரேஷின் வெற்றிகளில் 2017 மலேஷியா பாரா டென்னிஸ் போட்டியில், 2018 தாய்லாந்து சர்வதேச டென்னிஸ் சம்மேளன பாரா திறந்த போட்டியிலும் இடம்பெற்றார். அந்த ஆண்டிலேயே இந்தோனேசியாவில் இடம்பெற்ற ஆசிய பாரா டென்னிஸ் போட்டியில் சுரேஷ் லசன்த இராணுவ வீரருடன் இணைந்து இரட்டையர் சம்பியன்சிப்பை வென்றார். அது இந்த நாட்டு டென்னிஸ் வரலாற்றில் பெற்ற முதலாவது ஆசிய பதக்கமாக இருந்தது. இந்த திறமையுடன் அவர் அந்த ஆண்டில் பாரா டென்னிஸ் வீரர்களுக்கான உலகத் தரவரிசையில் 28 ஆவது இடத்திற்கு முன்னேறினார்.   

அதன் பின்னர் போர்த்துக்கலில் நடைபெற்ற பாரா உலகக் கிண்ண டென்னிஸ் போட்டிக்கான தகுதிகாண் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடிப்பதற்கு அவரால் முடிந்தத. இதனிடையே இந்நாட்டில் இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை பகிரங்க சம்பியன்சிப் வீரராக, எஸ்.எஸ்.சி. பகிரங்க சம்பியனாகவும் அவர் பல தடவைகள் முன்னிலை பெற்றுள்ளார்.

‘கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த காலங்களில் டென்னிஸ் போட்டிகள் நடைபெறவில்லை. இருந்த பல போட்டிகளில் எம்மால் பங்கேற்க முடியாமல்போனது. அதனால் தற்போது உலகத் தரப்படுத்தலில் 58 ஆவது இடத்தில் இருக்கிறேன். என்றபோதும், இந்த இடத்தை ஒரே நிலையில் வைத்திருப்பது கடினமானது. பெரும் போட்டி உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னிலைக்கு வர முடியும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கு பாராலிம்பிக் விளையாட்டு விழா நல்ல வாய்ப்பாக உள்ளது.’ 

சுரேஷின் பயிற்சியாளர் ஜகத் அமல் வெலிகல அவர்கள். ஆனால் தற்போது பாராலிம்பிக் காரணமாக அவர் தயங்க வீரசேகர அவர்களிடம் பயிற்சி பெற்று வருகிறார். 

‘நான் இன்று இருக்கும் இடத்தின் பின்னணியில் பலர் இருக்கிறார்கள். அதில் எமக்கு பொறுப்பாக உள்ள ஜெனரல் அபேசேக்கர சேர் முக்கியமானவர். அதேபோன்று எனது பயிற்சியாளர்களான அனைவரையும் அன்போடு ஞாபகமூட்டுகிறேன். இராணுவத் தளபதி உட்பட இலங்கை இராணுத்தின் அனைவரும் இலங்கை டென்னிஸ் சம்மேளனம் மற்றும் பாரா விளையாட்டு குழுவின் அனைவரையும் மிக அன்புடன் ஞாபகமூட்டுகிறேன். அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்’ என்கிறார் சுரேஷ் தர்மசேன.    

பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் சிங்கக் கொடியை பறக்கவிடுவதற்கு சென்றிருக்கும் சுரேஷ் தர்மசேனவுக்கு ThePapare.com இன் வாழ்த்துகள்.

டோக்கியோ பாராலிம்பிக் விழாவின் அனைத்து விபரங்களை உங்களிடம் கொண்டுவருவதற்கு ThePapare.com   தயாராக உள்ளது. போட்டிகள் இம்மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறுகின்றன. போட்டிகளை அனுபவிப்பதற்கு ThePapare.com  உடன் இணைந்திருங்கள்.