சஞ்சு சம்சனை சுழலால் மிரட்டும் வனிந்து ஹஸரங்க!

Indian Premier League 2022

173
Wanindu Hasaranga

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் நேற்று (26) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய இலங்கை வீரர் வனிந்து ஹஸரங்க சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.

போட்டியில் களத்தடுப்பை தெரிவுசெய்த பெங்களூர் அணி மிகச்சிறப்பான பந்துவீச்சை பதிவுசெய்தது. ராஜஸ்தான் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஜோஸ் பட்லரின் விக்கெட் விரைவில் வீழ்த்தப்பட, பெங்களூர் அணிக்கு ஓட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது.

IPL தொடரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள வனிந்து, சமீர, பானுக & தீக்ஷன

அதனை பயன்படுத்தி சிறப்பான பந்துவீச்சு பிரதிகளை பெங்களூர் பந்துவீச்சாளர்கள் பதிவுசெய்தனர். இதில், இலங்கை வீரர் வனிந்து ஹஸரங்க, தன்னுடைய பந்துவீச்சில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணித்தலைவர் சஞ்சு சம்சன் மற்றும் ஷிம்ரொன் ஹெட்மையர் ஆகிய முன்னணி துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளை சாய்த்தார்.

வனிந்து ஹஸரங்க தன்னுடைய 4 ஓவர்களில் 11 ஓட்டமற்ற பந்துகளுடன் 23 ஓட்டங்களை மாத்திரமே வழங்கியிருந்தார். இந்த பந்துவீச்சு பிரதியில், சஞ்சு சம்சனின் விக்கெட்டினை கைப்பற்றியதன் மூலம், அவருக்கு எதிரான 6 இன்னிங்ஸ்களில் 5 தடவைகள் வனிந்து ஹஸரங்க சம்சனின் விக்கெட்டினை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் மாத்திரமின்றி துடுப்பாட்டத்தில் சற்று ஓட்டங்களை பெற்ற ஹஸரங்க 13 பந்துகளில் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார். எவ்வாறாயினும், இந்த போட்டியில் 145 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 115 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 29 ஓட்டங்கள் வித்தியாசத்திர் தோல்வியடைந்தது.

பெங்களூர் அணி இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் காரணமாக 10 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளதுடன், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<