இலகு வெற்றியுடன் சுபர் லீக்கை முடித்த டிபெண்டர்ஸ், அப்கண்ட்ரி லயன்ஸ்

Super League 2021

308
Super League 2021 week 9

சுபர் லீக் கால்பந்து தொடரின் இறுதி வாரத்திற்கான (ஒன்பதாவது வாரம்) மூன்று போட்டிகள் திங்கட்கிழமை (10) இடம்பெற்றன. குறித்த போட்டிகளில் ரினௌன் விளையாட்டுக் கழகம், டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் மற்றும் அப்கண்ட்ரி லயன்ஸ் கால்பந்து கழகங்கள் வெற்றி பெற்றன.

டிபெண்டர்ஸ் கா. எதிர் நியூ யங்ஸ் கா.

குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் கோலை நியூ யங்ஸ் வீரர்கள் பெற்றாலும் முதல் பாதி நிறைவில் 2-1 என டிபெண்டர்ஸ் வீரர்கள் முன்னிலை பெற்றனர்.

எனினும், இரண்டாம் பாதியில் டிபெண்டர்ஸ் வீரர்கள் அபாரமாக ஆடி 4 மேலதிக கோல்களைப் பெற்றனர். இதில் சிரேஷ்ட வீரர் மொஹமட் இஸ்ஸடீன் ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார். இது இந்த தொடரில் டிபெண்டர்ஸ் அணி வீரர் ஒருவர் பதிவு செய்த முதல் ஹெட்ரிக்காக பதிவானது. டிபெண்டர்ஸ் அணிக்காக இளம் வீரர் ரிப்கான் இரண்டு கோல்களையும் பெற, ஓன் கோல் முறையில் பெர்னாண்டோ ஒரு கோலைப் பெற்றுக் கொடுத்தார். நியூ யங்ஸ் அணிக்கான கோலை முஷிகான் பெற்றுக்கொடுத்தார்.

எனவே, போட்டி நிறைவில் 6-1 என்ற கோல்கள் கணக்கில் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் இலகுவாக வெற்றி பெற்றது.

முழு நேரம்: டிபெண்டர்ஸ் கா. 6 – 1 நியூ யங்ஸ் கா.

கோல் பெற்றவர்கள்       

  • டிபெண்டர்ஸ் கா. – மொஹமட் இஸ்ஸடீன் 27’ 64’ & 86’, WAGC பெர்னாண்டோ 45+2’ (OG), மொஹமட் ரிப்கான் 84’ & 89’
  • நியூ யங்ஸ் கா.  – முஷிகான் 22’

ரினௌன் வி. எதிர் ரட்னம் வி.

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் திமுது பிரியதர்ஷவும், இரண்டாவது பாதியில் ஜொப் மைக்கலும் ரினௌன் அணிக்கான கோல்களைப் பெற, ரட்னம் அணிக்காக டென்சொ இனெச் 53ஆவது நிமிடத்திலும் கோலைப் பெற்றார்.

எனவே, போட்டி நிறைவில் 2-1 என தோல்வியடைந்த ரட்னம் விளையாட்டுக் கழகம் சுபர் லீக் தொடரை ஒரு வெற்றியையும் பெறாமல் நிறைவு செய்துகொண்டது. இந்த வெற்றி ரினௌன் அணி பதிவு செய்த ஐந்தாவது வெற்றியாகும்.

முழு நேரம்: ரினௌன் வி. 2- 1 ரட்னம் வி.

கோல் பெற்றவர்கள்

  • ரினௌன் வி. திமுது பிரியதர்ஷ 31’, ஜொப் மைக்கல் 74’
  • ரட்னம் வி.க – டென்சொ இனெச் 53’

ரெட் ஸ்டார் கா.க எதிர் அப்கண்ட்ரி லயன்ஸ் கா.க

சுகததாஸ அரங்கில் திங்கட்கிழமை இரண்டாவது ஆட்டமாக இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பமாகிய இரண்டாவது நிமிடத்திலேயே அப்கண்ட்ரி லயன்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்த வசீம் ராசிக், தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் இரண்டு கோல்களைப் பெற்று தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.

எனினும், முதல் பாதியில் ரெட் ஸ்டார் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவ்வணியின் ரஹ்மான் வெளியில் அடித்து வீணடித்தார்.

எனவே, மேலதிக கோல்கள் எதுவும் பெறப்படாத இந்தப் போட்டியின் நிறைவில் அப்கண்ட்ரி லயன்ஸ் வீரர்கள் 3-0 என்ற கோல்கள் கணக்கில் இலகு வெற்றியைப் பெற்றனர்.

முழு நேரம்: ரெட் ஸ்டார் கா.க 0 – 3 அப்கண்ட்ரி லயன்ஸ் கா.க

கோல் பெற்றவர்கள்

  • அப்கண்ட்ரி லயன்ஸ் கா.க – வசீம் ராசிக் 2’ 52’ & 60’

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<