டெஸ்ட் தொடரின் தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை

505

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கண்டி -பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (14) ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 221 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, குறித்த மைதானத்தில் தங்களது முதல் டெஸ்ட் வெற்றியினை பதிவுசெய்திருந்தது. அத்துடன் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றது.

இலங்கை அணியில் இருந்து விலகும் சந்திமால்: அசலங்க அணியில் இணைப்பு

நாட்டின் புதிய டெஸ்ட் மைதானமான கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வெறும் 6 டெஸ்ட் போட்டிகள் மாத்திரமே இதுவரை நடைபெற்றுள்ளன. இதில் இலங்கை ஒரு போட்டியில் வெற்றியீட்டியுள்ளதுடன், 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.  எவ்வாறாயினும் இங்கிலாந்து அணி, இந்த மைதானத்தில் தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியில் நாளை களமிறங்கவுள்ளது.

பல்லேகலை மைதானத்தில் நடைபெறவிருந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, வீரர்களுக்கான ஹோட்டல் அறை ஒதுக்கீடுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக கொழும்புக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது வீரர்களுக்கான வசதிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், போட்டியை மீண்டும் அதே மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாளைய போட்டியில் விளையாடும் இலங்கை அணியானது தங்களுடைய வழமையான அணித் தலைவரான தினேஷ் சந்திமால் இல்லாமல் களமிறங்கவுள்ளது. உபாதை காரணமாக தினேஷ் சந்திமால் இரண்டு வாரங்களுக்கு போட்டிகளில் இருந்து விலகியுள்ள நிலையில், அனுபவ வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சுரங்க லக்மால் ஏற்கனவே இலங்கை டெஸ்ட் அணிக்கு 3 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளதுடன், குறித்த மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

இதேநிலையில், தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக டெஸ்ட் குழாத்தில் புதுமுக இடதுகை துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்க இணைக்கப்பட்டுள்ளார். எனினும் நாளைய பதினொருவரில் அவர் விளைாயடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அனுபவ மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் ரொஷேன் சில்வா சந்திமாலுக்கு பதிலாக நாளைய போட்டியில் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியில் மற்றுமொரு மாற்றமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ரங்கன ஹேரத்துக்கு பதிலாக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார விளையாடவுள்ளார். அதேநேரம், காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஐசிசியின் விதிமுறையை மீறி பந்துவீசுவதாக குற்றச்சாட்டப்பட்ட அகில தனன்ஜய நாளைய போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் உத்தேச பதினொருவர்

திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, தனன்ஜய டி சில்வா, குசால் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், ரொஷேன் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, அகில தனன்ஜய, சுரங்க லக்மால் (தலைவர்), மலிந்த புஷ்பகுமார

 

இங்கிலாந்து அணியை பொருத்தவரை அவர்களுக்கு சிறந்த பெறுபேற்றைக் கொடுத்த போட்டியாக காலி டெஸ்ட் போட்டி அமைந்தது. வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 13 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்திருந்த இங்கிலாந்து அணிக்கு குறித்த வெற்றியானது புதிய தன்நம்பிக்கையை விதைத்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 8ஆவது இடத்தை தக்கவைத்து ஓய்வு பெற்ற ஹேரத்

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய டெஸ்ட் தரவரிசைப் ,,,,,,,,

முக்கியமாக புதுமுக வீரரான பென் போக்ஸ் முதல் இன்னிங்ஸில் பெற்றுக்கொண்ட சதம் மற்றும் கீடொன் ஜென்னிங்ஸ் இரண்டாவது இன்னிங்ஸில் பெற்ற அற்புதமான சதம் என்பன இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தியுள்ளதுடன் அணிக்கும் நம்பிக்கை சேர்த்துள்ளது.

அதேவேளை, இங்கிலாந்து அணியின் மொயீன் அலி, ஆதில் ரஷீட் மற்றும் ஜெக் லீச் ஆகிய முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் இலங்கை அணிக்கு கடும் சவால் கொடுக்கும் விதமும், அவர்களுக்கு மேலதிக சக்தியாகும்.

இவ்வாறு முழு பலத்துடன் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, பல்லேகலை மைதானத்தில் தாங்கள் விளையாடவுள்ள முதல் டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணிக்கு சவாலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அவ்வணியின் மாற்றங்களை பொருத்தவரை, ஜொனி பெயார்ஸ்டோவ் உபாதையிலிருந்து நீங்கி நாளைய போட்டியில் விளையாடுவதற்கான உடற்தகுதியைப் பெற்றுள்ளார். எனவே, நாளைய போட்டியில் மாற்றங்கள் இல்லாமல் இங்கிலாந்து அணி களமிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photos: Sri Lanka practice session before the 2nd Test against England

இங்கிலாந்து அணியின் உத்தேச பதினொருவர்

கீடொன் ஜென்னிங்ஸ், ரோய் பர்ன்ஸ், மொஹீன் அலி, ஜோ ரூட் (தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், பென் போகஸ், ஆதில் ரஷீட், செம் கரன், ஜெக் லீச், ஜேம்ஸ் எண்டர்சன்

ஆடுகள நிலைமை

பல்லேகலை மைதான ஆடுகளத்தை பொருத்தவரை துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு நாட்கள் குறித்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு எடுபடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

காலநிலை

காலநிலையை பொருத்தவரை, இடியுடன் கூடிய மழை போட்டிக்கு இடையில் குறுக்கிடலாம். எனினும், கடந்த இரண்டு நாட்களாக மழைக்கான அறிகுறிகள் இல்லாததால், மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<