யார் ஆட்சிக்கு வந்தாலும் விளையாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் – ஹரீன் பெர்னாண்டோ

108

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக யார் ஆட்சிக்கு வந்தாலும் இன, மத, மொழி வேறுபாடின்றி இந்நாட்டின் விளைளயாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய முன்வர வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். 

அத்துடன், இலங்கையின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக தற்போதைய வேலைத் திட்டங்களை காட்டிலும் இன்னும் பல வேலைத் திட்டங்களை முன்னெடுப்பார்கள் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

35 தங்கப் பதக்கங்களை குறிவைத்து நேபாளம் செல்லும் இலங்கை அணி

தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தினால்….

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்துகின்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்று நேற்று (18) விளையாட்டுத்துறை அமைச்சின் மினி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களில் பதவிக்கு யார் வந்தாலும் விளையாட்டுத்துறையின் மேம்பாட்டை முக்கிய விடயமாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். 

இன்று உலகில் நவீன தொழில்நுட்பத்துடன் தான் விளையாட்டுத்துறை முன்னேற்றம் கண்டு வருகிறது. எனவே அந்த தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இருக்கின்றதா என்பது தான் மிகப் பெரிய பிரச்சினை.

நான் அரசியல் கோபக்காரன் அல்ல. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இந்நாட்டில் இரண்டு மைதானங்களாவது நிர்மானிக்கப்பட்டது. ஆனால் ஒருசில ஆட்சியின் போதே அவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெறவில்லை. 

குறிப்பாக பிரேமதாஸவின் காலத்தில் இந்நாட்டின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நாங்கள் தான் மெல்ர்பேன் கிரிக்கெட் மைதானத்துக்குப் பிறகு உலகின் இரண்டாவது பகல் – இரவு கிரிக்கெட் போட்டியை நடாத்துகின்ற ஆர். பிரேமதாஸ மைதானத்தை நிர்மானித்தோம். அதன் பிறகு நாங்கள் எங்கு சிக்கிக் கொண்டோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். 

சுகததாஸ விளையாட்டரங்கானது இலங்கைக்குத் தேவையான ஒரு அரங்காக உள்ளது. ஆனால் அங்கு பல வருடங்களாக நிர்வாகச் சிக்கல்கள் இடம்பெற்று வருகின்றன. அங்குள்ள நிர்வாக முறைமைகள் தவறு, பணம் பெற்றுக் கொள்கின்ற முறை தவறு என பல குளறுபடிகள் அங்கு காணப்பட்டன. 

அதிலும் குறிப்பாக நீங்கள் சுகததாஸ அரங்கின் நீச்சல் தடாகத்தை சென்று அங்குள்ள வீரர்கள் உடை மாற்றும் அறையைப் பார்த்தால் தெரியும் பல வருடங்களாக மீள் திருத்தம் செய்யப்பட்டாமல் கவனிப்பாரற்று காணப்படுகின்றது.

அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் விளையாட்டுத் தொகுதிகள் விளையாட்டுத்துறை அமைச்சினால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த மைதானங்கள் உரிய முறையில் நிர்வகிக்கப்படாத காரணத்தால் தான் அதை வீரர்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இலங்கை மெய்வல்லுனர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இலங்கை கிரிக்கெட்

இம்முறை நடைபெறவுள்ள தேசிய…..

எனவே, இந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ள நபர் விளையாட்டுத்துறை மீது அதிக அக்கறை கொண்டு, அதன் வளர்ச்சிக்கு உதவுகின்ற ஒரு நபராக இருப்பதை மக்கள் அவதானத்துடன் தேர்வு செய்வார்கள் என நான் நம்புகிறேன் என்றார். 

அத்துடன், விளையாட்டுத்துறையின் மேம்பாட்டுக்குத் தேவையான நிதியை முழு அளவில் ஒதுக்கிக் கொடுக்கத் தவறினால் இந்நாட்டில் கிரிக்கெட் மாத்திரம் தான் இருக்கும். ஏனைய விளையாட்டுக்களின் தரம் பின்தங்கிய நிலையில் காணப்படும்.

இன்று பார்த்தால் கிரிக்கெட் வீரர்கள் மாத்திரம் தான் சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், மற்றைய விளையாட்டுக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. உண்மையில் வீரர்களை உரிய முறையில் பராமரிக்க, அவர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்ற ஒரு சூழல் ஏற்பட வேண்டும். முன்னைய காலங்களில் அவ்வாறான ஒரு முறையை காணப்பட்டது. தற்போது அது இல்லாமல் போய்விட்டது. 

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை இளையோர் குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் சென்று இளையோர் ஒருநாள்…..

எனவே சர்வதேசப் போட்டிகளுக்கு சென்று வருகின்ற வீரர்களிடம் ஏன் பதக்கங்களை எடுக்கவில்லை என குறைசொல்லாமல் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும். இலங்கையில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். எனவே அவர்களுக்குத் தேவையான உதவியைக் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது கோரிக்கையாகும் என அவர் கூறினார். 

இதேநேரம், கிரிக்கெட் விளையாட்டை கொழும்புக்கும், அதனை அண்மித்த பகுதிகளுக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் பிற மாவட்டங்களிலும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவர் குறிப்பிட்டார். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<