இலங்கையின் முதலாவது தொழில்முறை கால்பந்து தொடரான சுபர் லீக் தொடரின் அனைத்துப் போட்டிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் 22 புள்ளிகளைப் பெற்ற களுத்துறை புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் தொடரின் சம்பியன்களாக மகுடம் சூடியுள்ளது.
இந்த தொடரின் இறுதி இரண்டு லீக் போட்டிகளும் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றன. இதில் சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற போட்டியில் புளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 3-2 என புளூ ஈகல்ஸ் விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்டது. குதிரைப் பந்தயத் திடலில் இடம்பெற்ற அடுத்த போட்டியில் சீ ஹோக்ஸ் கால்பந்து கழகம் 3-2 என கொழும்பு கால்பந்து கழகத்தை வெற்றி கொண்டது.
புளூ ஸ்டார் வி.க எதிர் புளூ ஈகல்ஸ் வி.க
கொழும்பு சுகததாஸ அரங்கில் மாலை ஆரம்பமான இந்தப் போட்டியின் 11 நிமிடங்களில் புளூ ஸ்டார் வீரர்களிடையே இடம்பெற்ற வேகமான பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் மொஹமட் பசால் அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார்.
- இலகு வெற்றியுடன் சுபர் லீக்கை முடித்த டிபெண்டர்ஸ், அப்கண்ட்ரி லயன்ஸ்
- இலகு வெற்றியை சுவைத்த புளூ ஸ்டார், கொழும்பு அணிகள்
- சீ ஹோக்ஸின் வெற்றி பறிப்பு; கொழும்பு, நியு யங்ஸிற்கு அபராதம்
- கொழும்பு திரில் வெற்றி; நியு யங்ஸை வீழ்த்திய ரினௌன்
- வெற்றி எதுவுமின்றி தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை இளையோர் மகளிர் அணி
அடுத்த 3 நிமிடங்களில் இஹ்சான் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தினால் அர்ஷாட் புளூ ஸ்டார் அணிக்கான அடுத்த கோலையும் பதிவு செய்தார்.
எனினும், அடுத்த நிமிடம் புளூ ஸ்டார் அணியின் பின்கள வீரர்கள் தடுக்கத் தவறிய பந்தினைப் பெற்ற லசித்த பெர்னாண்டோ புளூ ஈகல்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.
ஏற்கனவே, மஞ்சள் அட்டை பெற்றிருந்த அர்ஷாட் 34 ஆவது நிமிடத்தில் இரண்டாவது மஞ்சள் அட்டையையும் பெற்று சிவப்பு அட்டையுடன் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனவே, புளூ ஸ்டார் அணிக்கு எஞ்சிய முழு நேரத்தையும் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த சாதகத்துடன விளையாடிய பளூ ஈகல்ஸ் அணிக்கு 39 ஆவது நிமிடத்தில் நெத்ம மல்ஷான் அடுத்த கோலையும் பெற்றார்.
எனவே, முதல் பாதி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது.
எனினும், 10 வீரர்களுடன் விளையாடிய புளூ ஸ்டார் அணியினர் வெற்றி கோலுக்கான முயற்சியையே மேற்கொண்டனர். இதன் பயனாக, போட்டியின் 83ஆவது நிமிடத்தில் செனால் சந்தேஷ் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தினால் இஹ்சான் புளூ ஸ்டார் அணிக்கான வெற்றி கோலைப் பெற்றார்.
எனவே, ஆட்ட நிறைவில் 3-2 என வெற்றி பெற்ற புளூ ஸ்டார் தமது 9 போட்டிகளின் நிறைவில் 7 வெற்றிகள் மற்றும் தலா ஒரு சமநிலை, தோல்வியைப் பெற்று 22 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று சம்பியன்களாக தெரிவாகியது.
