சகலதுறையிலும் பிரகாசித்து லக்னோவின் வெற்றிக்கு உதவிய சமீர

Indian Premier League 2022

1159

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் நேற்று (29) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளதுடன், இந்தப் போட்டியில் துஷ்மந்த சமீர அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.

பூனேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானிக்க, லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி துடுப்பெடுத்தாடியது.

மேஜர் லீக் T20 தொடர் மே மாதம் ஆரம்பம்

துடுப்பாட்டத்தில் தடுமாறியிருந்த லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி இறுதியாக 153 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் இலங்கை வீரர் துஷ்மந்த சமீர துடுப்பாட்டத்திலும் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். காகிஸோ ரபாடா வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசிய சமீர 10 பந்துகளில் 17 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை கொடுத்தனர். இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை பெற்று 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வியடைந்தது.

லக்னோவ் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை மொஷீன் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த போதும், பஞ்சாப் அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் இருவரின் விக்கெட்டுகளை துஷ்மந்த சமீர கைப்பற்றினார்.

அணியின் 2வது ஓவரை வீசிய சமீர, வேகமாக ஓட்டங்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் மயங்க் அகர்வாலை ஆட்டமிழக்கச்செய்தார். தொடர்ந்து அணியின் 16வது ஓவரை வீசுவதற்கு அழைக்கப்பட, பஞ்சாப் அணியின் ஜொனி பெயார்ஸ்டோவ் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் வகையில் துடுப்பெடுத்தாடினார்.

எனினும் தன்னுடைய ஓவரில் ஜொனி பெயார்ஸ்டோவை ஆட்டமிழக்கச்செய்து துஷ்மந்த சமீர அணியின் வெற்றியை இலகுவாக்கினார். சமீர தன்னுடைய நான்கு ஓவர்களில் வெறும் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்தப்போட்டியில் வெற்றிபெற்றதன் ஊடாக லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணியானது 8 புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<