ஆசிய விளையாட்டு விழாவுக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

Junior National Athletics Championship 2022

141

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஆசிய விளையாட்டு விழா அடுத்த (2023) செப்டம்பர் 23ஆம் திகதி முதல் அக்டோபர் 8ஆம் திகதி வரை சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் பேரவை நேற்று (19) அறிவித்தது.

19ஆவது ஆசிய விளையாட்டு விழா சீனாவில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெற இருந்தது.

எனினும், சீனாவில் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், ஆசிய விளையாட்டு விழா நடைபெறவிருந்த ஹாங்சோ நகரத்தில் பல மாதங்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாகவும் ஆசிய விளையாட்டு விழாவை அடுத்த ஆண்டு வரை ஒத்திவைப்பதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழுவும், ஆசிய ஒலிம்பிக் பேரவையும் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட ஆசிய விளையாட்டு விழா 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி முதல் அக்டோபர் 8ஆம் திகதி வரை சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் பேரவை நேற்று (19) உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

இதுதொடர்பில் ஆசிய ஒலிம்பிக் பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

‘கடந்த இரண்டு மாதங்களாக ஆசிய விளையாட்டு விழாவுக்கான பணிக்குழு, சீன ஒலிம்பிக் குழு, ஹாங்சோ ஆசிய விளையாட்டு ஏற்பாட்டுக் குழு மற்றும் பிற முக்கிய சர்வதேச விளையாட்டு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதன்போது ஏனைய சர்வதேச போட்டி அட்டவணைகளுடன் முரண்படாத வகையில் 2023இல் ஆசிய விளையாட்டு விழாவை நடத்துவதற்கான திகதி தொடர்பில் ஆராயப்பட்டது.

இறுதியில் ஆசிய விளையாட்டு விழாவுக்கான பணிக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட திகதிகளில் ஆசிய விளையாட்டு விழாவை நடத்த ஆசிய ஒலிம்பிக் பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சீன ஒலிம்பிக் குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ஆசிய விளையாட்டு விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை முன்னெடுப்பதில் ஆசிய ஒலிம்பிக் பேரவை மற்றும் ஹாங்சோ ஆசிய விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவுடன் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வோம் என்று கூறப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கிற்கு அடுத்தபடியாக அதிகளவான வீரர்கள் பங்குபற்றுகின்ற உலகின் இரண்டாவது மிகப் பெரிய விளையாட்டு விழாவாக ஆசிய விளையாட்டு விழா விளங்குவதுடன், இதில் சுமார் 46 நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆசிய விளையாட்டு விழா முடிந்த அடுத்த 8 மாதங்களில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<