கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவிலிருந்து வெளியேறிய பர்விஸ் மஹரூப்

270

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளருமான பர்விஸ் மஹரூப் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

தனது வர்ணனைப் பணி மற்றும் குடும்ப பொறுப்புகள் காரணமாக குறித்த குழுவின் கடமைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த முடியாத காரணத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கிரிக்கெட் தொடர்பான அனைத்து விடயங்களிலும் விளையாட்டுத் துறை அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய விளையாட்டு பேரவைக்கு ஆலோசனை வழங்குவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட்டிற்கான 5 பேர் கொண்ட தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் மஹரூப் அங்கம் வகித்தார்.

>>இலங்கை கிரிக்கெட்டில் சனத், மஹரூப்புக்கு புதிய பதவி

இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி ஆட்டக்காரருமான சனத் ஜயசூரியவும், சரித் சேனாநாயக்க, அசந்த டி மெல் மற்றும் கபில விஜேகுணவர்தன ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<