பாபரும், ரிஸ்வானும் தங்களது கவனத்தினை அதிகரிக்க வேண்டும் – மொஹமட் ஹபீஸ்

53

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மொஹமட் ஹபீஸ் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களான பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் ஓட்டக் குவிப்பிற்கான தங்களது கவனத்தினை அதிகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

T20 உலகக் கிண்ணத்தில் ஆட முன்னர் பாகிஸ்தான் 7 போட்டிகள் கொண்ட T20I தொடரில் இங்கிலாந்துடன் ஆடவுள்ளது. இந்த T20 தொடர் நாளை (20) கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இந்த T20I தொடரின் முன்னர் உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட மொஹமட் ஹபீஸ், ஓட்டக் குவிப்புக்கான தாகத்துடன் மொஹமட் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் காணப்பட வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றார்.

“இதனை முன்னரும் நான் குறிப்பிட்டுள்ளேன். பாபரும், ரிஸ்வானும் பாகிஸ்தானில் இல.01 இல் உள்ள துடுப்பாட்ட ஜோடியாக காணப்படுகின்றனர். அவர்கள் பாகிஸ்தானின் கிரிக்கெட் அணி வெற்றி பெறுவதற்கும், வளர்வதற்கும் உதவியிருக்கின்றனர். இந்த வீரர்கள் இருவரும் முன்னேற்ற வேண்டிய விடயம் ஒன்று என்றால் அவர்கள் ஓட்டக்குவிப்பிற்கான கவனத்தினை (Intent) முன்னேற்ற வேண்டும்.” என மொஹமட் ஹபீஸ் குறிப்பிட்டார்.

ஓட்டக்குவிப்பு தொடர்பிலான கவனம் சரியாக இருப்பது போட்டியில் மிகப் பெரிய திருப்பங்களை ஏற்படுத்த காரணமாக இருக்கும் என தான் நம்புவதாகவும் ஹபீஸ் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேநேரம் T20 சர்வதேச போட்டிகளில் தடுமாறி வரும் பாகிஸ்தானின் மத்திய வரிசை துடுப்பாட்டம் குறித்தும் கருத்து வெளியிட்ட மொஹமட்

ஹபீஸ் முன்வரிசை துடுப்பாட்டவீரர்கள் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்துவதே, மத்திய துடுப்பாட்ட வரிசைக்கு அதிக அழுத்தம் உருவாக காரணமாகின்றது எனவும் தெரிவித்திருக்கின்றார்.

“நீங்கள் பவர் பிளே இன் முதல் ஆறு ஓவர்களையும் உபயோகம் செய்த பின்னர், எப்படி முதல் 10 ஓவர்களில் 60-65 ஓட்டங்களை மாத்திரமே உங்களால் பெற முடிகிறது. இது சவாலான மொத்த ஓட்டங்களை (Challenging Total) பெற மத்திய வரிசை துடுப்பாட்டவீரர்களுக்கு ஓவருக்கு 12 ஓட்டங்களை பெற வேண்டிய அழுத்த நிலையினை தோற்றுவிக்கின்றது. இது உண்மையில் ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை.” என ஹபீஸ் குறிப்பிட்டார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<