மேற்கிந்திய தீவுகள் அணியின் சவால் எப்படி இருக்கும்?

220

உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் மோதும் சுபர் சிக்ஸ் மோதல் நாளை (07) ஹராரே நகரில் ஆரம்பமாகின்றது. 

களநிலவரங்கள்

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான மோதல் உலகக் கிணணத் தகுதிகாண் சுற்றில் நடைபெறும் இறுதி சுபர் சிக்ஸ் போட்டியாக அமைகின்றது.

இந்தப் போட்டியில் ஆடும் மேற்கிந்திய தீவுகள் ஏற்கனவே உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியிருப்பதோடு, இலங்கை இந்த தகுதிகாண் தொடரின் மூலம் உலகக் கிண்ணத் தொடரிற்கு தெரிவான முதல் அணியாக மாறியிருக்கின்றது.

மீண்டும் நாட்டுக்கு அனுப்பப்பட்ட மே.தீவுகளின் முன்னணி வீரர்கள்

எனவே இலங்கை அணிக்கு மேற்கிந்திய தீவுகள் உடனான போட்டி அழுத்தங்கள் குறைந்த ஒரு பயிற்சி ஆட்டம் போல அமைகின்றது.

கடந்த காலம்

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரண்டு அணிகளும் மோதிய கடந்த கால ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் 31 வெற்றிகளையும், இலங்கை 29 வெற்றிகளையும் பதிவு செய்திருக்க 03 போட்டிகள் முடிவுகள் இன்றி கைவிடப்பட்டிருக்கின்றன.

இந்த தரவுகள் மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த காலங்களில் ஒருநாள் போட்டிகளில் சிறு ஆதிக்கத்தை வெளிப்படுத்தியதனை காட்டுகின்ற போதும், இலங்கை அணியே மேற்கிந்திய தீவுகள் மோதலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணியாக உள்ளது.

இலங்கை அணி

உலகக் கிண்ணத் தொடருக்கு ஏற்கனவே தெரிவாகியதன் காரணமாக அதிக சுதந்திரங்கள் உடன் இலங்கை மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளவிருக்கின்றது.

அதேவேளை தங்களது துடுப்பாட்டவீரர்களுக்கு, பந்துவீச்சாளர்களுக்கு பரிசோதனைகளை செய்வதற்கான மற்றுமொரு வாய்ப்பு இலங்கை வீரர்களுக்கு கிடைத்திருக்கின்றது. குறிப்பாக தடுமாறி வரும் இலங்கையின் முன்வரிசை துடுப்பாட்டவீரர்கள் திட்டங்களை மீண்டும் அமைத்துக் கொள்ள மற்றுமொரு வாய்ப்பு கிட்டியிருக்கின்றது.

இதேநேரம் பந்துவீச்சாளர்களாக அணிக்கு மகீஷ் தீக்ஷன, டில்சான் மதுசங்க ஆகியோர் இலங்கை அணிக்கு பலம் வழங்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்த இரண்டு வீரர்களும் இறுதியாக ஜிம்பாப்வே அணியுடனான போட்டியில் வெளிப்படுத்திய பந்துவீச்சே அவர்களுக்கு எதிராக இலங்கை இலகு வெற்றியினைப் பதிவு செய்ய காரணமாக அமைந்தது. எனவே அவர்களுக்கு திறமைகளை பரிசோதிக்க மற்றுமொரு வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை இலங்கை அணி நாளைய மேற்கிந்திய தீவுகள் மோதலில் மாற்றங்களை மேற்கொள்ளாது என நம்பப்படுகின்றது. அத்துடன் இறுதியாக தாம் விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அந்த வெற்றி ஓட்டத்தை நாளையும் தொடரும் என எதிர்பாரக்கப்படுகின்றது.

இலங்கை எதிர்பார்க்கை குழாம்

பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, டில்சான் மதுசங்க, மதீஷ பத்திரன

மேற்கிந்திய தீவுகள்

இந்த தகுதிகாண் தொடரில் இலங்கைக்கு அதிக அழுத்தங்களை கொடுக்க கூடிய அணிகளில் ஒன்றாக மேற்கிந்திய தீவுகள் காணப்பட்டிருந்தது. எனினும் தொடரில் இருந்து அவர்கள் தொடர் தோல்விகளுடன் வெளியேறி இருப்பது மேற்கிந்திய தீவுகள்  கிரிக்கெட் வீரர்களுக்கு நம்பிக்கையினை சீர்குலைத்திருக்கின்றது. மேற்கிந்திய தீவுகள் வரலாற்றில் முதன் முறையாக ஒருநாள் உலக உலகக் கிண்ணம் ஒன்றை விளையாடாமல் போனது இதுவே முதல் தடவையாகும்.

இரண்டு தடவைகள் ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியினர் கடந்த ஆண்டு (2022) நிறைவுக்கு வந்த T20 உலகக் கிண்ணத்தில் நேரடியாக சுபர் 12 சுற்றுக்கு தெரிவாகும் வாய்பினையும் தவறவிட்டிருந்தனர். எனவே மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் அதன் இரசிகர்களுக்கும் அவ்வணி இரண்டு உலகக் கிண்ணத் தொடர்களில் தொடர்ச்சியாக ஆடாமல் போனது பேரிடியாக அமைகின்றது.

எனவே இப்போதிருந்தே அடுத்தடுத்து வரும் உலகக் கிண்ணத் தொடர்களுக்கு தயாராக ஆரம்பிக்க வேண்டிய மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கை வீரர்களுடனான போட்டியினை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் விடயங்களை சரி செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் குழாத்தினை நோக்கும் போது அடுத்ததாக அவர்கள் இந்திய அணியுடன் ஆடவுள்ள நிலையில் பணிச்சுமையினை கருத்திற்கொண்டு ஜேசன் ஹோல்டர், அல்ஷாரி ஜோசேப் ஆகியோர் நாட்டுக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். எனவே இந்த இரண்டு வீரர்களும் இல்லாத நிலையிலையே மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கையை நாளை எதிர்கொள்ளவிருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகள் எதிர்பார்க்கை குழாம்

பிரண்டன் கிங், ஜோன்சன் சார்ள்ஸ், கீசி கார்டி, ஷேய் ஹோப் (தலைவர்), நிகோலஸ் பூரான், கையில் மேயர்ஸ், ரொஸ்டன் சேஸ், கீமொ போல், கெவின் சின்கிளய்ர், ரொமாரியோ ஷெபார்ட், அகீல் ஹொசைன்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<