சிங்கப்பூர் பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு 3 தங்கம்

Singapore Weightlifting International 2022

74
Sri Lankan Weightlifters shine in Singapore
 

சிங்கப்பூரில் தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச பளுதூக்கல் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையின் ஸ்ரீமாலி சமரகோன், இந்திக திஸாநாயக்க மற்றும் சதுரங்க லக்மால் ஆகிய வீரர்கள் தங்கப் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

எதிர்வரும் ஜூலை மாதம் இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு தகுதியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச பளுதூக்குதல் சம்பியன்ஷிப் தொடர் நேற்று (25) சிங்கப்பூரில் ஆரம்பமானது.

பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான கடைசி தகுதிகாண் போட்டியாக அமைந்த இந்த சம்பயின்ஷிப் தொடரில் இலங்கையிலிருந்து 17 வீர வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதன்படி, போட்டிகளின் முதல் நாளான நேற்று (25) பெண்களுக்கான 49 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்கேற்ற ஸ்ரீமாலி சமரகோன் ஸ்னெட்ச் முறையில் 65 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 86 கிலோ எடையையும் என மொத்தமாக 151 கிலோ கிராம் எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் பேர்மிங்ஹம் பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தகுதியை அவர் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குகொண்ட 21 வயதான ஸ்ரீமாலி, பெண்களுக்கான 45 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஸ்ரீமாலியுடன் குறித்த போட்டிப் பிரிவில் பங்கேற்றிருந்த மற்றொரு இலங்கை வீராங்கனையான தினூஷா ஹன்சனி கோமஸ் ஸ்னெட்ச் முறையில் ஆரம்ப எடையான 63 கிலோ கிராம் எடையை தூக்குவதற்கு எடுத்த மூன்று முயற்சிகளிலும் தோல்வியைந்து வெளியேறினார்.

இதனிடையே, ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்கேற்ற இலங்கையின் திலன்க இசுரு குமார மொத்தமாக 238 கிலோ கிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்த நிலையில், போட்டித் தொடரின் இரண்டாவது இன்று (26) இலங்கை அணி மேலும் 2 தங்கப் பதக்கங்களை சுவீகரித்தது.

இதில் இலங்கையின் நட்சத்திர பளுதூக்கல் வீரரான இந்திக திஸாநாயக்க, ஆண்களுக்கான 73 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்டதுடன், ஸ்னெட்ச் முறையில் 128 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 150 கிலோ எடையையும் என மொத்தமாக 278 கிலோ கிராம் எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 74 கிலோகிராம் எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திக திஸாநாயக்க வெண்கலப் பதக்கம் சுவீகரித்தார்.

இதனிடையே, ஆண்களுக்கான 67 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்குகொண்ட சதுரங்க லக்மால், ஸ்னெட்ச் முறையில் 118 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 150 கிலோ எடையையும் என மொத்தமாக 268 கிலோ கிராம் எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.

எனவே, தங்கப் பதக்கங்களை வென்ற இந்திக திஸாநாயக்க மற்றும் சதுரங்க லக்மால் ஆகிய இருவரும் இந்த ஆண்டு பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்தனர்.

இதேவேளை, ஆண்களுக்கான 73 கிலோ கிராம் எடைப்பிரிவில் பங்கேற்ற சுதேஷ் பீரிஸ், வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதில் ஸ்னெட்ச் முறையில் 118 கிலோ கிராம் எடையும், க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 151 கிலோ கிராம் எடையும் என மொத்தமாக 269 கிலோ கிராம் எடையை அவர் தூக்கி இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டார்.

எனவே, சிங்கப்பூர் சர்வதேச பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி இதுவரை 3 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தமாக 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<