டெர்பிஷயார் அணிக்காக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுரங்க லக்மால்

178
Getty Image

டெர்பிஷயார் அணிக்காக விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால், கௌண்டி கிரிக்கெட்டில் தனது முதல் 5 விக்கெட்டுகள் குவியலை எடுத்து அசத்தியுள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்ற சுரங்க லக்மால், இம்முறை கௌண்டி போட்டித் தொடரில் டெர்பிஷயார் அணிக்காக விளையாடி வருகின்றார்.

இந்த நிலையில், இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வருகின்ற கௌண்டி சம்பியன்ஷிப் டிவிஷன்-2 போட்டித் தொடரில் டெர்பிஷயார் மற்றும் க்ளெமோர்கன் அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகியது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெர்பிஷயார் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 368 ஓட்டங்களைக் குவித்தது.

அதனைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த க்ளெமோர்கன் அணி, 387 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் டெர்பிஷயார் அணிக்காக அபாரமாக பந்துவீசிய சுரங்க ல்கமால், 82 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் கௌண்டி போட்டிகளில் தனது முதலாவது 5 விக்கெட்டுகள் குவியலைப் பதிவுசெய்தார்.

அதுமாத்திரமின்றி, க்ளெமோர்கன் அணிக்காக சதமடித்து 130 ஓட்டங்களைக் குவித்த உலகின் நம்பர்-1 டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன், சுரங்க ல்கமாலின் முதல் விக்கெட்டாக அமைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டெர்பிஷயார் அணிக்காக இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சுரங்க லக்மால், 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதேவேளை, தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காகத் துடுப்பெடுத்தாடி வரும் டெர்பிஷயார் அணி, போட்டியின் மூன்றாவது நாள் ஆட்ட நேரம் நிறைவடையும் போது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<