LPL 2022 தொடரை ஆக்கரமித்த பந்துவீச்சாளர்கள்

Lanka Premier League 2022

179

லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் மூன்றாவது அத்தியாயம் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளது. கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (23) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய ஜப்னா கிங்ஸ் அணி சம்பியனாக மகுடம் சூடியது.

இதன்மூலம் LPL சம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக மூன்றாது தடவையாக வென்று திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி வரலாறு படைத்தது.

இதுஇவ்வாறிருக்க, LPL தொடரில் இம்முறை மொத்தம் 208 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. எனினும், எந்தவொரு பந்துவீச்சாளரும் ஹெட்ரிக் விக்கெட் எடுக்கவில்லை. ஆனால், கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் கசுன் ராஜித 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இம்முறை LPL தொடரில் சிறந்த பந்துவீச்சுப் பிரதியை பதிவு செய்தார்.

அத்துடன், 9 ஓட்டமற்ற ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டு இருந்தன. இதில் கண்டி பல்கொன்ஸ் அணியின் கார்லோஸ் பிராத்வைட் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணியின் பினுர பெர்னாண்டோ ஆகிய இருவரும் தலா 2 ஓட்டமற்ற ஓவர்களை வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இம்முறை LPL தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் 10 பந்துவீச்சாளர்களில் 7 வேகப் பந்துவீச்சாளர்களும், 3 சுழல் பந்துவீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளனர்.

மூன்றாவது முறையாக தொடர்ந்தும் LPL சம்பியனான ஜப்னா கிங்ஸ்

இதில் 7 உள்நாட்டு வீரர்களும், 3 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளதுடன் முதல் 5 இடங்களில் உள்ள 3 வீரர்கள் LPL தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தமை சிறப்பம்சமாகும். இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில் சர்வதேச T20 போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வனிந்து ஹஸரங்கவுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தி 10ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. கடந்த ஆண்டு LPL தொடரில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய வனிந்துவுக்கு அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் 9ஆவது இடத்தையே பெற்றுக் கொள்ள முடிந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த ஆண்டு LPL தொடரில் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட முதல் ஐந்து இடங்களில் இடம்பிடித்த பந்துவீச்சாளர்கள் பற்றிய தொகுப்பை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

கார்லோஸ் பிராத்வைட் (கண்டி பல்கொன்ஸ்)

இம்முறை LPL தொடரில் வனிந்து ஹஸரங்க தலைமையிலான கண்டி பல்கொன்ஸ் அணியை பிளே-ஓப் சுற்று வரை அழைத்து வருவதில் மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் கார்லோஸ் பிராத்வைட்டுக்கு முக்கிய இடம் உண்டு. இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரரும் இவர் தான்.

இம்முறை LPL தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய அவர், 6.84 என்ற சராசரியுடன் 18 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் 14 ஓட்டங்களுக்கு 4 விககெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

அதுமாத்திரமின்றி, இம்முறை LPL தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான ஊதா நிற தொப்பியையும் அவர் பெற்றுக்கொண்டார்.

கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் மற்றும் T20i போட்டிகளில் விளையாடாத 34 வயதான கார்லோஸ் பிராத்வைட், உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்ற T20 மற்றும் T10 தொடர்களில் களமிறங்கி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

நுவன் துஷார (கோல் கிளெடியேட்டர்ஸ்)

கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக விளங்கிய வேகப் பந்துவீச்சாளர் தான் நுவன் துஷார. பொடி மாலிங்க என்றழைக்கப்படுகின்ற 28 வயதுடைய வலது கை மித வேகப் பந்துவீச்சாளரான இவர், அந்த அணிக்காக முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இம்முறை LPL தொடரில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான எலிமினேட்டர் போட்டியைத் தவிர மற்றைய 8 போட்டிகளிலும் 7.44 என்ற சராசரியுடன் குறைந்தபட்சம் ஒன்றுக்கு மேற்பட்ட விக்கெட்டுகளை அவர் எடுத்தார்.

இதில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து இம்முறை போட்டித்தொடரில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் பதிவுசெய்தார்.

கடந்த ஆண்டு LPL தொடரில் 12 விக்கெட்டுகளுடன் 7ஆவது இடத்தைப் பிடித்த நுவன் துஷார, இம்முறை 9 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனவே, லசித் மாலிங்கவின் இடத்தை நிரப்ப்பக் கூடிய தகுதிகளை கொண்ட பந்துவீச்சாளராக அண்மைக்காலமாக தொடர்ந்து பிரகாசித்து வருகின்ற நுவன் துஷாரவுக்கு இலங்கை T20i அணியில் இடம்பிடித்து தொடர்ச்சியாக விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்குமா? என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.

கசுன் ராஜித (கொழும்பு ஸ்டார்ஸ்)

இலங்கையின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக அண்மைக்காலமாக ஜொலித்து வருகின்ற கசுன் ராஜித, இம்முறை LPL தொடரில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி பந்துவீச்சில் பிரகாசித்திருந்தார்.

குறிப்பாக, இம்முறை LPL தொடரில் ஆரம்பத்தில் இருந்து பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து வந்த இவர், விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் 6.30 என்ற சராசரியுடன் 3 போட்டிகளைத் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் குறைந்தபட்சம் ஒன்றுக்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை எடுத்தார்.