தொடரில் அதிக கோல்களைப் பதிவு செய்த வீரராக புளூ ஸ்டார் அணியின் இளம் வீரர் செனால் சந்தேஷ் (10 கோல்கள்) இருக்கின்றார்.
முழு நேரம்: புளூ ஸ்டார் வி.க 3 – 2 புளூ ஈகல்ஸ் வி.க
கோல் பெற்றவர்கள்
புளூ ஸ்டார் வி.க – மொஹமட் பசால் 11’, மொஹமட் அர்ஷாட் 14’, மொஹமட் இஹ்சான் 83’
புளூ ஈகல்ஸ் வி.க – லசித்த பெர்னாண்டோ 15’ நெத்ம மல்ஷான் 39’
கொழும்பு கா.க எதிர் சீ ஹோக்ஸ் கா.க
குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 15ஆவது நிமிடத்தில், எதிரணியின் எல்லையின் இடது புறத்தில் இருந்து உள்ளனுப்பப்பட்ட பந்தை கொழும்பு அணி வீரர் மொஹமட் ஆகிப் வந்த வேகத்திலேயே கோலுக்குள் செலுத்தி அணியை முன்னிலைப்படுத்தினார்.
எனினும், ஈடுகொடுத்து விளையாடிய சி ஹோக்ஸ் அணிக்கு 35 நிமிடங்கள் கடந்த நிலையில் பொன்னப்பெரும சிறந்த முறையில் எதிரணி வீரரிடமிருந்து பந்தைப் பெற்று சுபாஷ் மதுஷானிடம் வழங்க, அவர் அதனை முன்னோக்கி எடுத்துச் சென்று தடுப்பு வீரர் வருவதற்குள் பந்தை கோலுக்குள் செலுத்தி போட்டியை சமப்படுத்தினார்.
எனவே, இந்த ஆட்டத்தின் முதல் பாதியும் தலா ஒரு கோலுடன் சமனிலையடைந்தது.
இரண்டாம் பாதியில் 60 நிமிடங்கள் கடந்த நிலையில் சி ஹோக்ஸ் வீரர் கொழும்பு அணியின் பெனால்டி எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டமையினால் சீ ஹோக்ஸ் அணிக்கு பெனால்டிக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை ஹஸ்மீர் கோலாக்கி போட்டியில் சீ ஹோக்ஸ் அணியை முன்னிலைப்படுத்தினார்.
மீண்டும் 76ஆவது நிமிடத்தில் அவிஷ் கவிந்து சீ ஹோக்ஸ் அணிக்கான மூன்றாவது கோலையும் பதிவு செய்தார்.
எனினும், தொடர்ந்து போராட்டத்தை விட்டுக் கொடுக்காமல் ஆடிய கொழும்பு அணிக்கு அணியின் தலைவர் மொமாஸ் யாபொ 87ஆவது நிமிடத்தில் அடுத்த கோலையும் பெற்றார்.
எஞ்சிய நிமிடங்களில் கோல்கள் எதுவும் பெறப்படாமையினால் ஆட்டத்தை 3-2 என சீ ஹோக்ஸ் வெற்றி கொண்டது. இதனால் 9 போட்டிகளில் 6 வெற்றிகள், ஒரு சமநிலை மற்றும் இரண் தோல்விகளைப் பதிவு செய்த சீ ஹோக்ஸ் 19 புள்ளிகளுடன் சுபர் லீக் தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தைப் பிடிக்க, அதே புள்ளிகளைப் பெற்ற கொழும்பு கால்பந்து கழகம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
முழு நேரம்: கொழும்பு கா.க 2 – 3 சீ ஹோக்ஸ் கா.க
கோல் பெற்றவர்கள்
கொழும்பு கா.க – மொஹமட் ஆகிப் 15’, மொமாஸ் யாபொ 87’
சீ ஹோக்ஸ் கா.க – சுபாஷ் மதுஷான் 37’ மொஹமட் ஹஸ்மீர் 65’, அவிஷ்க கவிந்து 76’
>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<