இலங்கை அணி தென்னாபிரிக்க அணியிடம் பல்லேகலையில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற போட்டியில் சந்தித்த தோல்வியானது அந்த அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் 11 ஆவது தோல்வியாகும். இதே பல்லேகலை மைதானத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டே இலங்கை அணி தென்னாபிரிக்காவை ஒருநாள் போட்டி ஒன்றில் கடைசியாக வென்றது.

அதேபோன்று இலங்கை அணி தென்னாபிரிக்க அணியிடம் ஒருநாள் தொடர் ஒன்றில் தொடர்ச்சியாக தோல்வியை சந்திப்பது இது இரண்டாவது முறையாக உள்ளது.   

அறிமுக வீரரின் சதத்துடன் ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்கா

இலங்கை அணி கடந்த இரண்டு ஆண்டுகளில் 47 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 33 போட்டிகளில் தோற்று 12 போட்டிகளில் மாத்திரமே வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனஞ்சய டி சில்வா தனிப்பட்ட சாதனை

இலங்கை அணி நெருக்கடியில் இருந்தபோது 7 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தனஞ்சய டி சில்வா மற்றும் அகில தனஞ்சய 95 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டு நம்பிக்கை தந்தனர். இது 7 ஆவது விக்கெட்டுக்கு இலங்கை அணி பெற்ற 5 ஆவது அதிகூடிய ஓட்டங்களாகும்.

இலங்கை அணி 7 ஆவது விக்கெட்டுக்கு 3 தடவைகள் நூறு ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்றிருப்பதோடு 2005 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தம்புள்ளையில் நடைபெற்ற போட்டியில் உபுல் சந்தன மற்றும் மஹேல ஜயவர்தன இணைந்து பெற்ற பிரிக்கப்படாத 126 ஓட்ட இணைப்பாட்டமே அதிகமாகும்.

இதன்போது தனஞ்சய டி சில்வா 66 பந்துகளில் அதிரடியாக பெற்ற 84 ஓட்டங்களும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவரின் அதிகூடிய ஓட்டங்களாகும். இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு ஹராரேயில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆட்டமிழக்காது பெற்ற 78 ஓட்டங்களே அதிகூடிய ஓட்டங்களாக இருந்தது.      

மறுபுறம் அகில தனஞ்சய பெற்ற 37 ஓட்டங்கள், ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்ற இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களாகும்.      

கன்னிப் போட்டியில் அதிவேக சதம்

தென்னாபிரிக்க அணிக்கு முதல் வரிசையில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய 28 வயதுடைய ரீஸா ஹென்ட்ரிக்ஸின் கன்னி ஒருநாள் சர்வதேச போட்டி இதுவாகும். இதன் மூலம் அவர் தென்னாபிரிக்க அணியின் 127 ஆவது ஒருநாள் வீரராக பதிவானார்.

இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வேகமாக துடுப்பெடுத்தாடிய அவர் 35 ஆவது ஓவரில் அடுத்தடுத்து பௌண்டரிகளை விளாசி 87 பந்துகளில் சதம் குவித்தார். அதாவது தனது கன்னி ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் பெற்றவராக ஹென்ட்ரிக்ஸ் புதிய சாதனை படைத்தார்.

அதேபோன்று தனது கன்னி ஒருநாள் போட்டியில் சதம் பெற்ற தென்னாபிரிக்காவின் மூன்றாவது வீரராகவும் சர்வதேச அரங்கில் 14 ஆவது வீரராகவும் ஹென்ட்ரிக்ஸ் இடம்பெற்றார். இதற்கு முன்னர் தென்னாபிரிக்க அணி சார்பில் 2010 இல் கொலின் இன்கிராம் மற்றும் 2017 இல் டெம்பா பவுமா ஆகியோர் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் சதம் பெற்றனர்.

போராடித் தோல்வியை தவிர்த்த இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு தொடர் வெற்றி

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கடைசியாக கன்னிப் போட்டியில் சதம்பெற்ற 12 வீரர்களில் 5 பேர் இலங்கைக்கு எதிராகவே அந்த சதத்தை பதிவு செய்தனர்.    

இலங்கை மண்ணில் அதிக ஓட்டங்கள்

தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி அதிரடியாக பெற்ற 363 ஓட்டங்கள் அந்த அணி இலங்கை மண்ணில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும். இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை மைதானத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து பெற்ற 339 ஓட்டங்களே அதிகமாக இருந்தது. அதேபோன்று ஆசிய மண்ணில் தென்னாபிரிக்காவின் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தென்னாபிரிக்க அணி வேறு எந்த அணியை விடவும் 27 தடவைகள் இன்னிங்ஸில் 350 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுள்ளது. எனினும் இலங்கை அணியால் ஒருநாள் சர்வதேச போட்டியில் 7 தடவைகள் மாத்திரமே 350 ஓட்டங்களை தாண்ட முடிந்துள்ளது. எனினும் இலங்கை அணி 16 போட்டிகளில் எதிரணிக்கு இன்னிங்ஸ் ஒன்றில் 350 இற்கும் அதிகமான ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<