பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் ஸ்ரீமாலி

Commonwealth Weightlifting Championship - 2021

180

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 45 கிலோகிராம் எடைப் பிரிவில் இலங்கை வீராங்கனை ஸ்ரீமாலி சமரகோன் தங்கப் பதக்கம் வென்றார்

இதனிடையே, ஆண்களுக்கான 61 கிலோகிராம் எடைப் பிரிவில் இலங்கையின் திலங்க பலகசிங்ஹ வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

உலக பளுதூக்கல் சம்பியன்ஷிப் மற்றும் பொதுநலவாய பளுதூக்கல் ஆகிய தொடர்கள் உஸ்பெகிஸ்தானின் தஸ்கென்ட் நகரில் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகியது. இம்முறை போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், போட்டித் தொடரின் இரண்டாவது நாளான நேற்று (08) நடைபெற்ற பெண்களுக்கான 45 கிலோ எடைப் பிரவில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனை ஸ்ரீமாலி சமரகோன், ஸ்னெட்ச் முறையில் 58 கிலோகிராம் எடையும் க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 78 கிலோகிராம் எடையும் என மொத்தமாக 136 கிலோகிராம் எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.

>>இலங்கை பளுதூக்கல் அணியில் இடம்பிடித்தார் ஆர்ஷிகா

இதன்மூலம், ஸ்ரீமாலி சமரகோன் அடுத்தாண்டு இங்கிலாந்தின் பேர்மிங்ஹம்மில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் போட்டியிடுவதற்கு நேரடி தகுதியை பெற்றுக்கொண்டார்.

இறுதியாக 2019இல் நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், 2015 பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். அத்துடன், 2016இல் நடைபெற்ற இளையோர் உலக பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில் 14ஆவது இடத்தை அவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஆண்களுக்கான 61 கிலோகிராம் எடைப்பிரிவில் பங்கேற்ற திலங்க பலகசிங்ஹ, வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதில் ஸ்னெட்ச் முறையில் 116 கிலோகிராம் எடையும், க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 145 கிலோகிராம் எடையும் என மொத்தமாக 261 கிலோகிராம் எடையை அவர் தூக்கி இந்த வெற்றியைப் பெற்றுக்கொண்டார்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<