இதில் தம்புள்ள ஓரா அணிக்கெதிரான லீக் போட்டியில் 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்து தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவு செய்தார். அத்துடன், இம்முறை LPL தொடரில் பந்துவீச்சாளர் ஒருவரால் பெற்றுக்கொண்ட சிறந்த பந்துவீச்சுப் பிரதியும் இதுவாகும்.

அதிலும் குறிப்பாக, கண்டி பல்கொன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபையர் போட்டியில், 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கொழும்பு ஸ்டார்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தார். அத்துடன், குறித்த போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

இந்த ஆண்டு LPL தொடரில் 8 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய கசுன் ராஜித, அதிக விக்கெட்டுக்கள் எடுத்த பந்துவீச்சாளர்களில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

விஜயகாந்த் வியாஸ்காந்த் (ஜப்னா கிங்ஸ்)

தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக ஜப்னா கிங்ஸ் அணியில் இடம்பிடித்து ஒரேயொரு தமிழ் வீரராக விளையாடி வந்த விஜயகாந்த் வியாஸ்காந்த், இம்முறை LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த வீரர்களில் ஒருவர் என்றால் மிகையாகாது.

இவரது கட்டுக்கோப்பான, நெருக்கடியளிக்கும் பந்துவீச்சு ஜப்னா கிங்ஸ் அணிக்கு இம்முறை LPL தொடரில் பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தது.

அந்த அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 6.68 என்ற பந்துவீச்சு சராசரியுடன், 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் 4ஆவது இடத்தை வியாஸ்காந்த் பிடித்தார்.

அத்துடன், கண்டி பல்கொன்ஸ் அணிக்கெதிரான முதலாவது குவாலிபையர் போட்டியில் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

முன்னதாக தம்புள்ள ஓரா அணிக்கெதிரான லீக் போட்டியில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இம்முறை LPL தொடரில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

ஒட்டுமொத்தத்தில் இம்முறை LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்காக வனிந்து ஹஸரங்க விளையாடா விட்டாலும், அவரது இடத்தில் களமறங்கிய வியாஸ்காந்த், சிறந்த முறையில் பந்துவீசி எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்.

அதுமாத்திரமல்லாமல், வனிந்து ஹஸரங்க இல்லாமல் ஜப்னா கிங்ஸ் அணியால் இம்முறை சம்பியன் பட்டம் வெல்ல முடியுமா? அல்லது விக்கெட்டுகளை வீழ்த்த முடியுமா? என்ற கேள்விக்கு யாழ் மண்ணின் மைந்தன் வியாஸ்காந்த் சிறப்பாக விளையாடி தான் யார் என்று அடையாளம் காட்டியுள்ளார்.

குறிப்பாக, இறுதியாக நடைபெற்ற 2 LPL தொடர்களிலும் ஒரு சில வாய்ப்புகளே வியாஸ்காந்த்துக்கு கிடைத்தது. ஆனால் இத் தொடரில் அவருக்கு 100% வாய்ப்புகள் கிடைத்தது. அதனை அவர் சரியான முறையில் பயன்படுத்தி சாதித்துள்ளார். அதேபோல, அவரது கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் தனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்திவிட்டார்.

இதனால் இந்த வருட LPL தொடரில் வளர்ந்துவரும் அதி சிறந்த வீரருக்கான விருது யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் அணித் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்துக்கு வழங்கப்பட்டது.

பினுர பெர்னாண்டோ (ஜப்னா கிங்ஸ்)

ஜப்னா கிங்ஸ் அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக விளங்கிய வேகப் பந்துவீச்சாளர் தான் பினுர பெர்னாண்டோ. 27 வயதுடைய இடது கை மித வேகப் பந்துவீச்சாளரான பினுர, தன்னுடைய அனுபவத்தை இம்முறை LPL தொடரில் வெளிக்காட்டி அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்டார்.

இம்முறை LPL தொடரில் ஆரம்பத்தில் இருந்து பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்த வந்த இவர், அந்த அணிக்காக விளையாடிய 5 போட்டிகளிலும் 7.10 என்ற சராசரியுடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி, இம்முறை LPL தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்தைப் பிடித்தார்.

இதில் தம்புள்ள ஓரா அணிக்கெதிரான லீக் போட்டியில் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் பதிவுசெய்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் உபாதைக்குள்ளாகி உலகக் கிண்ணத்திலிருந்து பினுர வெளியேறினார். எவ்வாறாயினும், இம்முறை LPL தொடரில் களமிறங்கிய அவர், சிறப்பாக பந்துவீசி அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளமை இலங்கை அணிக்கு அவர் மீண்டும் திரும்புவார் என்பதற்கு அடையாளமாக உள்ளது.

இதேவேளை, இம்முறை LPL தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 6 முதல் 10 இடங்கள் வரை முறையே கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் நுவன் பிரதீப் (11 விக்கெட்), கண்டி பல்கொன்ஸ் அணியின் பேபியன் அலென் (10 விக்கெட்), ஜப்னா கிங்ஸ் அணியின் ஜேம்ஸ் புல்லர் (10 விக்கெட்), ஜப்னா கிங்ஸ் அணியின் மஹீஷ் தீக்ஷன (10 விக்கெட்) மற்றும் கண்டி பல்கொன்ஸ் அணியின் வனிந்து ஹஸரங்க (10 விக்கெட்) ஆகியோர் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<