இந்தியாவின் சவாலை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

Asia Cup 2023

1051
Asia Cup 2023

இலங்கை – இந்திய அணிகள் மோதும் ஆசியக் கிண்ணத் தொடரின் சுபர் 4 மோதல் செவ்வாய்க்கிழமை (12) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

>>ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

முன்னோட்டம்

ஆசியக் கிண்ணத் தொடரின் இரண்டு ஜாம்பவான் அணிகளாக இலங்கையும், இந்தியாவும் காணப்படுகின்றன. இரண்டு அணிகளில் தொடரின் நடப்புச் சம்பியன்களாக இருக்கும் இலங்கை அண்மையில் இந்திய அணியுடன் ஆடிய ஒருநாள் போட்டிகளில் சிறந்த பதிவுகளைக் காட்டவில்லை.

குறிப்பாக இலங்கை – இந்திய அணிகள் இறுதியாக விளையாடிய ஒருநாள் தொடரில் இலங்கை அணி தமது ஒருநாள் போட்டிகளில் தமது மிக மோசமான தோல்வியினைப் பதிவு செய்திருந்தது. எனினும் விடயங்கள் தற்போது மாறியிருக்கின்றன. தொடர் வெற்றிகள் மூலம் இலங்கை கிரிக்கெட் அணியின் நம்பிக்கை அதிகரித்திருக்கின்றது.

மறுமுனையில் சூழ்நிலைகள் எவ்வாறு இருந்த போதும் அதனை முகம்கொடுத்து எதிரணிக்கு சவால் கொடுக்கும் அணிகளில் ஒன்றாக இந்தியா காணப்படுகின்றது. ஆசியக் கிண்ணத் தொடரினை அதிக தடவைகள் வென்ற இந்திய அணி தொடரை வெல்ல எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றாகவும் உள்ளது. இதேநேரம் இலங்கை அணியுடனான போட்டியில் வெற்றிக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றாகவும் இந்தியா காணப்படுகின்றது. எனவே இரு அணிகள் தொடர்பிலான எதிர்பார்ப்புக்கள் தற்போது அதிகரித்திருக்க இலங்கை – இந்தியா அணிகள் இடையிலான போட்டியானது நடைபெறவிருக்கின்றது.

>>ஆசியக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் திடீர் விலகல்

இலங்கை அணி

இலங்கை அணியைப் பொறுத்தவரை ஆசியக் கிண்ணத் தொடரில் தோல்வியடையாத அணியாக முன்னேறுகின்றது. இலங்கை ஆசியக் கிண்ணத் தொடரில் இதற்கு முன்னர் சந்தித்த ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்றவை ஒப்பிட்டளவில் இந்தியாவை விட சவால் குறைந்த அணிகளாகவே காணப்பட்டிருந்தன. எனவே இலங்கை அணிக்கு மிகப் பெரும் சவால் இந்திய அணியுடனான போட்டியில் காணப்படுகின்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறையை நோக்கும் போது ஆசியக் கிண்ணத் தொடரில் மத்திய வரிசையில் ஆடும் தனன்ஞய டி சில்வா, திமுத் கருணாரட்ன ஆகியோர் இதுவரை எதிர்பார்த்த துடுப்பாட்டத்தை வழங்கியிருக்கவில்லை.

அதேவேளை கடந்த போட்டியில் பந்துவீச்சில் பிரகாசித்த அணித்தலைவர் தசுன் ஷானக்கவும் சகலதுறை நீண்ட துடுப்பாட்ட இன்னிங்ஸ்களை ஆடுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். விடயங்கள்  இவ்வாறாக மாற்றப்படும் போது இலங்கை அணிக்கு சமநிலையான ஒரு துடுப்பாட்ட வரிசை அமையும்.

பந்துவீச்சினைப் பொறுத்தவரை இலங்கை அணி முன்னணி வீரர்கள் இல்லாத போதிலும் இந்த தொடரில் சிறப்பான வேலையைச் செய்திருக்கின்றது. அது இந்திய அணியுடனான போட்டியிலும் தொடர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம் இலங்கை அணி இந்திய மோதலில் மாற்றங்களின்றி ஆடும் எனவும் நம்பப்படுகின்றது.

