வெற்றி எதுவுமின்றி தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை இளையோர் மகளிர் அணி

264

பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் 19 வயதின்கீழ் பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன கிண்ண (SAFF சம்பியன்ஷிப்) தொடரில் இலங்கை அணி தாம் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

இம்மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகி 22ஆம் திகதி வரை நடைபெறும் இந்த தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமையுடன் (19) நிறைவடைந்துள்ளன.

இலங்கை 19 வயதின்கீ்ழ் மகளிர் கால்பந்து குழாத்தில் நான்கு யாழ் வீராங்கனைகள்

இதில் இலங்கை 19 வயதின்கீழ் வீராங்கனைகள் தொடரின் ஆரம்ப நாளான கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற தமது முதல் போட்டியில் பூட்டான் அணியினை எதிர்கொண்டனர். குறித்த போட்டியில் 5-0 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை அணி தோல்வியடைந்தது.

தொடர்ந்து 13ஆம் திகதி இந்திய இளம் வீராங்கனைகளுடன் மோதிய இலங்கை அணியினர் போட்டி நிறைவில் 5-0 என தோல்வி கண்டிருந்தனர்.

அதன் பின்னர் 15ஆம் திகதி நேபாளம் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியிலும் சிறந்த திறமையினை வெளிப்படுத்த தவறிய இலங்கை அணி 6-0 என தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில் தொடரில் பலம் கொண்ட அணியாகப் பார்க்கப்படும் பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணியை தமது இறுதி லீக் போட்டியில் 19ஆம் திகதி இலங்கை இளையோர் மகளிர் எதிர்கொண்டனர்.

இந்தப் போட்டியில் முதல் பாதியில் 4 கோல்களையும், இரண்டாம் பாதியில் 8 கோல்களையும் எதிரணிக்கு விட்டுக்கொடுத்த இலங்கை அணி போட்டி நிறைவில் 12-0 என மிக மோசமான ஒரு தோல்வியை சந்தித்தது.

ரெட் ஸ்டாரை வீழ்த்திய ரினௌன்; அப் கண்ட்ரி லயன்சிற்கு இறுதி நேர வெற்றி

எனவே, இந்த தொடர் முழுவதும் எந்தவொரு கோலையும் பதிவு செய்யாத இலங்கை இளையோர் மகளிர் அணியினர் எதிரணிகளுக்கு மொத்தமாக 28 கோல்களை விட்டுக் கொடுத்திருந்தனர்.

எனவே, தமது 4 போட்டிகளின் நிறைவில் எந்தவொரு வெற்றியும் இன்றி இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேற, இம்முறை 19 வயதின்கீழ் பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன கிண்ண (SAFF சம்பியன்ஷிப்) தொடரின் இறுதிப் போட்டிக்கு போட்டிகளை நடத்தும் பங்களாதேஷ் 19 வயதின்கீழ் மற்றும் இந்திய 19 வயதின்கீழ் மகளிர் அணிகள் தெரிவாகியுள்ளன.

இறுதிப் போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி, எற்கனவே லீக் போட்டிகள் அனைத்தும் இடம்பெற்ற டாக்காவில் உள்ள முஸ்தபா கமல் அரங்கில் இடம்பெறும்.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<