சென்னை சுபர் கிங்ஸிடம் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்!

IPL 2023

127
IPL 2023

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற தங்களுடைய மூன்றாது போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

இம்முறை IPL தொடரில் மும்பை அணியின் ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெய் ரிச்சட்சன் ஆகியோரின் உபாதைக்கு பின்னர், ஜொப்ரா ஆர்ச்சர் உபாதைக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், சென்னை அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் அவர் விளையாடவில்லை.

>>வோர்னரின் போராட்டம் வீண்; டெல்லிக்கு ஹெட்ரிக் தோல்வி

முன்னணி பந்துவீச்சாளர்களை இழந்திருந்தாலும், முழு பலத்துடனான மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட வரிசை இந்தப் போட்டியிலும் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது.

சென்னை அணியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் இசான் கிஷன் ஆகியோர் வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தாலும், சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளும் பறிகொடுக்கப்பட்டன.

இசான் கிஷன் 32 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 21 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் முதல் போட்டியை போன்று மீண்டும் தடுமாறினர். இறுதியாக டிம் டேவிட் 22 பந்துகளுக்கு 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுக்கொண்டது.

சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா மும்பை அணிக்கு அழுத்தம் கொடுத்து 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, சென்ட்னர் மற்றும் துஷார் தேசபாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டெவோன் கொன்வே ஓட்டங்களின்றி ஆட்டமிழந்த போதும், அடுத்து களமிறங்கிய அஜின்கியா ரஹானே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 19 பந்துகளில் அரைச்சதம் கடந்து வெற்றியிலக்கை இலகுவாக்க, ருதுராஜ் கைக்வாட் நிதானமாக ஆடினார்.

>>WATCH – “எனது தலைமைத்துவத்தில் டிவிசன் இரண்டிற்கு முன்னேறுவது மகிழ்ச்சி“ – ஆனந்தன் கஜன்

ரஹானே 61 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த போதும், கைக்வாட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும், சிவம் டுபே மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் முறையே 28 மற்றும் 20 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள 18.1 ஓவர்களில் சென்னை அணி வெற்றியை தமதாக்கியது. பந்துவீச்சில் பெஹ்ரென்ரொப், பியூஸ் சௌவ்லா மற்றும் குமார் கார்த்திகேயா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதேவேளை இந்தப்போட்டியில் வெற்றிபெற்ற சென்னை சுபர் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளதுடன், மும்பை இந்தியன்ஸ் அணி எந்த வெற்றிகளுமின்றி 8வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<