சொந்த மைதானத்தில் திரில் வெற்றி பெற்ற வட மாகாண அணி

991

மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து லீக் தொடரின் இரண்டு போட்டிகள் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்றன. இதன் ஒரு போட்டியில் வட மாகாண அணி வெற்றி பெற, மற்றைய போட்டி சமநிலையில் முடிவுற்றது.

வடக்கு எதிர் ஊவா

ஊவா மாகாண அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையிலும், வட மாகாண அணியினர் தமது முதல் போட்டியை சமநிலையில் முடித்த நிலையிலும் இந்த மோதலில் களமிறங்கினர்.

யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் இந்தப் போட்டி இடம்பெற்றமையினால், வட மாகாண அணியின் ஆதரவாளர்கள் அரங்கில் நிறைந்திருந்தனர்.

சொந்த மைதான ரசிகர்களின் கோஷத்திற்கும் ஆதரவிற்கும் மத்தியில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 35ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் உதையின்போது கீதன் உள்ளனுப்பிய பந்தை கண்ணன் தேனுஷன் ஹெடர் செய்து வட மாகாண அணியை முதல் பாதியில் முன்னிலைப்படுத்தினார்.

மீண்டும் இரண்டாவது பாதியில் 70 நிமிடங்கள் கடந்த நிலையில் கீதன் வட மாகாண அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

அதன் பின்னர் போட்டி நிறைவு வரை எந்த கோலும் பெறப்படாத நிலையில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற வட மாகாண அணி தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்துகொண்டது.

முழு நேரம்: வடக்கு 2 – 0 ஊவா

கொல் பெற்றவர்கள்

  • வடக்கு மாகாணம் – கண்ணன் தேனுஷன் 35‘, V.கீதன் 71‘

கிழக்கு எதிர் ரஜரட

யாழ்ப்பாணம் அரியாலையில் அமைந்துள்ள இலங்கை கால்பந்து சம்மேளன பயிற்சி நிலைய மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பமாகி 15 நிமிடங்களில் கிழக்கு மாகாண அணி வீரர் ரிப்கான் கோலுக்கான முயற்சியை எடுக்கும்போது ரஜரட கோல் எல்லையில் அவ்வணி வீரரின் கைகளில் பந்து பட்டது. இதன்போது கிடைத்த பெனால்டி வாய்ப்பை கிழக்கு அணியின் தலைவர் முஸ்தான் கோலாக மாற்றி அணியை முன்னிலைப்படுத்தினார்.

எனினும் ரஜரட அணிக்காக இரண்டாம் பாதி ஆரம்பமாகியதும் மாற்று வீரராக வந்த மொஹமட் போட்டியின் 73ஆவது நிமிடத்தில் அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

அதன் பின்னர் வெற்றி கோலுக்காக இரண்டு அணிகளும் தொடர்ந்து போராடிய போதும் கோல்கள் பெறப்படாத நிலையில் ஆட்டம் தலா ஒரு கோல்களுடன் சமநிலையடைந்தது.

இந்த முடிவினால் கிழக்கு மாகாணம் தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் சமநிலையான முடிவைப் பெற, முதல் போட்டியில் தோல்வி கண்ட ரஜரட அணிக்கு இந்த சமநிலை முடிவினால் தொடரில் முதல் புள்ளி கிடைக்கின்றது.

முழு நேரம்: கிழக்கு 1 – 1 ரஜரட

கோல் பெற்றவர்கள்

  • கிழக்கு – மொஹமட் முஸ்தாக் 15‘(P)
  • ரஜரட – N. மொஹமட் 73‘

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<