இலங்கை எதிர்பார்ப்பு XI

பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, மகீஷ் தீக்ஷன, மதீஷ பதிரன, கசுன் ராஜித

இந்தியா

இந்திய அணி ஆசியக் கிண்ணத்தில் பாகிஸ்தானுடன் ஆடிய போட்டி முதல் போட்டி மழையின் காரணமாக முதல் இன்னிங்ஸ் உடன் கைவிடப்பட்டது. இதன் பின்னர் சுபர் 4 சுற்றில் பாகிஸ்தானுடன் ஆடிய போட்டியிலும் மழையின் குறுக்கீடு காணப்பட்டிருந்தது. நேபாளத்துடன் ஆடிய போட்டியிலும் மழையின் தாக்கம் இருந்தது. எனவே இந்திய அணிக்கு மழையின் தாக்கம் இருந்ததன் காரணமாக இதுவரை முழுமையாக எந்தப் போட்டியிலும் தங்களது திட்டங்களை செயற்படுத்துவதற்கான வாய்ப்பு கிட்டியிருக்கவில்லை.

இதேநேரம் பாகிஸ்தான் அணியுடனான போட்டி மேலதிக நாளில் நடாத்தப்பட்டதன் காரணமாக இந்தியா ஓய்வின்றிய நிலையில் இலங்கையை எதிர்த்தாட வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று உருவாகியிருக்கின்றது. எனவே அழுத்தங்களுக்கு மத்தியில் திட்டங்களை சரியாக வகுப்பது இந்திய கிரிக்கெட் அணிக்கு முக்கியமானதாக காணப்படுகின்றது.

>>சாதனை வெற்றியுடன் பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் அணி

இந்திய அணியினைப் பொறுத்தவரை இந்த ஆசியக் கிண்ணத் தொடரில் மிகப் பலமான துடுப்பாட்ட வரிசையுடன் காணப்படுகின்றனர். அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இலங்கையுடன் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பான பதிவினை வெளிக்காட்டியிருக்கின்றார். இந்திய அணித்தலைவர் ரோஹிட் சர்மாவின் துடுப்பாட்ட சராசரி இலங்கை அணியுடனான ஒருநாள் போட்டிகளில் 46.33 ஆக காணப்படுவதோடு அவர் இலங்கை அணிக்கு எதிராக இரண்டு இரட்டைச் சதங்களையும் பதிவு செய்திருக்கின்றார்.

அதேவேளை அணிக்குத் திரும்பியிருக்கும் KL ராகுல், சுப்மான் கில், இஷான் கிஷான் மற்றும் ஹார்திக் பாண்டியா என இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை இன்னும் பலம் பெறுகின்றது. அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது மொஹமட் சிராஜ் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களாக காணப்பட குல்தீப் யாதவ் தன்னுடைய சுழல் மூலம் இந்திய அணிக்கு பெறுமதி சேர்க்கும் ஏனைய பந்துவீச்சாளராக அமைகின்றார். இந்திய அணியும் இலங்கை அணியினைப் போன்று மாற்றங்களின்றி நாளைய போட்டியில் களமிறங்க முடியும்.

இந்திய எதிர்பார்ப்பு XI

விராட் கோலி, ரோஹிட் சர்மா (அணித்தலைவர்), சுப்மான் கில், KL ராகுல், இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ்

மழையின் தாக்கம்

இந்தியா – பாகிஸ்தான் மோதலைப் போன்று இலங்கை அணியுடனான போட்டியிலும் மழையின் தாக்கம் இருப்பதற்கு 80% வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. எனவே இரு அணிகளும் நாணய சுழற்சியின் முடிவுகளை கருத்திற் கொண்டு விடயங்களை சரியாக தீர்மானித்துக் கொள்வது சிறப்பாக இருக்கும் என கருதப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<