100ஆவது டெஸ்ட்டில் வரலாற்று சாதனை படைத்த டேவிட் வோர்னர்

94

100ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் விளாசிய உலகின் இரண்டாவது வீரராகவும், முதல் அவுஸ்திரேலிய வீரராகவும் அவுஸ்திரேலியாவின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் மெல்பேர்னில் நேற்று (26) ஆரம்பமாகிய Boxing Day டெஸ்டில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கத அணி எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 68.4 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய அவுஸ்திரேலிய அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா ஒரு ஓட்டத்துடனும், தொடர்ந்து வந்த லபுஸ்சேன் 14 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

இதையடுத்து வோர்னருடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் டேவிட் வோர்னர் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து சாதனைப படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 25ஆவது சதம் இதுவாகும்.

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கார்டன் க்ரீனிட்ஜுக்குப் பிறகு, தனது 100ஆவது ஒருநாள் மற்றும் 100ஆவது டெஸ்ட் ஆகிய இரண்டிலும் சதம் அடித்த இரண்டாவது வீரராக வோர்னர் இடம்பிடித்தார்.

அத்துடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ஓட்டங்களையும் கடந்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 7ஆவது அவுஸ்திரேலிய வீரராக வோர்னர் இடம்பிடித்தார். ரிக்கி பொண்டிங் (13,378), அலென் போர்டர் (11,174), ஸ்டீவ் வோஹ் (10,927), மைக்கல் கிளார்க் (8,643), மெத்யூ ஹேடன் (8,625), ஸ்டீவ் ஸ்மித் (8,543) ஆகியோர் வரிசையில் அவர் இணைந்தார்.

இதனிடையே, குறித்த சதத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் (45 சதங்கள்) சாதனையை டேவிட் வோர்னர் சமன் செய்துள்ளார். இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெய்ல் 42 சதங்களுடன் இருக்கிறார்.

மறுபுறத்தில், வோர்னருடன் இணைந்து அபாரமாக துடுப்பெடுத்தாடி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 85 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

ஆனாலும் சற்றும் சலிக்காமல் விளையாடிய வோர்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் 100ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்த முதல் அவுஸ்திரேலிய வீரர் மற்றும், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுக்குப் பிறகு 100ஆவது டெஸ்ட்டில் இரட்டைச் சதமடித்த இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் வீரர் எனும் வரலாற்று சாதனைகளையும் படைத்தார்.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடிக்காத வோர்னர், அதை இரட்டைச் சதமாக மாற்றி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 3வது இரட்டைச் சதத்தை வோர்னர் அடித்துள்ளார்.

பின்னர் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பின் காரணமாக 200 ஓட்டங்களைச் சேர்த்திருந்த வோர்னர், ரிட்டையர் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து வந்த டிராவிஸ் ஹெட் நிதானமாக விளையாட, கெமரூன் கிரீன் 6 ஓட்டங்களுடன் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார்.

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 386 ஓட்டங்களைக் குவித்துள்ளது. இதில் டிராவிஸ் ஹெட் 48 ஓட்டங்களுடனும், அலெக்ஸ் கேரி 9 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<