டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 8ஆவது இடத்தை தக்கவைத்து ஓய்வு பெற்ற ஹேரத்

672

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் 8 ஆவது இடத்துடன் தனது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்துள்ளார். ரங்கன ஹேரத் ஓய்வு பெற்றதை அடுத்து தரவரிசையில் 34 ஆவது இடத்தில் இருக்கும் ஜிம்பாப்வேயின் மசகட்ஸா நீண்ட காலம் டெஸ்ட் ஆடிவரும் வீரராக மாறியிருப்பதோடு, டாய்ஜுல் இஸ்லாம் தனது சிறந்த பந்துவீச்சு தரவரிசையையும், இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணி வீரர்கள் முன்னேற்றமும் கண்டுள்ளனர். ஐ.சி.சி. புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியல் சனிக்கிழமை (10) வெளியிடப்பட்டது.

புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வரிசையில் இங்கிலாந்தின் கீட்டன் ஜென்னிங்ஸ் மற்றும் பென் போக்ஸ் அதிக முன்னேற்றம் கண்டவர்களாக உள்ளனர்.

இலங்கை அணியின் ஆட்டத்தை விமர்சித்த சந்திக ஹதுருசிங்க

இலங்கைக்கு எதிராக 211 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணிக்கு கீட்டன் ஜென்னிங்ஸ் 46 மற்றும் ஆட்டமிழக்காது 146 ஓட்டங்களை பெற்றார். அவர் 41 இடங்கள் முன்னேறி 46 ஆவது இடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற பென் போக்ஸ் 107 மற்றும் 37 ஓட்டங்களை பெற்று தரவரிசையில் 69 ஆவது இடத்தை பிடித்தார்.

துடுப்பாட்ட வரிசையில் சாம் கர்ரன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். சாம் கர்ரன் ஒன்பது இடங்கள்  முன்னேறி தனது சிறந்த தரவரிசையான 35 ஆவது இடத்தை பிடித்தார். அவர் முதல் இன்னிங்ஸில் 48 ஓட்டங்களை பெற்றார். அதே போன்று இரு இன்னிங்சுகளிலும் முறையே 7 மற்றும் 62 ஓட்டங்களை பெற்ற பென் ஸ்டோக்ஸ் மூன்று இடங்கள் முன்னேறி 28 ஆவது இடத்தைப் பிடித்தார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மொயீன் அலி மற்றும் ஆதில் ரஷீத் முன்னேற்றப் பாதையை பெற்றுள்ளனர். இலங்கையுடனான போட்டியில் 137 ஓட்டங்களுக்கு எட்டு விக்கெட்டுகளை வீழ்த்திய மொயீன் அலி நான்கு இடங்கள் முன்னேற்றம் கண்டு 27 ஆவது இடத்தை பெற்றார்.  ஆதில் ரஷீத் தனது மூன்று விக்கெட்டுகள் மூலம் மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு 41 ஆவது இடத்தை எட்டினார்.

காலி டெஸ்ட்டில் புதிய பந்துவீச்சாளர் தரவரிசையில் அதிக முன்னேற்றம் கண்டவராக தில்ருவன் பெரேரா உள்ளார். முதல் இன்னிங்ஸில் 75 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 94 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஐந்து இடங்கள் முன்னேற்றம் கண்டு முதல் 20 இடங்களுக்குள் உயர்ந்து 19 ஆவது இடத்தைப் பெற்றார்.  

இலங்கை இடதுகை சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஒரு இடம் சரிந்து டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் எட்டாவது இடத்துடன் விடைபெற்றார். அவர் முதல் இன்னிங்ஸில் 78 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்ஸில் 59 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ரங்கன ஹேரத் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வை 93 டெஸ்ட் போட்டிகளில் 433 விக்கெட்டுகளுடன் முடித்துக் கொண்டார்.  

சில்ஹட்டில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 151 ஓட்டங்களால் வெற்றி பெற்ற ஹமில்டன் மசகட்ஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியின் பல வீரர்களும் தமது திறமையான ஆட்டத்தின் மூலம் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.   

இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சந்திமால் பங்கேற்பது சந்தேகம்

இதில் ரங்கன ஹேரத்தின் ஓய்வை அடுத்து அதிக காலம் டெஸ்ட் போட்டிகளில் ஆடிக்கொண்டிருக்கும் வீரராக இடம்பெற்றுள்ள ஹமில்டன் மசகட்ஸா இரு இன்னிங்சுகளிலும் முறையே 52 மற்றும் 48 ஓட்டங்களை பெற்றதன் மூலம் 12 இடங்கள் முன்னேற்றம் கண்டு துடுப்பாட்ட வரிசையில் 34 ஆவது இடத்தைப் பிடித்தார். 88 மற்றும் 20 ஓட்டங்களைப் பெற்று போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்ற சோன் வில்லியம்ஸ் 17 இடங்கள் முன்னேற்றம் கண்டு 77 ஆவது இடத்தை பெற்றார். மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்ட வீரராக பீட்டர் மூர் உள்ளார்.  முதல் இன்னிங்ஸில் 63 ஓட்டங்கள் பெற்ற அவர் ஆறு இடங்கள் முன்னேறி 86 ஆவது இடத்தைப் பிடித்தார்.

பந்துவீச்சாளர் வரிசையில் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜார்விஸ் தனது சிறந்த தரவரிசையான 60 ஆவது இடத்தை பிடித்தார். அவர் பெற்ற மூன்று விக்கெட்டுகள் மூலம் மூன்று இடங்கள் முன்னேற்றம் கண்டார். சிகந்தர் ராசா தனது ஆறு விக்கெட்டுகள் மூலம் ஐந்து இடங்கள் முன்னேறி தனது சிறந்த தரநிலையான 70 ஆவது இடத்தைப் பிடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகள் பெற்ற மவுட்டா 81 ஆவது தரநிலையில் நுழைந்தார்.  

பங்களாதேஷ் அணியின் ஒரே ஆறுதலாக டாய்ஜுல் இஸ்லாம் ஐந்து இடங்கள் முன்னேற்றம் கண்டு 31 ஆவது இடத்தைப் பிடித்தார். இவர் ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட்டில் அவர் 108 ஓட்டங்களுக்கு 6 மற்றும் 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராட் கோஹ்லி முதலிடத்திலும் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்ஸன் முதலிடத்திலும் உள்ளனர்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<